சினிமாவில் மது அருந்தும் மற்றும் புகைபிடிக்கும் காட்சிகள் இல்லாத படங்களே இன்று இல்லை எனலாம். ஆனால் அவற்றை பயன்படுத்துவதாக காட்சிகள் அமைக்கும்போது சிகரெட், மது குறித்த எச்சரிக்கை வாசகங்களை திரையில் குறிப்பிட்டாகவேண்டும். அப்படித்தான் இப்போது செய்தும் வருகிறார்கள்.
ஆனால் இப்போது கேரளாவில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் ஆணியவேண்டும் என்பதும் கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதும் ஸ்ட்ரிக்ட்டாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது படங்களில் இடம்பெறும் காட்சிகளில் கூட சீட் பெல்ட்டையும், ஹெல்மெட்டையும் கட்டாயம் அணியவேண்டும் என கேரள போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனரான ரிஷிராஜ் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு சிலர் இதை வரவேற்றாலும் பலர் இதை ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தில் குறிக்கிடுவதாகவே கருதுகிறார்கள். உதாரணமாக “வில்லனை ஹீரோ பைக்கில் துரத்துகிறார் என்றால் அந்தக்காட்சியின் முக்கியத்துவமே ஹீரோ காட்டும் முக எக்ஸ்பிரஷன்களில்தான் அடங்கியிருக்கிறது. அதை ஹெல்மெட் போட்டு எடுப்பது என்பது அந்த நடிகருக்குப் பதிலாக வேறு ஒரு டூப்பை வைத்து எடுப்பதற்கு சமமானது. காரணம் ஹீரோவின் முகம் தான் தெரியப்போவதில்லையே?. அப்புறம் அந்தக்காட்சி எப்படி இயல்பாக அமையும்.. எப்படி ரசிகர்களிடம் வரவேற்பை பெறும்?” என்கிறார் மலையாள இயக்குனரான அனீஸ் அன்வர். மொத்தத்தில் இந்த உத்தரவு மலையாள சினிமாவிற்கு தேவையில்லாமல் போடப்படும் ஸ்பீட் பிரேக்கர்தான் என்றுதான் படைப்பாளிகள் கருதுகிறார்கள்.