அறம் – விமர்சனம்

134

aram review

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார், அதுவும் ஒரு அறிமுக இயக்குனர் படத்தில் நடித்துள்ளார் என்பதாலேயே ‘அறம்’ படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு.. அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்டியுள்ளதா ‘அறம்’..?

குடிதண்ணீர் வசதியே இல்லாத கருவேல மரங்கள் நிறைந்த பொட்டல் கிராமம்.. மனைவி, மகன் மற்றும் மகள் என சராசரி குடும்பஸ்தன் பெயிண்டர் ராம்ஸ்.. ஆழ்குழாய் கிணற்றுக்காக தோண்டப்பட்டு மூடப்படாத குழியில் அவரது மகள் எதிர்பாரதவிதமாக விழுந்து விடுகிறாள்.. வேறு நிகழ்வுக்காக சென்று கொண்டிருந்த கலெக்டர் நயன்தாராவுக்கு தகவல் தெரிந்ததும் உடனே சம்பவ இடத்திற்கு விரைகிறார்.

கொந்தளிக்கும் மக்களையும் அலட்சியப்போக்குடன் பணியாற்றும் அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு குழந்தையை மீட்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறார். அரசு இயந்திரம் பழுதடைந்து இருப்பதை அந்தசமயத்தில் கண்கூடாக பார்க்கும் நயன்தாரா, அரசியல்வாதி, அதிகாரிகளின் எதிர்ப்பையும் துணிந்து ரிஸ்க்கான முடிவு ஒன்றை எடுத்து அதை செயல்படுத்துகிறார். அதன் விளைவாக உயரதிகாரியின் விசாரணைக்கு ஆளாகி, அவர் தனது பணியை ராஜினமா செய்யவும் நேர்கிறது..

அப்படி நயன்தாரா எடுத்த ரிஸ்க் என்ன..? அதனால் அந்த குழந்தையை காப்பற்றமுடிந்ததா..? அப்படியே காப்பாற்றி இருந்தால் அவர் எதற்காக தனது பணியை ராஜினமா செய்கிறார்..? என்கிற கேள்விகளுக்கு விறுவிறுப்பான விடை சொல்கிறது மீதிப்படம்..

செய்திகளில் அவ்வப்போது நாம் பார்க்கும் விஷயம் தான் மேலே சொன்ன ஆழ்குழாய் விபத்து.. ஆனால் அதை பார்த்து ஒரு சில வினாடிகள் உச் கொட்டிவிட்டு கடந்து விடுகிறோம்.. ஆனால் அதன் பயங்கரம், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அனுபவிக்கும் துயரம் இதையெல்லாம் நம்மையும் உணர வைத்திருக்கிறது இந்த ‘அறம்’..

கொஞ்சம் தப்பியிருந்தால் டாக்குமென்ட்ரி படமாக மாறிவிடும் அபாயமுள்ள இந்த கதையை தனது தெளிவான திரைக்கதையால் இயக்குனர் கோபி நயினாரும், தனது அற்புதமான, உணர்ச்சிப்பூர்வமான, மிகையில்லாத நடிப்பால் நயன்தாராவும் அக்மார்க் கமர்ஷியல் படமாக விறுவிறுப்பாக மாற்றியிருக்கிறார்கள்.

விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் அருமையான கதை தான்.. ஆனால் நயன்தாரா நடித்ததால் மட்டுமே இந்தப்படத்திற்கு தனி மெருகு கிடைத்துள்ளது என்பதை படம் முழுதும் உணர முடிகிறது, படம் முழுதும் குழந்தையை மீட்க, ஒரு கலெக்டராக மட்டுமில்லாமல், ஒரு சக மனுஷியாக அவர் பதறுவது இப்படி ஒரு அதிகாரி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கிடைத்துவிட மாட்டார்களா என ஏங்க வைக்கிறது. உயரதிகாரிகளையும், குறுக்கீடு செய்யும் அரசியல்வாதிகளையும் புறந்தள்ளி, தான் எடுத்துக்கொண்ட வேலையில் இருந்து பின்வாங்காமல் முன்னேறும்போது புரட்சிப்பெண்ணாககவே தெரிகிறார் நயன்தாரா.. அதிலும் குழந்தையை காப்பாற்ற இறுதியில் அவர் எடுக்கும் ரிஸ்க், அதை தொடர்ந்து நகரும் நிமிடங்கள் நம்மை பதட்டத்திலேயே வைத்திருக்கின்றன.

சாதாரண தொழிலாளியாக வரும் பெயிண்டர் ராம்ஸ், அவர் மனைவியாக வரும் சுனு லட்சுமி, மகனாக நடித்துள்ள சின்ன காக்கா முட்டை பையன், அரசியல்வாதியாக வேல.ராமமூர்த்தி, அதிகாரியாக ‘வழக்கு எண்’ முத்துராமன், அரசு டாக்டர், வெகு(ளி) ஜனத்தின் பிரதிபலிப்பாக வரும் பழனி பட்டாளம் என அனைவருமே சம்பந்தப்பட்ட இடத்தில் உலவும் கதாபாத்திரங்களாக இருப்பது படம் முழுதும் நம்மை கவனம் சிதறாமல் ஒன்ற வைக்கிறது.

இந்த அத்தனை காட்சிகளையும் விரக்தி, வேதனை, பயம், சந்தோசம் என்கிற கலவையாக மாற்றும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறது ஜிப்ரானின் பின்னணி இசை. கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போல அவ்வளவு நேர்த்தியான ஒளிப்பதிவை ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளதுடன், யதார்த்தத்தை முகத்திலும் அறைந்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்.

இயக்குனர் கோபி நயினார் நம்பிக்கை மிகுந்த வரவாக நம் கண்களுக்கு தெரிகிறார். படம் துவங்கிய பத்தாம் நிமிடத்திலேயே கதைக்குள் நுழைந்து விடும் கோபி நயினார், எந்தவித பொழுதுபோக்கு அம்சங்களையும் திணிக்காமல் திரைக்கதையின் ஓட்டத்தை கடிவாளம் போட்டது போல் சீராக ஓடவிட்டுள்ளார்.

இங்கே நடப்பது மக்களுக்கான ஆட்சி இல்லை, வேலை பார்ப்பது மக்களுக்கான அதிகாரிகள் இல்லை என்பதை பொட்டில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறார். ராக்கெட் விட்டு சாதனை படைக்கும் நம் நாட்டில் இன்னும் ஆழ்குழாய் கிணறு விபத்துக்களில் சிக்கிய உயிரை காப்பாற்ற முடியாத அவலத்தையும், ஆழ்குழாய் கிணறுகளில் காட்டப்படும் அலட்சியத்தையும், அப்படி மீட்பதற்காக புதிதாக கருவிகள் கண்டுபிடிக்கும் இளம் வல்லுனர்களை அங்கீகரிக்காமல் அலட்சியமாக புறந்தள்ளும் அரசு எந்திரத்தின் பாராமுகத்தையும் இதைவிட உரைக்கும் விதமாக யாரும் சொல்லிவிட முடியாது.

அறம் – ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்

Comments are closed.