முகமூடி படத்துக்குப்பிறகு மிஸ்கின் இயக்கியுள்ள படம்தான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். இந்தப்படத்தை வரும் வெள்ளிக்கிழமை(செப்-20) ரிலீஸ் செய்வதாக அறிவித்து அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வந்தார் மிஸ்கின். ஆனால் 20ஆம் தேதி கிட்டத்தட்ட ஐந்து படங்களுக்கு குறையாமல் ரிலீஸாவதால் மிஸ்கினின் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் தனது படத்தை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு(செப்-27) தள்ளிவைத்துவிட்டார் மிஸ்கின்.
ஆனால் அடுத்த வாரமும் மிஸ்கினுக்கு போட்டி பலமாகத்தான் இருக்கும். அன்றுதான் விஜய்சேதுபதி நடித்துள்ள இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படமும் ஆர்யா, நயன்தாரா நடித்துள்ள ராஜாராணி படமும் ரிலீஸாகின்றன. விஜய்சேதுபதியின் படங்கள் வரிசையாக ஹிட்டாகி வருவதாலும் அவர் நடித்தாலே அது ஒரு புதுவிதமான படமாகத்தான் இருக்கும் என்றும் ரசிகர்களின் மனதில் ஒரு எண்ணம் வேரூன்றிவிட்டது. அதனால் அந்தப்பக்கம் கூட்டம் எகிறும் வாய்ப்பு அதிகம்.
அதேபோல ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய், சந்தானம் நடிப்பில் ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லீ இயக்கியிருப்பதால் ராஜாராணிக்கும் வரவேற்பு அதிகம் இருக்கும். ஏ.ஆர்.முருகதாஸ் தான் தயாரிப்பாளர் என்பதால் படத்திற்கு எங்கேயும் எப்போதும் போல கூட்டம் அலைமோத வாய்ப்பு உண்டு.
யுத்தம் செய், நந்தலாலா, முகமூடி என மிஸ்கினின் படங்கள் வரிசையாக தோல்வியை தழுவினாலும் அவரது படங்களுக்கான எதிர்பார்ப்பு மட்டும் குறைந்ததாக தெரியவில்லை. மேலும் ட்ரெய்லர் மூலமாக ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்துவரும் வித்தை தெரிந்தவ்ர் மிஸ்கின். அதனால் வரும் 27ஆம் தேதி மிகப்பெரிய ரேஸ் ஒன்று காத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.