’கான் சிட்டி’ விமர்சனம்

நடிகர்கள் : அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன், நந்தகோபால், VTV கணேஷ், தீப ராமானுஜம், ராதா ரவி, அருள் தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி,
இசை : ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு : அரவிந்த் விஸ்வநாதன்
இயக்கம் : ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு : ஹரிஷ் துரைராஜ்

அர்ஜுன் தாஸ், அன்ன பென் மற்றும் வடிவுக்கரசியும், அவரது மகனான யோகி பாபு ஆகியோருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றாலும் அனைவரும் பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களது நிலையை மாற்றுவதற்காக கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மோசடி மூலம் பணம் சம்பாதிக்க தொடங்குகிறார்கள். அந்த பணத்தை வைத்து குறுகிய காலத்தில் அதிக வருமானம் ஈட்டும் முயற்சியில் ஈடுபடும் போது அவர்கள் அனைவரும் ஏமாற்றப்படுகிறார்கள். தங்களது பணத்துடன், மக்களின் பணத்தையும் இழந்து விட்ட அவர்களை போலீஸ் கைது செய்ய, அங்கிருந்து தப்பித்துச் செல்பவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு குடும்பமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள்.

இதற்கிடையே அவர்கள் இருக்கும் இடத்தை கண்டிபிடிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், அவர்களை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார். அவரது மிரட்டலுக்கு அடிபணிபவர்கள், மீண்டும் சென்னைக்கு திரும்பி பெரும் மோசடி மூலம் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார்கள். அவர்களின் திட்டம் வெற்றி பெற்றதா ?, இல்லையா ?, என்பதை மக்களின் பேராசையை வைத்து நடத்தப்படும் மோசடிகளை, நகைச்சுவை பின்னணியோடு சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘கான் சிட்டி’.

நாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், தனது இறுக்கமான கதாபாத்திர கட்டமைப்பில் இருந்து விலகி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யும் விதத்திலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களம் என்றாலும், அதற்கான முழுமையான வாய்ப்பு அர்ஜுன் தாஸுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, தன்னால் கமர்ஷியல் நாயகனாகவும் பயணிக்க முடியும் என்பதை படம் முழுவதும் நிரூபித்திருக்கிறார்.

மோசடியால் ஏமாற்றப்பட்டு, அதே மோசடி மூலம் தனது நிலையை மாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அன்னா பென், அளவான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றாலும், யோகி பாபு தனது பாணியை கைவிட்டுவிட்டு புதிதாக ஏதோ செய்ய முயற்சித்திருக்கிறார். தனது வழக்கமான உடல்கேலி வசனங்களை முற்றிலும் தவிர்த்திருப்பவர், தனது சோகமான முகம் மற்றும் நடிப்பு மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அது முடியாமல் போக, தனது வழக்கமான பாணியை அளவாக கையாண்டு சில இடங்களில் லேசாக சிரிக்க வைக்கிறார்.

யோகி பாபுவின் அம்மாவாக நடித்திருக்கும் வடிவுக்கரசி, பிளாக் காமெடி காட்சிகளுக்கு ஏற்ப கச்சிதமான எக்ஸ்பிரஷனோடு சிரிக்க வைக்கிறார். குறிப்பாக யோகி பாபு உடனான அவரது காட்சிகளும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் அவருக்கு புதிய அடையாளத்தை கொடுப்பதோடு, பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறது.

அகிலன், நந்தகோபால், விடிவி கணேஷ், தீப ராமானுஜம், ராதாரவி, அருள்தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன், ராகு எசக்கி, சதானந்த் ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்யும் விதத்தில் பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாத் காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் அருள் மோசஸ்.ஏ, திரைக்கதை தொய்வின்றி நகர்வதற்கு தன்னால் முடிந்த முயற்சியை செய்தாலும், இறுதியில் என்ன நடக்கப் போகிறது என்ற பார்வையாளர்களின் யூகங்களுக்கு ஏற்ப படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.

புத்திசாலித்தனம் அல்லது தந்திரமான திட்டங்கள் மூலம் நடத்தப்படும் மோசடிகளை, நகைச்சுவை பின்னணியோடு சொல்லியிருக்கும் ஹரிஷ் துரைராஜ், விறுவிறுப்பான திரைக்கதை மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்.

முக்கிய கதாபாத்திரங்கள் சீரியஸாக இருந்தாலும், அவர்களது உரையாடல் மற்றும் உடல் மொழி மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ், மோசடி சம்பவங்களை யூகிக்க முடியாத திருப்பங்கள் மூலம் சுவாரஸ்யமாக சொல்லி இரண்டு மணி நேரம் எப்படி போனது என்றே தெரியாதவாறு படத்தை நகர்த்தி சென்று ‘கான் சிட்டி’-யை மக்களுக்கு பிடிக்கும் சிட்டியாக கொடுத்திருக்கிறார்.

ரேட்டிங் 3/5

con city movie reviewcon city reviewtamil movie con city reviewகான் சிட்டி சினிமா விமர்சனம்கான் சிட்டி திரைப்பட விமர்சனம்கான் சிட்டி விமர்சனம்