ஆரம்பம் – விமர்சனம்

179

தீபாவளிக்கு தல அஜித் ரசிகர்களுக்கு அட்டகாசமான விருந்து ‘ஆரம்பம்’. ஹாலிவுட் பட பாணியில் சண்டை காட்சிகளில் மிரட்டுகிறார் அஜித். முழுக்க நரைத்த தலை, மிரள வைக்கும் வில்லத்தனம் என்று மற்ற ஹீரோக்கள் நடிக்கத் தயங்கும் காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறார். படத்தின் இரண்டாம் பகுதியை முதல் பாகமாகவும் முதல் பாகத்தை இரண்டாம் பாகமாகவும் காட்டியிருப்பது படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. இது டைரக்டர் விஷ்ணுவர்த்தனின் புத்திசாலித்தனம்.

மும்பையில் பல இடங்களில் குண்டு வெடித்து அதகளமாகும் அந்த பின்னனியில் அஜித் எண்ட்ரி கொடுப்பது ரசிகர்களை கொண்டாட வைக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் கோல்ட் மெடல் ஆர்யாவை அஜித்துடன் நயன்தாரா சேர்த்து வைக்கும் காட்சி நல்ல இடம். குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பை முடக்குதல், மந்திரியின் பினாமியை கடத்துதல், சுவிஸ்வங்கி கணக்குகளை கையாளும் ஆடிட்டரை போட்டு துவைத்து எடுத்தல் என்று எல்லா வில்லத்தனத்தையும் செய்து விட்டு எதுவும் தெரியாதது போல் அஜித் கண்ணாடியை மாட்டிக் கொண்டு நடந்து வரும் போது தியேட்டர் அதிர்கிறது. பின் பாதியில் நடிப்பை வித்தியாசப்படுத்தி காட்டி ரசிக்க வைக்கிரார். “நாங்க உயிருக்கு பயந்தவங்க இல்ல. நேர்மையாக இருப்போம்.” அஜித்தின் யாதார்த்த வசனங்களுக்கு விசில் பறக்கிறது.

ஆர்யாவின் கல்லூரி காலத்தை வித்தியாசப் படுத்திக் காட்ட தொங்கும் தொப்பையும், உப்பிய கன்னமுமாக காட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது. தாப்ஸியின் காதலுக்காக ஸ்லிம் ஆகி அவர் முன் மண்டியிட்டு கெஞ்சும் ஆர்யா அஜித்துடன் மோதும் காட்சியில் வேகம் காட்டுகிறார். (நிச்சயம் அஜித் ரசிகர்கள் சபித்திருப்பார்கள் ஆர்யா.) ”பொறக்குற குழந்தை ஆணோ பொண்ணோ கண்டிப்பா கம்ப்யூட்டர் சயின்ஸ் மட்டும் படிக்க வைக்காதீங்க.” என்று கிஷோரிடம் ஆர்யா சொல்லும் காட்சி நச்.

அடிக்கடி ஆர்யாவிடம் ”ச்சோ ஸ்வீட்” என்று புழுவாய் நெளியும் தாப்ஸி போனில் அவர் சொல்லும் தகவலுக்கு பதிலாக “ஐ லவ் யூ” என்று பல மாடுலேஷனில் சொல்வது அழகு.

அதென்னமோ தெரியவில்லை நயன்தாரா அஜித் படமென்றால் அப்படியொரு தாராளம் காட்டுகிறார் நடிப்பிலும், உடையிலும். அந்த வில்லனை முக்கியமான மீட்டிங்கில் கலந்து கொள்ள விடாமல் செய்ய அவர் காட்டியிருக்கும் க்ளாமர் நடிப்பு ’படு’ துணிச்சல். அதுவும் மெயின் பாயிண்டில் ’கன்’ வைப்பது பக்..பக்.. இடைவேளையில் ’இனிமேதான் ஆரம்பமே’ அஜித் பின் பகுதிக்கு ரசிகர்களை தயார் படுத்தி, சொன்னது போலவே போலீஸ் உடையில் வந்து க்ளைமேகஸ் வரை நம்மை கட்டிப் போடுறார்.

அவரோடு மும்பை அப்பார்ட்மெண்டில் தீவிரவாதிகளோடு துப்பாக்கி சண்டை போடும் ராணா சிறப்பான பாத்திரம். நெடுநெடுவென வளர்ந்திருக்கும் ராணா பக்கத்தில் அஜித் வரும் காட்சி நிச்சயம் வேறு ஹீரோக்கள் வந்திருக்க மாட்டார்கள். அதுதான் அஜித்.

காவல் உயரதிகாரியாக வரும் அதுல் குல்கர்னி, கிஷோர், மந்திரியாக வரும் மகேஷ் மஞ்ரேக்கர், டிவி தொகுப்பாளராக வரும் சுமாரங்கநாத் என்று பாத்திரத்துக்கு பொருத்தமான நட்சத்திர தேர்வு. ஒம்பிரகாஷ் ஒளிப்பதிவில் அஜித்தும் அவர் ஸ்டைலும் அப்படியொரு அழகாக தெரிகிறது. ஆக்ஷன் கதையில் ரசிகர்களுக்காக திணிக்கப்பட்ட பாடல் காட்சிகள் ஒட்டவில்லை. ஸாரி யுவன் பின்னனி இசை மட்டும் பளிச்.

புல்லட் ஃபுருப் உடையில் ஊழல் என்று புது ஐடியாவும், சுவிஸ் வங்கி கணக்கும் விஷ்ணுவர்த்தனை அடையாளம் காட்டுகிறது. ஆனால் வெறும் ஆக்ஷன் காட்சிகளின் தொகுப்பாகவே படம் இருப்பது அலுப்பு. அடுத்த படத்தில் அழுத்தமான கதையில் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும்.

ஆரம்பம் சிறப்பு.

1 Comment
  1. 임실콜걸 says

    This post has inspired me to take action. Thanks 임실콜걸for the motivation!

Leave A Reply

Your email address will not be published.