நெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்

101

Nenjil-Thunivirundhal review

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப்-விக்ராந்த் நடித்துள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’..

சந்தீப், விக்ராந்த் இருவரும் நண்பர்கள்.. சந்தீப்பின் தங்கை மருத்துவ கல்லூரி மாணவியான ஷாதிகாவுடன் விக்ராந்துக்கு காதல்.. சந்தீப் இதற்கு கிரீன் சிக்னல் காட்டினாலும் இதை சந்தீப்பின் அம்மா எதிர்க்கிறார். இந்தநிலையில் விக்ராந்தை போட்டுத்தள்ள மிகப்பெரிய ரவுடியான ஹரீஷ் உத்தமன் ஸ்கெட்ச் போடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அதில் சந்தீப் சிக்குகிறார். ஆனால் பின்னர்தான் தெரிய வருகிறது ஸ்கெட்ச் இவர்கள் இருவருக்கும் இல்லை.. வேறொருவருக்கு என்று..

அந்த வேறொருவர் யார்..? எதற்காக அவரை கொலை செய்ய முயற்சிகிறார்கள் என்பது சஸ்பென்ஸ்..

நண்பர்கள், காதல், ரவுடியிசம் என்கிற வழக்கமான கலவையில் மெடிக்கல் சீட் என்கிற பின்னணியை கொண்டு, ஒரு ஆக்சன் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். சந்தீப் விக்ராந்த் இருவரில் சந்தீப் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார்.. அதே சமயம் விக்ராந்த் வழக்கம்போல நண்பன்… நண்பனின் தங்கையை லவ் பண்ணும் டெம்ப்ளேட் கேரக்டர் என்பதால் சிறப்பு கவனம் ஈர்க்காமல் கடந்து போகிறார்..

சந்தீப்பின் காதலியாக நான்கு காட்சிகள் வந்துபோகும் டிபிகல் ஹீரோயின் கேரக்டரில் துறுதுறுப்பு காட்டுகிறார் மெஹ்ரீன்.. அவ்வளவே.. சந்தீப்பின் தங்கையாக வந்தாலும் படத்தின் பிரதான கதாபாத்திரமாக ஷாதிகா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார் சுசீந்திரன் படம் என்றால் சூரி நிச்சயம் இருப்பார். இதிலும் நமக்கு காமெடியையும் நண்பனுக்கு சப்போர்ட்டையும் கொடுக்கும் கேரக்டரில் வழக்கம்போல் சூரி..

தாடி, வேஷ்டி என ‘கெட்டப்பை மாற்றினாலும் கேரக்டரை மாற்றாத’ ஹரீஷ் உத்தமன் இதில் பதறாத ஜென்டில் மேனாக வில்லத்தனம் காட்டியுள்ளார். அப்புக்குட்டி, அருள்தாஸ், வினோத் கிஷன் எல்லோருக்கும் பொறுப்பை அளந்து கொடுத்திருக்கிறார் சுசீந்திரன். போலீஸ் அதிகாரியாக சந்தீப்புக்கு உதவி செய்யும் கேரக்டர் படம் முழுதும் போலீஸார் உதவி இல்லாமல் ஒற்றை ஆளாக வந்து சமாளிப்பதாக காட்டுவது அந்த நபரை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் என்பது போலவே இருக்கிறது.

இமானின் இசையில் “திட்டாதப்பா பொண்ண” பாடல் தாளமிட வைக்கிறது. இடைவேளை வரை இலக்கில்லாமல் நகரும் கதையால் இதுவும் ஒரு சராசரி படம் என்கிற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் இடைவேளைக்குப்பின் வைத்திருக்கும் ட்விஸ்ட் மூலம் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறார் சுசீந்திரன்.. ஆனால் அதை அப்படியே மெயின்டெய்ன் செய்திருக்க வேண்டாமா..?

மெடிக்கல் காலேஜ் சீட், மெரிட் கோட்டா, கௌரவத்திற்காக டாக்டருக்கு படிக்கவைப்பது, அதன் பின்னணியில் நிகழும் பயங்கரம் என அனைத்தையும் இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார் சுசீந்திரன்.. ஆனால் அழுத்த்த்தமில்லாமல்..

Comments are closed.