எய்தவன் – விமர்சனம்

ஒரு சில மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் பெறாமலேயே கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பதுடன் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அவல நிகழ்வையும் அப்படிப்பட்ட கல்லூரியில் தனது தங்கையை சேர்க்கும் ஒரு சராசரி இளைஞனின் வாழ்க்கை எப்படி சூறாவளியாக மாறுகிறது என்பதும் தான் இந்த எய்தவன் படத்தின் மையக்கரு.

கலையரசனின் தங்கை நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தாலும் கூட 5௦ லட்சம் கொடுத்தபின் தான் தனியார் மருத்துவ கல்லூரியில் அட்மிஷன் கிடைக்கிறது. இந்தநிலையில் ஏற்கனவே கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரியவர, கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டு, போலீஸ் ஸ்டேஷன் படிகளிலும் ஏறுகிறார் கலையரசன்.

ஆனால் அதை தொடர்ந்து நடக்கும் மர்ம விபத்தில் தங்கை கொல்லப்பட, வெகுண்டெழும் கலையரசன் மருத்துவ கல்லூரி உரிமையாளரான கௌதமுக்கு பாடம் புகட்ட முடிவு செய்கிறார்.. அதற்கு பக்கபலமாக தர்மா (கிருஷ்ணன்) என்கிற ரவுடியுடன் கைகோர்த்து கௌதம் மற்றும் அவரது வலது கையான ஆடுகளம் நரேன் ஆகியோருக்கு தண்ணி காட்ட துவங்குகிறார்..

கலையரசனால் கௌதமின் சாம்ராஜயத்தை தவிடுபொடியாக்க முடிந்ததா..? ரவுடியை கூட்டு சேர்த்துக்கொள்ள வேண்டிய காரணம் என்ன..? உண்மையில் அவரது தங்கையின் மரணத்துக்கு காரணமானவர்கள் யார் என்கிற கேள்விகளுக்கான புதிரை, சில சுவாரஸ்ய முடிச்சுக்களால் அவிழ்த்து சுபம் போடுகிறார்கள்.

மருத்துவ கல்லூரி தேர்வு மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு கெடுபிடி என நடப்பு சூழ்நிலை ரணகளமாக இருக்கும் நேரத்தில் இந்தப்படம் சரியாக வெளியாகி இருப்பது படத்திற்கு பிளஸ் பாயின்ட்.. ஒரு பக்காவான ஆக்சன் ஹீரோவாக மாறுவதற்கான .துவக்கத்தை இந்தப்படம் கலையரசனுக்கு தந்துள்ளது… அவரது கேரக்டர் வடிவமைப்பும் திரைக்கதையை நகர்த்தி இருக்கும் விதமும் கலையரசனை நம்பி இன்னும் கொஞ்சம் பெரிய பொறுப்பை கொடுக்கலாம் என்றே சொல்கின்றன.

போலீஸ் அதிகாரியாக வரும் சாத்னா டைட்டஸ் ஆரம்ப காட்சிகளில் மிடுக்குடன் அறிமுகமானாலும், இடைவேளைக்குப்பின் அவரது வாய்ப்பை குறைத்துவிட்டது வருத்தமே.. வில்லனாக வரும் கௌதம் புதியவர் என்றாலும் வில்லத்தனத்தை அவ்வளவு நீட்டாக செய்திருக்கிறார். சூப்பர்ப்..

படத்தில் ஆடுகளம் நரேனுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.. அதையும் அவர் அழகாக சுமந்திருக்கிறார். ரவுடியாக வரும் கிருஷ்ணாவும் இருவேறு கெட்டப்புகளில் மிரள வைக்கிறார். வேலா ராமமூர்த்தி, கலையரசனின் நண்பனாக வரும் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலரின் பங்களிப்பும் மிக சிறப்பு..

படத்தில் பாடல்களின் எண்ணிக்கையை சுத்தமாக குறைத்து திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர் சக்தி ராஜசேகரன். குறிப்பாக ஆரம்பம் முதல் இறுதிவரை எந்தவித தொய்வும் வராமல், சுவாரஸ்யமான காட்சி கோர்ப்பால் படத்தை சரியான திசையில் நகர்த்தி இருக்கிறார். கலையரசனின் தங்கை மரணத்தில் இருக்கும் ட்விஸ்ட், வில்லனின் கையாட்களை அவன் கையாலேயே ஒழிப்பது என பல காட்சிகளில் மிகப்பெரிய படத்திற்கான யோசனைகள் தெரிகின்றன..

ஆனாலும் நாயகனின் நோக்கம் வில்லனை அழிப்பதாக இருந்து கடைசி நேரத்தில் மாற்றிக்கொள்வதை ஏற்கமுடியவில்லை.. அதேபோல இடைவேளைக்குப்பின் சாத்னா டைட்டஸ் உள்ளிட்ட போலீசாரின் பங்களிப்பு இன்னும் அதிகம் இருந்திருக்க வேண்டும்.. இப்படி ஒன்றிரண்டு குறைகள் இருந்தாலும், இரண்டுமணி நேரம் ரசிகர்களை இருக்கையை விட்டு நகராமல் உட்கார வைத்திருப்பதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் சக்தி ராஜசேகரன்.

Aadukalam NarenKALAIYARASANSatna TitusYeithavanYeithavan review