’ராவ் பகதூர்’ விமர்சனம்

நடிகர்கள் : சத்ய தேவ், விகாஸ் மப்புலா, தீபா தாமஸ், பாலா பரசர், ஆனந்த் பாரதி, பிரனய் வேகா, மாஸ்டர் கிரண்
இசை : ஸ்மரன் சாய்
ஒளிப்பதிவு : கார்த்திக் பரமர்
இயக்கம் : வெங்கடேஷ் மஹா
தயாரிப்பு : ஸ்ரீ சக்ராஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஏ+எஸ் மூவிஸ், பெட்டர் இன்வெஸ்ட் மீடியா விஷன் ஃபண்ட், மஹாயானா மோஷன் பிக்சர்ஸ் – சிண்டா கோபாலகிருஷ்ண ரெட்டி, அனுராக் ரெட்டி, சரத் சந்திரா, ஈஸ்வரன் விஜயராகவன்

மன்னர் பரம்பரையைச் சேர்ந்த நாயகன் சத்ய தேவ், உடல்நிலை பாதிப்பு மற்றும் மன உளைச்சலால் தன் வாழ்வின் இறுதி நாட்களில் இருக்கிறார். மருத்துவர்கள் கொடுத்த கெடு முடிந்தும், இறக்காமல் இருக்கும் அவர், தன் நண்பரும் மருத்துவருமான விகாஸிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார். அதன்படி, தனது இளைய மகன் கருமை நிறத்தில் இருப்பதால் அவன் தனக்கு பிறந்தவன் அல்ல, என்ற தனது வாழ்நாள் சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும், என்று சொல்கிறார்.

தீபா தாமஸை காதலித்து திருமணம் செய்து கொண்ட சத்ய தேவ், தன் இளைய பிள்ளை மீதான இத்தகைய சந்தேகத்திற்கு தீர்வு கண்டாரா ?, இந்த சந்தேகமும் அதைச் சார்ந்த சில சம்பவங்களும் அவரது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன ?, அதனால் அவர் மன ரீதியாக எதிர்கொள்ளும் போராட்டங்கள் என்ன ? என்பதை சாதாரணமான பீரியட் படம் என்று கடந்துவிட முடியாதபடி, வித்தியாசமான கதை சொல்லல் மூலம் மிக சுவாரஸ்யமான உலவியல் டிராமாவாக சொல்வதே ‘ராவ் பகதூர்’ படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் சத்ய தேவ், ராம்ப்பா ராவ் பகதூர் என்ற கதாபாத்திரத்தை தனது நடிப்பின் மூலம் கையாண்ட விதம், படம் பார்க்கும் அனைவரின் கவனத்தையும் எளிதியில் கட்டிப்போட்டு விடுகிறது. அவரது உடல் மொழி, பயம், குற்ற உணர்ச்சி ஆகிய அனைத்தும் சத்ய தேவ் என்ற நடிகரை தாண்டி, ராம்ப்பா ராவ் பகதூர் என்ற கதாபாத்திரமாக ரசிகர்கள் மனதில் பதிய வைத்து விடுகிறது. முழு படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கும் சத்ய தேவ், நடிப்புக்கு நிச்சயம் பல விருதுகள் காத்திருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் தீபா தாமஸ், தனக்கு கொடுத்த வேலையை குறையின்றி செய்திருப்பதோடு, இறுதிக் காட்சியில் எதிர்பார்க்காத ரகசியத்தை உடைத்து பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

நாயகனின் நண்பராகவும், மருத்துவராகவும் நடித்திருக்கும் விகாஸ் மப்புலா தன் வேலையை சரியாக செய்திருப்பதோடு, திரைக்கதையில் இருக்கும் உளவியல் ரீதியான திருப்பங்களுக்கு கைகொடுக்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.

பாலா பரசர், ஆனந்த் பாரதி, பிரணய் வேகா, மாஸ்டர் கிரண் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்து பார்வையாளர்கள் மனதில் நின்று விடுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் பரமர், பீரியட் படத்திற்கான வழக்கமான பாணியை கையாளாமல், வண்ணங்கள் மற்றும் விளக்கு ஒளிகளை வித்தியாசமான பாணியில் கையாண்டு, புதுமையான அனுபவத்திற்குள் பார்வையாளர்களை பயணப்பட வைத்திருக்கிறார்.

ஸ்மரன் சாய் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருப்பதோடு, கதாபாத்திரங்கள் பேசாத இடங்களில், அவர்கள் பேச நினைத்ததை ரசிகர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.

பழைய அரண்மனை மற்றும் அதில் இருக்கும் பொருட்களை மிக நுணுக்கமாக வடிவமைத்திருக்கும் கலை இயக்குநர் ரோஹன் சிங்கின், வண்ணங்கள் மற்றும் விளக்குகள் மூலம் ஒளிப்பதிவாளருடன் இணைந்து ரசிகர்களின் கண்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கியிருக்கிறார்.

கதை எழுதி இயக்கியிருப்பதோடு, படத்தொகுப்பும் செய்திருக்கும் வெங்கடேஷ் மஹா, சாதி வெறி, நிற வெறி மற்றும் ராஜ பரம்பரையின் ஆணவம் ஆகியவற்றை அடித்து நொறுக்கும் கதைக்கருவை உளவியல் திரில்லர் பாணியில் கொடுத்ததோடு, வித்தியாசமான கதை சொல்லல் மூலம் சஸ்பென்ஸ் திகில் உள்ளிட்ட வெவ்வேறு பாணியில் திரைக்கதையை பயணிக்க வைத்து பிரமிக்க வைத்திருக்கிறார்.

தெலுங்குப் படங்களில் எதிர்பார்க்கும் எந்த ஒரு விசயமும் இல்லாத, அதே சமயம் தெலுங்கு சினிமா மட்டும் அல்ல இந்திய சினிமாவே வியக்கும் வகையில், திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களை கையாண்டிருக்கும் இயக்குநர் வெங்கடேஷ் மஹா, மீண்டும் ஒரு முறை வித்தியாசமான படைப்புகளை வழங்கும் இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

படத்தின் நீளம், மெதுவாக நகரும் திரைக்கதை சிறு குறையாக தெரிந்தாலும், நாயகன் சத்ய தேவின் நடிப்பு மற்றும் மற்ற கதாபாத்திரங்களை இயக்குநர் கையாண்ட விதம் ஆகியவை அந்த குறைகளை மறக்கடித்து, ரசிகர்களை படத்துடன் பயணிக்க வைப்பதோடு, வித்தியாசமான திரை அனுபவத்தையும் கொடுக்கிறது.

ரேட்டிங் 4/5

rao bahadur movie reviewrao bahadur reviewtelugu movie rao bahadur reviewதெலுங்குப் படம் ராவ் பகதூர் விமர்சனம்ராவ் பகதூர் திரைப்பட விமர்சனம்ராவ் பகதூர் விமர்சனம்