தமிழ், தெலுங்கு இரண்டிலும் தற்போது பிஸியான இசையமைப்பாளர் தமன் தான். அது எப்படி மனிதர் எல்லோரையும் கவர்ந்து விடுகிறாரோ தெரியவில்லை. தெலுங்கில் ஜூனியர் என்.டிஆர் படத்திற்கு இசையமைத்த கையோடு, அடுத்து மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன், வெங்கடேஷ் என முன்னணி நடிகர்களின் படங்கள் இவரது இசைக்காக க்யூவில் காத்திருக்கின்றன. இன்னொரு பக்கம் தமிழில் நேற்று இவர் இசையமைத்துள்ள ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தின் பாடல்கள் ரிலீஸாகி வரவேற்பையும் பெற்றுள்ளது.
இது தவிர லாரன்ஸின் ‘முனி-3 கங்கா’, சிம்புவின் ‘வாலு’ படங்களுக்கும் இசையமைத்து வரும் தமன் தற்போது விஜய் சேதுபதி – கிருஷ்ணா இணைந்து நடிக்கும் ‘வன்மம்’ படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இதற்குமுன் இந்தப்படத்திற்கு இசையமைக்க ஒப்ப்ந்தமானவர் ரகுநந்தன். திடீரென என்ன நடந்ததோ தெரியவில்லை இப்போது அந்த வாய்ப்பு தமனுக்கு போய்விட்டது. அதுமட்டுமல்ல நேமிசந்த் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படத்திற்கும் தமன் தான் இசையமைக்கிறார். சத்தமில்லாமல் சாதிப்பது என்பது இதுதானோ?