நடிகர்கள் : வெற்றி, பிரியலயா, ஏ.வெங்கடேஷ், லிவிங்ஸ்டன், அருள் டி.சங்கர், துளசி, ராமர், கராத்தே வங்கடேசன்
இசை : கவாஸ்கர் அவினாஸ்
ஒளிப்பதிவு : சந்தோஷ் குமார் வீராசாமி
இயக்கம் : தீரன் அருண்குமார்
தயாரிப்பு : எம்.எம் ஸ்டுடியோஸ் – எம்.மூர்த்தி
பொதுவாக கச்சா எண்ணெயைத்தான் ‘கருப்பு தங்கம்’ என்று குறிப்பிடுவார்கள். ஆனால், மனிதர்களின் தலைமுடிக்கும் சர்வதேச அளவில் மிகப்பெரிய வணிக மதிப்பு இருக்கிறது என்பதையும், அதன் பின்னணியில் பல கோடி ரூபாய் புழங்கும் மர்ம உலகம் இயங்குகிறது என்பதையும் விறுவிறுப்பான கிரைம் திரில்லராகக் கொடுத்திருக்கிறது ‘பிளாக் கோல்டு’.
கார் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் தலைமை மெக்கானிக்காக வேலை செய்யும் வெற்றி, தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அதே சமயம், கல்லூரியில் தன்னுடன் படித்த பிரியலயாவை காதலித்தும் வருகிறார். இப்படி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நகரும் அவரது வாழ்க்கையில், திடீரென்று ஒரு மிகப்பெரிய புயல் வீசுகிறது.
லாரி ஓட்டுநராக இருக்கும் வெற்றியின் தந்தை லிவிங்ஸ்டன், ஆந்திராவில் இருந்து ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வரும்போது திடீரென மாயமாகிறார். லாரியுடன் சரக்கும் காணாமல் போனதால், அதன் உரிமையாளரான ஏ.வெங்கடேஷ், லிவிங்ஸ்டன் மீதே திருட்டுப் பழியை சுமத்துகிறார்.
தந்தையின் நிலை என்னவானது என்ற கவலையுடன் இருக்கும் வெற்றி, ஒருபுறம் அவரைத் தேடுவதிலும், மறுபுறம் தந்தை மீதான குற்றச்சாட்டை துடைப்பதிலும் தீவிரமாக இறங்குகிறார். காவல்துறை அதிகாரியான அபிராமி வெங்கடாச்சலமும் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், வெற்றியின் தேடல் அவரை இதுவரை அறிந்திராத ஒரு இருண்ட வணிக உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது.
அது என்ன வணிகம்? தலைமுடிக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குக்கும் என்ன தொடர்பு? லிவிங்ஸ்டன் காணாமல் போனதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? என்ற கேள்விகளுக்கான பதில்களே படத்தின் மீதிக்கதை.
தங்கத்திற்கு நிகரான மதிப்பில் மனித தலைமுடி சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுவதையும், அதனைச் சுற்றி நடைபெறும் வணிகப் போட்டிகள், பேராசை, மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களையும் மையமாக வைத்து கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தீரன் அருண்குமார்.
பொதுவான கிரைம் திரில்லர் கதைகளில் இருந்து விலகி, பலரும் அறிந்திராத ஒரு வணிகப் பின்னணியை கதைக்களமாகத் தேர்வு செய்திருப்பதே படத்தின் முக்கியமான பலம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கற்பனையையும் கலந்து, சுவாரஸ்யமான திரைக்கதையாக உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
படத்தின் மையக் கதாபாத்திரமான வெற்றி, அதிகம் பேசாமல் தனது முகபாவனைகள் மற்றும் உடல்மொழி மூலம் கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துகிறார். தீவிரமான விசாரணை, தந்தையைத் தேடும் பதற்றம், குடும்பத்தின் மீதான அக்கறை என உணர்வுபூர்வமான காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் மட்டும் அவரது நடிப்பில் சற்று தடுமாற்றம் தெரிகிறது. இருப்பினும், கதையின் முக்கியமான உணர்வுப்பூர்வமான தருணங்களை தனது நடிப்பால் தாங்கிப் பிடிக்கிறார்.
பிரியலயா அழகான தோற்றத்தாலும் இயல்பான நடிப்பாலும் கவனம் ஈர்க்கிறார். அவருக்கான காட்சிகள் குறைவாக இருப்பது மட்டும் சிறிய ஏமாற்றம். இன்னும் கூடுதலான காட்சிகள் வழங்கப்பட்டிருந்தால் கதாபாத்திரம் மனதில் இன்னும் ஆழமாகப் பதிந்திருக்கும்.
காவல்துறை அதிகாரியாக வரும் அபிராமி வெங்கடாச்சலம், கம்பீரமான தோற்றத்துடனும் நம்பிக்கையான நடிப்புடனும் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.
வெற்றியின் தந்தையாக நடித்திருக்கும் லிவிங்ஸ்டன், மிகைப்படுத்தப்படாத எதார்த்தமான நடிப்பால் கவனம் பெறுகிறார். தாயாக நடித்திருக்கும் துளசியும் தனது அனுபவமிக்க நடிப்பின் மூலம் குடும்பப் பின்னணிக் காட்சிகளுக்கு உணர்வுப்பூர்வமான வலு சேர்க்கிறார்.
அருள் டி.சங்கர், ஏ.வெங்கடேஷ், சபிதா ராய், ராமர், கராத்தே வெங்கடேஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள்.
சந்தோஷ் குமார் வீராசாமியின் ஒளிப்பதிவு படத்தின் கிரைம் திரில்லர் தன்மைக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களின் மனநிலைக்கும், அவர்கள் பயணிக்கும் சூழலுக்கும் ஏற்ப வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் ஒளியமைப்புகளைப் பயன்படுத்தியிருப்பது காட்சிகளுக்கு தனித்துவம் சேர்க்கிறது.
கவாஸ்கர் அவினாஸின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. அதேபோல், பரபரப்பான காட்சிகளின் தீவிரத்தை அதிகரிக்கும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.
தினேஷ் குமாரின் படத்தொகுப்பு படத்தின் வேகத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது. நான்-லீனியர் முறையில் காட்சிகளை அடுக்கி, ஆரம்பத்திலேயே பார்வையாளர்களுக்குள் ஆர்வத்தை ஏற்படுத்துவதுடன், கதையின் ஓட்டத்தையும் சீராகக் கொண்டு சென்றிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் தீரன் அருண்குமார், வழக்கமான கிரைம் கதைக்குள் புதியதொரு தகவல் பின்னணியை இணைத்து சுவாரஸ்யமான திரைப்படத்தை வழங்கியிருக்கிறார். மனித தலைமுடியை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நடைபெறும் வணிகம், அதன் மதிப்பு, அதற்குப் பின்னால் இருக்கும் போட்டிகள் மற்றும் குற்ற உலகம் ஆகியவற்றை சினிமா மொழியில் சுவாரஸ்யமாக விவரித்திருப்பது இயக்குநரின் தனித்துவமான முயற்சி.
சில இடங்களில் இன்னும் அழுத்தமான காட்சியமைப்புகளும், காதல் பகுதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவமும் கொடுத்திருக்கலாம். இருப்பினும், புதுமையான கதைக்களம், விறுவிறுப்பான திரைக்கதை, சிறப்பான நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு ஆகியவை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துகின்றன.
மொத்தத்தில், தங்கம், வைரம் போன்ற விலைமதிப்புள்ள பொருட்களின் பின்னணியில் மட்டுமல்லாமல், மனித தலைமுடியின் பின்னணியிலும் இத்தனை பெரிய குற்ற உலகம் இயங்குகிறதா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வித்தியாசமான கிரைம் மற்றும் ஆக்ஷன் திரில்லர் ‘பிளாக் கோல்டு’.
ரேட்டிங் 3.8/5