நடிகர்கள் : நயன்தாரா, ரெஜினா கசன்ட்ரா, கருடா ராம், துனியா விஜய், சுனில், யோகி பாபு, ஊர்வசி, இனியா, சிங்கம் புலி, மைனா நந்தினி
இசை : ஹிப் ஹாப் ஆதி
ஒளிப்பதிவு : கோபி அமர்நாத்
இயக்கம் : சுந்தர்.சி
தயாரிப்பு : ஐசரி கே.கணேஷ், குஷ்பு சுந்தர், குஷ்மிதா கணேஷ், விக்னேஷ் சிவன், இசான் சக்சேனா
சென்னையில் காவலராகப் பணியாற்றும் நயன்தாராவுக்கு அப்படியொரு அனுபவம்தான் ஏற்படுகிறது. தன்னைச் சுற்றி நிகழும் மர்மங்களுக்கான விடையைத் தேடி மயிலாஞ்சி என்ற ஊருக்குச் செல்கிறார். அங்கு அவர் சந்திக்கும் சம்பவங்கள் அவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றுகின்றன. தான் ஒரு சாதாரணப் பெண் அல்ல, மூக்குத்தி அம்மன் என்ற உண்மை அவருக்குத் தெரியவருகிறது.
ஆனால், தெய்வ சக்தி வெளிப்படுவதற்கு முன்பே அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் தீய சக்தியும் அங்கே காத்திருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்த சாத்தான், ரெஜினா கசன்ட்ராவின் உருவத்தில் உயிர்த்தெழுகிறது. அம்மனைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அது களமிறங்க, இரு சக்திகளுக்கும் இடையே உருவாகும் மோதலே கதையின் பிரதான ஈர்ப்பு.
இந்தப் படத்தில் நயன்தாராவை ரசிப்பதற்கு இரண்டு வெவ்வேறு பரிமாணங்கள் இருக்கின்றன. காவல்துறை அதிகாரியாகச் சாதாரணப் பெண்ணின் இயல்போடு பயணிப்பவர், மூக்குத்தி அம்மனாக மாறியதும் கம்பீரமும் தெய்வீக ஆளுமையும் நிறைந்தவராக மாறுகிறார்.
அம்மனுக்கே உரிய அமைதி, கருணை ஒருபுறம்; தீய சக்திகளை எதிர்கொள்ளும்போது வெளிப்படும் ஆக்ரோஷம் மறுபுறம் என இரண்டையும் தனது நடிப்பில் அழகாகக் கொண்டுவந்திருக்கிறார். குறிப்பாக, அம்மனாக அவர் திரையில் தோன்றும் காட்சிகள் கதையின் முக்கியமான ஈர்ப்பாக அமைகின்றன.
ஆனால், அம்மனுக்கு இணையான எதிரியாக உருவெடுத்திருக்கும் ரெஜினா கசன்ட்ரா படத்தின் மற்றொரு பெரிய பலம். சாத்தான் கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்தும் கம்பீரம், வில்லத்தனம், மிரட்டலான உடல்மொழி ஆகியவை கவனம் ஈர்க்கின்றன. அழகான தோற்றத்திற்குள் ஆபத்தான மனநிலையைப் பதுக்கியிருக்கும் கதாபாத்திரத்தை மிகவும் ரசிக்கும்படி கையாண்டிருக்கிறார். நடிப்பில் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தும் அவர், பல காட்சிகளில் நயன்தாராவுக்கு இணையான திரை ஈர்ப்பைப் பெறுகிறார்.
ரெஜினாவின் கணவராக வரும் துனியா விஜய், தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்.
தெய்வத்திற்கும் சாத்தானுக்கும் இடையே மோதல் என்றாலே படம் முழுவதும் தீவிரமான காட்சிகள்தான் இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. சுந்தர்.சி. தனது வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களையும் சரியான அளவில் இணைத்திருக்கிறார்.
குறிப்பாக, ஊர்வசி மற்றும் யோகி பாபு இணையும் காட்சிகள் படத்தின் நகைச்சுவைத் தூண்களாக இருக்கின்றன. நயன்தாராவின் அம்மாவாக வரும் ஊர்வசியின் இயல்பான நகைச்சுவையும், யோகி பாபுவின் உடல்மொழியும் இணைந்து பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன.
மைனா நந்தினி, கருடா ராம், அபிநயா, ஸ்ருதி எஸ், சிங்கம்புலி, வி.ஆர். சுவாமிநாதன், சிவகுமார் எஸ், சுனில் வர்மா உள்ளிட்டவர்களும் படத்தின் கதையோட்டத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
மயிலாஞ்சி என்ற கற்பனையான உலகத்தை வண்ணமயமாகவும் பிரம்மாண்டமாகவும் உருவாக்கியிருப்பதில் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நிகழ்காலச் சம்பவங்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகள் என வெவ்வேறு காலகட்டங்களைப் பார்வையாளர்கள் எளிதில் உணரும் வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார். அம்மனின் தோற்றம், அமானுஷ்ய நிகழ்வுகள், தெய்வீக சக்தியின் வெளிப்பாடுகள் என ஒவ்வொன்றிலும் காட்சியமைப்புகளின் வண்ணங்களும் பிரம்மாண்டமும் ரசிக்க வைக்கின்றன.
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசை படத்தின் ஆன்மீகத் தன்மையை வலுப்படுத்துகிறது. பாடல்கள் அம்மன் வழிபாட்டின் பக்தி உணர்வைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. பின்னணி இசையோ, அம்மனின் சக்தி வெளிப்படும் தருணங்களில் உற்சாகத்தையும், சாத்தானின் ஆதிக்கம் வெளிப்படும் காட்சிகளில் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
படத்தின் காட்சிகளை இணைக்கும் பணியில் ஃபென்னி ஆலிவரின் படத்தொகுப்பு சில இடங்களில் தடுமாறுகிறது. குறிப்பாக, கதை நகரும் விதத்தில் ஆரம்பத்தில் சிறிய குழப்பம் ஏற்படுகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் காட்சிகள் வேகமெடுக்கும்போது அந்தக் குறைகள் பெரிதாகத் தெரிவதில்லை.
வெங்கட் ராகவனின் திரைக்கதையும் வசனங்களும் பாரம்பரிய அம்மன் திரைப்படங்களின் சாயலைக் கொண்டிருந்தாலும், அவற்றை நவீனத் தொழில்நுட்பத்துடன் இணைத்திருப்பது படத்திற்குப் புதுமையான தோற்றத்தை வழங்குகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளையும் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களையும் இணைக்கும் திரைக்கதை, தெய்வீக சக்தி காலங்களைக் கடந்தும் நிலைத்திருக்கும் என்ற கருத்தை முன்னிறுத்துகிறது. அதேசமயம், அம்மனின் அதிசயங்களை வெறும் பக்திப் பூர்வமான காட்சிகளாக மட்டுமே அணுகாமல், பிரம்மாண்டமான காட்சியனுபவமாக மாற்றியிருக்கிறார்கள்.
பல நட்சத்திரங்கள் இடம்பெற்றிருக்கும் படத்தில், ஒவ்வொருவருக்கும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் இயக்குநர் சுந்தர்.சி. தெளிவாகச் செயல்பட்டிருக்கிறார். நகைச்சுவை இடம்பெறும் இடங்களில் சிரிக்க வைப்பதும், அமானுஷ்யக் காட்சிகளில் பதற்றத்தை உருவாக்குவதும், அம்மனின் சக்தி வெளிப்படும் தருணங்களில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதுமாகத் தனது வழக்கமான கமர்ஷியல் பாணியைத் திறம்படக் கையாண்டிருக்கிறார்.
குறிப்பாக, ஆன்மீகத் திரைப்படம் என்ற பெயரில் நகைச்சுவையையும் பொழுதுபோக்கையும் ஒதுக்கிவிடாமல், இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்திருப்பது குடும்ப ரசிகர்களைக் கவரக்கூடிய அம்சம்.
திரைக்கதையில் சில குழப்பங்கள், காட்சிகளின் தொடர்ச்சியில் சிறிய தடுமாற்றங்கள் இருந்தாலும், படத்தின் நோக்கம் பார்வையாளர்களை மகிழ்விப்பதுதான் என்பதில் இயக்குநர் தெளிவாக இருக்கிறார்.
நயன்தாராவின் தெய்வீகத் தோற்றம், ரெஜினாவின் மிரட்டலான வில்லத்தனம், ஊர்வசி – யோகி பாபுவின் நகைச்சுவை, ஹிப்ஹாப் தமிழாவின் இசை, கோபி அமர்நாத்தின் வண்ணமயமான ஒளிப்பதிவு எனப் பல அம்சங்கள் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன.
‘அரண்மனை’ படங்களின் மூலம் திகில், நகைச்சுவை, பிரம்மாண்டம் ஆகியவற்றை இணைத்து ரசிகர்களுக்கு விருந்தளித்த சுந்தர்.சி., இந்தப் படத்தில் ஆன்மீகத்தையும் அதே கமர்ஷியல் சூத்திரத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்.
சாத்தானின் சவால் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அம்மனின் அருள் அதைவிடப் பெரியது என்பதை நம்பிக்கையுடனும் நகைச்சுவையுடனும் சொல்லும் வண்ணமயமான பொழுதுபோக்குப் படம் – ‘மூக்குத்தி அம்மன் 2’!
ரேட்டிங் 4/5