‘ஹார்ட்டின்’ விமர்சனம்

நடிகர்கள் : சனத், மடோனா செபாஸ்டியன், இமயா.டி, வாட்ஸ்-அப் மணி, டெப்னிதா
இசை : ராஜேஷ் முருகேசன்
ஒளிப்பதிவு : முகேஷ்வரன்.வி
இயக்கம் : கிஷோர் குமார்
தயாரிப்பு : டிரைடெண்ட் ஆர்ட்ஸ் – ஆர்.ரவீந்திரன்

ஜெய்ப்பூரில் உள்ள தனது நண்பரின் உணவகத்தில் பணியாற்றும் நாயகன் சனத்தும், ஐடி துறையில் பணியாற்றும் தமிழ் பெண்ணான இமயாவும் நண்பர்களாக பழகுகிறார்கள். சனத் மீது இமயாவுக்கு காதல் மலர்கிறது. ஆனால், அவரது காதலை சனத் ஏற்க மறுக்கிறார். அதற்கான காரணமாக தனது முதல் காதல் பிரிவால் ஏற்பட்ட வலியை மீண்டும் அனுபவிக்கும் சக்தி தனக்கு இல்லை என்கிறார். அவரது முன்னாள் காதல் பற்றி அறிந்துக் கொண்ட பிறகும் அவர் மீது காதலோடு இருக்கும் இமயாவை சனத்தும் காதலிக்கிறார்.

இமயாவின் காதல் மூலம் மீண்டும் தனது மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு திரும்பிய சனத், விபத்து ஒன்றின் மூலம் தலையில் அடிபட்டு, தனது 6 வருட நினைவுகளை இழந்து விடுகிறார். இதனால், இமயா மற்றும் அவரது காதலை மறந்துவிடுவதோடு, காதலை முறித்துகொண்டு தன்னைவிட்டு பிரிந்து சென்ற முன்னாள் காதலியின் பிரிவு சம்பவத்தையும் மறந்துவிடுபவர், பழைய நினைவுகளோடு தனது முன்னாள் காதலி மரோனா செபாஸ்டியனை சந்திக்க செல்கிறார்.

மறந்த நினைவுகள் திரும்பவும் வந்தவுடன், அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அவருடன் பயணிக்கும் இமயாவின் காதல் வெற்றி பெற்றதா? அல்லது முதல் காதல் முறிவு பற்றி தெரியாமல் பிரிந்து சென்ற காதலியை தேடிச் செல்லும் சனத்தின் காதல் வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சனத், இரண்டு நாயகிகள் இருந்தாலும் டூயட் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் இன்றி, ஒரு கதாபாத்திரமாகவே வலம் வந்திருக்கிறார். முதல் காதலியை உருகி உருகி காதலிப்பவர், அவரது பிரிவால் இறுக்கமான மனநிலையில் இருப்பதும், இமயா உடனான காதலுக்குப் பிறகு மகிழ்ச்சியான மனநிலைக்கு மாறுவது என்று நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

அறிமுக நடிகை இமயா, புதுமுகம் என்ற அடையாளமே தெரியாதபடி தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் நடித்திருக்கிறார். அவரது திரை இருப்பு மற்றும் நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

மடோனா செபாஸ்டியன், காதலருக்கு இணையாக தன்னால் காதலில் நேர்மையாக இருக்க முடியாத நிலையை எண்ணி வருந்தும் காட்சியிலும், தான் நிராகரித்த காதல் மீண்டும் தன்னை தேடி வரும்போது, தடுமாறும் காட்சியிலும் எதார்த்தமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வாட்ஸ்-அப் மணி குணச்சித்திர வேடத்துடன் நகைச்சுவையாகவும் நடித்து சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் டெப்னிதா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.வி, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டியை அழகியலோடு காட்சிப்படுத்தி கண்களுக்கு காட்சி விருந்து படைத்திருக்கிறார். ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் மெலோடி ரகம். பின்னணி இசை அளவு. படத்தொகுப்பாளர் பரத் விக்ரமின் பணியும் நேர்த்தி.

இயக்குநர் கிஷோர் குமார், காதல் கதை மூலமாக பார்வையாளர்களை உருக வைப்பதற்கு பதிலாக, நினைவுகளை இழந்த நாயகனின் காதல் கதைகளை காமெடியாக சொல்லி ரசிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.

முன்னாள் காதல் மற்றும் இன்னாள் காதல் என்று ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளுடன் பயணிக்கும் நாயகன் மற்றும் நாயகிகளுடனான அவரது கெமிஸ்ட்ரி ரசிக்கும்படி இருக்கிறது. எளிமையான கையாளப்பட்ட காட்சிகள் என்றாலும் அமைதியான சூழலோடு, மனதுக்கு இதமான ஒரு அனுபவத்தை கொடுக்கும் வகையில் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் கிஷோர் குமார், தான் சொல்ல வந்ததை நேர்மையாகவும், நாகரீகமாகவும் சொல்லி இந்த ‘ஹார்ட்டின்’-னை ரசிகர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

ரேட்டிங் 3.5/5

heartin movie reviewheartin reviewtamil movie heartin reviewதமிழ்ப் படம் ஹார்ட்டின் விமர்சனம்ஹார்ட்டின் திரைப்பட விமர்சனம்ஹார்ட்டின் விமர்சனம்