’சீன்’ விமர்சனம்

நடிகர்கள் : சூர்யா, நஸ்ரியா நஸீம், நஸ்லென், லால், ஆனந்தராஜ்,
இசை : சுஷான் ஷாம்
ஒளிப்பதிவு : வினித் அகஸ்டின்
இயக்கம் : ஜித்து மாதவன்
தயாரிப்பு : சூர்யா, ஜோதிகா, ஜெயஸ்ரீ தாமோதரன்

காவல்துறையில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் இன்பராஜுக்கு, குற்றவாளிகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு வழக்குகளை முடிப்பது அத்தனை கடினமானதல்ல. ஆனால், ஒருநாள் அவரது வாழ்க்கையையே மாற்றும் விதமாகப் பார்வை பறிபோகிறது. இதனால் காவல்துறை பணியிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அவர் கைது செய்து சிறையில் அடைத்திருந்த சைக்கோ கொலையாளியின் பாணியிலேயே நகரில் மீண்டும் தொடர் கொலைகள் அரங்கேறுகின்றன. சிறையில் இருக்கும் குற்றவாளியால் இந்தக் கொலைகளைச் செய்திருக்க முடியாது என்பதை உணரும் இன்பராஜ், புதிய கொலையாளியைத் தேடத் தொடங்குகிறார்.

ஆனால், பார்வையற்றவர் என்பதால் அவரது விசாரணை முயற்சிகளுக்கு காவல்துறை முட்டுக்கட்டை போடுகிறது. அதிகாரமும் ஆதரவும் இல்லாத நிலையில், தனக்குத் துணையாக நஸ்ரியாவை இணைத்துக்கொண்டு தனிப்பட்ட முறையில் களமிறங்குகிறார்.

இங்கிருந்துதான் வழக்கமான புலனாய்வு கதைகளிலிருந்து படம் விலகி, ஒரு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது. குற்றவாளியின் ஒவ்வொரு தடயத்தையும் கண்களால் தேட முடியாத இன்பராஜ், வேறொரு விதமான புலனாய்வு முறையை உருவாக்குகிறார். அந்த முயற்சியில் அவர் எதிர்கொள்ளும் சவால்களும், கண்டறியும் உண்மைகளும்தான் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.

ஒரு நடிகர் தனது திரை அடையாளத்தை மாற்றிக்கொள்வது எளிதானதல்ல. குறிப்பாக, ஆக்‌ஷன் காட்சிகளிலும் கம்பீரமான தோற்றத்திலும் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்றிருக்கும் சூர்யா, இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார்.

இன்பராஜ் கதாபாத்திரத்தில் அவரது உடல்மொழி, நடையின் வேகம், முகபாவனைகள் என அனைத்திலும் ஒரு புதிய அணுகுமுறை தெரிகிறது. பார்வையற்றவர் என்ற உண்மையை மறைத்துக்கொண்டு இயல்பாகச் செயல்பட முயற்சிப்பது, பிறரின் உதவியை நாட வேண்டிய சூழலில் ஏற்படும் தயக்கம், தன்னால் முடியாமல் போகும் தருணங்களில் வெளிப்படும் மன உளைச்சல் என நுட்பமான உணர்வுகளை மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்தியிருக்கிறார்.

காவல்துறை அதிகாரியின் தன்னம்பிக்கை ஒருபுறம்; தனது இயலாமையை எதிர்கொள்ளும் தனிமனிதனின் வலி மறுபுறம் என இரண்டு வெவ்வேறு நிலைகளுக்கு இடையில் பயணிக்கும் கதாபாத்திரத்தைச் சிறப்பாக உள்வாங்கியிருக்கிறார்.

குறிப்பாக, நஸ்ரியாவின் வழிகாட்டுதலுடன் பயணிக்கும் காட்சிகளிலும், தன்னுடைய குறைபாட்டை நினைத்து வருந்தும் தருணங்களிலும் சூர்யாவின் நடிப்பில் வெளிப்படும் நுணுக்கம் பாராட்டுக்குரியது. வழக்கமான நாயகத்தனத்தை ஒதுக்கிவிட்டு, கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டிருக்கும் சூர்யாவுக்கு இது ஒரு முக்கியமான படமாக அமையும்.

நஸ்ரியா நசீம் திரையில் தோன்றும்போதே அவரது இயல்பான துறுதுறுப்பு கவனம் ஈர்க்கிறது. தோற்றத்தில் மாற்றம் தெரிந்தாலும், நடிப்பில் இருக்கும் பழைய உற்சாகம் குறையவில்லை.

இன்பராஜின் பார்வையாகச் செயல்படும் அவர், விசாரணையில் முக்கியப் பங்காற்றுகிறார். சூர்யாவுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அவருக்கு மனதளவிலும் துணையாக இருக்கிறார். அவர்களுக்குள் மெதுவாக உருவாகும் காதலை ஆர்ப்பாட்டமின்றி வெளிப்படுத்தியிருப்பதும் ரசிக்க வைக்கிறது.

சூர்யாவின் கதாபாத்திரம் பார்வையற்றது என்பதால், நஸ்ரியாவின் பங்களிப்பு வெறுமனே உதவியாளர் என்ற எல்லைக்குள் நின்றுவிடவில்லை. இருவருக்கும் இடையிலான புரிதலும், ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் தன்மையும் படத்தின் உணர்வுப்பூர்வமான அம்சமாக மாறுகிறது.

நஸ்லன் தனது இயல்பான நடிப்பால் படத்திற்கு இன்னொரு பலம் சேர்க்கிறார். சூர்யாவுடன் இணைந்து வரும் காட்சிகளில் மிகைப்படுத்தப்படாத நடிப்பும், நுட்பமான முகபாவனைகளும் கவனம் ஈர்க்கின்றன.

ஆனந்தராஜ், லால், ராஜ்பிரியன், சுரேஷ் மதிழயகன், கஜராஜ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, காவல்துறை அதிகாரிகளாக வரும் கதாபாத்திரங்கள் கதையின் நம்பகத்தன்மைக்கு உதவுகின்றன.

புலனாய்வு திரைப்படங்களில் காட்சிகளின் முக்கியத்துவம் அதிகம். ஒரு சிறிய பொருள், ஒரு ஒலி, ஒரு அசைவு என எதுவும் கதையின் முக்கியமான தடயமாக மாறலாம். இந்த அம்சத்தை உணர்ந்து ஒளிப்பதிவாளர் வினித் அகஸ்டியன் தனது கேமராவை கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு நெருக்கமாகப் பயணிக்கச் செய்திருக்கிறார்.

சுசீன் ஷாமின் இசை, படத்தின் மர்மத் தன்மையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கதாபாத்திரங்களின் உள்ளார்ந்த உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. பதற்றமான காட்சிகளில் இசையின் வேகம் அதிகரிப்பதும், உணர்ச்சிகரமான தருணங்களில் அமைதியாகப் பயணிப்பதும் காட்சிகளின் தாக்கத்தை உயர்த்துகின்றன.

அஜ்மல் சாபுவின் படத்தொகுப்பு திரைக்கதையின் வேகத்தைத் தக்கவைக்கிறது. குறிப்பாக, விசாரணை தொடர்பான காட்சிகளை ஒன்றோடு ஒன்று இணைக்கும் விதமும், அடுத்தடுத்த சம்பவங்களுக்கான எதிர்பார்ப்பை உருவாக்கும் முறையும் படத்திற்கு விறுவிறுப்பை வழங்குகின்றன.

ஒரு பிரபலமான நாயகனை வைத்து வழக்கமான புலனாய்வு திரைப்படத்தை உருவாக்குவது எளிது. ஆனால், அந்த நாயகனின் மிகப்பெரிய பலமாகக் கருதப்படும் பார்வையையே இல்லாமல் செய்து, அதன் பின்னணியில் முழு திரைக்கதையையும் நகர்த்துவது சவாலான முயற்சி. அந்தச் சவாலை இயக்குநர் ஜித்து மாதவன் துணிச்சலுடன் கையாண்டிருக்கிறார்.

குற்றவாளியைத் தேடும் கதையாக மட்டுமின்றி, தனது இயலாமையை வென்று மீண்டும் ஒரு குற்றவாளியைப் பிடிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் போராடும் மனிதனின் கதையாகவும் இதை மாற்றியிருக்கிறார். அதனால், கதாநாயகனின் வெற்றி என்பது கொலையாளியைப் பிடிப்பதோடு முடிந்துவிடாமல், தன்னம்பிக்கையை மீட்டெடுக்கும் பயணமாகவும் அமைகிறது.

சூர்யாவின் மாஸ் இமேஜைத் திரைக்கதைக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கும் இயக்குநர், அவரை வழக்கமான அதிரடி நாயகனாகக் காட்டாமல், அறிவையும் அனுபவத்தையும் நம்பிப் பயணிக்கும் புலனாய்வு அதிகாரியாக வடிவமைத்திருப்பது சிறப்பு.

கொலையாளியின் அடையாளம் ஆரம்பத்திலேயே ஓரளவுக்குத் தெரிந்துவிட்டாலும், அவர் ஏன் கொலை செய்கிறார், இன்பராஜ் அவரை எப்படி நெருங்குகிறார், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற கேள்விகள் திரைக்கதையில் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கின்றன.

குறிப்பாக, பார்வையற்ற நாயகனின் குறைபாட்டைத் திரைக்கதையின் தடையாக மாற்றாமல், ஒவ்வொரு காட்சியிலும் புதிய சுவாரஸ்யத்தை உருவாக்கும் கருவியாகப் பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் முக்கியமான வெற்றி.

கொலையாளி யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக மட்டுமே திரில்லர் படங்களைப் பார்ப்பதில்லை. தெரிந்த உண்மையை நோக்கி கதாபாத்திரங்கள் எப்படிப் பயணிக்கின்றன என்பதில்தான் உண்மையான சுவாரஸ்யம் இருக்கிறது. அந்த அனுபவத்தை ‘சீன்’ சிறப்பாக வழங்குகிறது.

சில வழக்கமான திரில்லர் அம்சங்கள் இருந்தாலும், பார்வையற்ற காவல்துறை அதிகாரி என்ற மையக் கதாபாத்திரமும், சூர்யாவின் வித்தியாசமான நடிப்பும், நஸ்ரியாவின் துணையும், ஜித்து மாதவனின் காட்சியமைப்பும் படத்தைத் தனித்துவப்படுத்துகின்றன.

குற்றவாளி தனது தடயங்களை மறைக்கலாம்… பார்வையற்ற காவல்துறை அதிகாரியின் பார்வையிலிருந்து தப்ப முடியுமா? அந்தப் புதிருக்கு விறுவிறுப்பாக விடை தேடும் வித்தியாசமான புலனாய்வு திரில்லர் – ‘சீன்’!

ரேட்டிங் 4.5/5

scene movie reviewscene reviewtamil movie scene reviewசீன் திரைப்பட விமர்சனம்சீன் விமர்சனம்தமிழ்ப் படம் சீன் விமர்சனம்