நடிகர்கள் : வெற்றி, பிரிகிடா சாகா, ரங்கராஜ் பாண்டே, மாறன், லிஸி ஆண்டனி, சரவணன், அருவி மதன்
இசை : தர்புகா சிவா
ஒளிப்பதிவு : எம்.வி.பன்னீர் செல்வம்
இயக்கம் : தயாள் பத்மநாபன்
தயாரிப்பு : 2எம் சினிமாச், டி பிக்சர்ஸ் – கே.வி.சபரீஸ்
படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், வருமையில் சிக்கித்தவிக்கும் நாயகன் வெற்றி திருடுகிறார். வேலை கிடைக்கும் வரை அதையே தொழிலாக வைத்துக்கொண்டு பயணிக்கும் அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை குற்றவாளியாகிறார். வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதிக்கிறது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தன் குற்றத்திற்கான தண்டனையாக இருந்தாலும், அதன் மூலம் தனக்கான நீதி மறுக்கப்பட்டிருக்கும் வாதத்தை வெற்றி முன் வைக்கிறார். அவரது வாதம் சரியா ? தவறா ? என்பதை விவாதிப்பதோடு, அவர் கொலை குற்றவாளியான சூழல் என்ன ?, யாரை எதற்காக கொலை செய்தார் ? என்ற கேள்விகளுக்கான விடைகளும் தான் படத்தின் கதை.
நின்ற இடத்தில் இருந்து பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டிய கதாபாத்திரம் என்பதால் இயக்குநர் வெற்றியை தேர்ந்தெடுத்திருப்பார் போலிருக்கு. அவரது எதிர்பார்ப்பை வெற்றியும் நூறு சதவீதம் பூர்த்தி செய்திருக்கிறார். படம் முழுவதும் அவர் பேசிக் கொண்டு இருந்தாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அதை செய்திருப்பதால், அவர் திரைக்கதைக்கு பலமாகவே பயணித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகா, கிராமத்து பெண்ணாக உடையில் மட்டும் இன்றி தனது எதார்த்தமான நடிப்பிலும் பிரதிபலிக்கிறார். சிறைச்சாலை அதிகாரியாக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே, வெற்றியின் வாதத்திற்கு எதிர்வாதம் செய்யும் கதாபாத்திரத்தில் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வெற்றியின் நண்பராக நடித்திருக்கும் மாறன், அம்மாவாக நடித்திருக்கும் லிஸி ஆண்டனி, தொழிலதிபர் லக்ஷ்மிகாந்தனாக நடித்திருக்கும் கவிதா பாரதி, வெற்றியை தூக்கிலிடும் ஹேங்மேனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, கன்யா பாரதி, அருவி மதன் ஆகியோர் தங்களது கச்சிதமான நடிப்பின் மூலம் அந்த அந்த கதாபாத்திரமாகவே பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர்.
ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர் செல்வம், கதையின் சூழலுக்கு ஏற்ப சூரிய ஒளியையும், குறைவான விளக்குகளையும் பயன்படுத்தி காட்சிகளை படமாக்கியிருப்பது பார்வையாளர்களையும் கதையுடன் பயணிக்க வைக்கிறது. தர்புகா சிவாவின் இசையும், பாரதியார், பாரதிதாசன் மற்றும் தயாள் பத்மநாபன் ஆகியோரது பாடல் வரிகளும் கதைக்களத்தையும், கதை மாந்தர்களின் மனங்களையும் பிரதிபலிக்கும் வகையில் பயணித்திருக்கிறது. பின்னணி இசை இறுக்கமான சூழல்களுக்கு ஏற்ப பயணித்து காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது. பூபதி வேதகிரியின் படத்தொகுப்பு நேர்த்தி.
கவிதா பாரதி மற்றும் தயாள் பத்மநாபன் ஆகியோரது திரைக்கதை மற்றும் வசனங்கள் ஒரு எளிமையான கதைக்கு பெரும் வலிமை சேர்த்திருக்கிறது. படத்தில் வசன காட்சிகள் அதிகம் என்றாலும், வசனங்கள் அனைத்தும் கைதட்டி பாராட்டும் விதத்தில் இருப்பது படத்திற்கு பெரும் பலம்.
கதை எழுதி இயக்கியிருக்கும் தயாள் பத்மநாபன், எளிமையான கதை மூலம் மனிதர்களின் மனங்களையும், எண்ணங்களையும், திரை மொழியில் கச்சிதமாக கடத்தியிருக்கிறார். குற்றவாளியின் பார்வையில் மரண தண்டனை என்பது ஒருவருக்கான நீதி மறுக்கப்படுவதற்கு சமம், என்ற ரீதியில் காட்சிகள் வாதங்களாக நகர்ந்தாலும், அதை சுவாரஸ்யம் மிக்க திரைப்படமாக பயணிக்கிறது.
குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் மரண தண்டனையும் ஒரு கொலை தான், என்ற வாதத்தை முன் வைக்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன், அதற்கான பின்னனியை மிக தெளிவாக விவரித்து நீதித்துறையை யோசிக்க வைத்திருக்கிறார். கருத்தியல் படைப்பாக இருந்தாலும், அதை விறுவிறுப்பான திரைப்படமாக திரை ரசிகர்களை ரசிக்க வைத்து யோசிக்க வைக்கும் இந்த ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ நிச்சயம் பல்வேறு தரப்பினரிடம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும்.
ரேட்டிங் 4.2/5