நடிகர்கள் : அஜய் கார்த்திக், அஞ்சனா நேத்ருன், நட்டி நட்ராஜ், கே.பாக்யராஜ், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி
இசை : மனு ரமேஷன்
ஒளிப்பதிவு : ரவி சக்தி
இயக்கம் : கல்யாண் கே.ஜெகன்
தயாரிப்பு : எம்.ஜி ஸ்டுடியோஸ், 5 ஸ்டார் – ஏபிவி மாறன், கணேஷ் கே.பாபு
வேலை விசயமாக பெங்களூரில் இருந்து சென்னை வரும் நாயகன் அஜய் கார்த்தில், வீடு தேடி அலையும் போது, பாக்யராஜின் வீடு காலியாக இருப்பதை அறிந்து அங்கு செல்கிறார். வசதியான வீடாக இருந்தாலும் குறைவான வாடகைக்கு கிடைப்பதால் அந்த வீடு பற்றிய சில அதிர்ச்சியான உண்மைகள் தெரிந்த பிறகும் அந்த வீட்டில் குடியேறுகிறார். சில நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டில் சில அமானுஷ்யமான விசயங்கள் நடக்கிறது. இதனால் அச்சமடையும் அஜய் கார்த்தில், ஒரு நாள் தன்னைத்தானே கொடூரமாக தாக்கிக் கொண்டு இறப்பதோடு, வீட்டு உரிமையாளரான பாக்யராஜும் அதே இடத்தில் இறந்து கிடக்கிறார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரையும் காவல்துறை அதிகாரி நட்டி, அந்த வீட்டில் விசாரித்துக் கொண்டிருக்கும் போது, இறந்த அஜய் கார்த்திக், திடீரென்று எழுந்து நடக்க, அங்கிருக்கும் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். சிறிது நேரத்தில் நட்டியை எச்சரித்து விட்டு மீண்டும் சரிகிறார் அஜய் கார்த்திக்.
அஜய் கார்த்திக் பற்றி தொடர்ந்து விசாரிக்கும் நட்டிக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருவதோடு, அந்த வீடு பற்றிய சில திடுக்கிடும் தகவல்களும் கிடைக்கிறது. அதை வைத்து அந்த பிரச்சனைக்கு அவர் தீர்வு கண்டாரா ?. அஜய் கார்த்திக்கின் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கான பின்னனி என்ன ?, அந்த வீட்டின் மர்மம் என்ன ? என்பது தான் படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் அஜய் கார்த்திக், இரண்டாவது படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தை அசால்டாக கையாண்டு பாராட்டு பெறுகிறார். முழு படத்தையும் தன் நடிப்பின் மூலம் தாங்க வேண்டிய வேடத்தை சிறப்பாக கையாண்டிருக்கும் அஜய் கார்த்திக், தன் பயத்தையும், நடப்பது என்ன என்று புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போவதையும், தன் உடல் மொழி மற்றும் கண் அசைவுகள் மூலம் கச்சிதமாக செய்திருக்கிறார்.
அஞ்சனா நேத்ரன், நட்டி, கே.பாக்யரஜ், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது பணியை குறையின்றி செய்திருக்கிறார்கள். சில கதாபாத்திரங்கள் எதிர்பார்க்காத திருப்பங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருப்பதால் விரிவாக விளக்க முடியவில்லை என்றாலும், படத்தில் பார்க்கும் போது ரசிகர்களுக்கு செம திரில்லிங்காக இருக்கும்.
ஒளிப்பதிவாளர் ரவி சக்தி, வழக்கமான பேய் படங்கள் போல் கொடூரமான முகத்தையும், கதவு சாத்துவது, விளக்குகள் அனைந்து அனைந்து எரிவது என்ற பழைய பாதையில் பயணிக்காமல், இருள் மற்றும் வெளிச்சத்திற்குள் மறைந்திருக்கும் மனிதர்களின் பயத்தை பிரதிபலிக்கும் வகையில் காட்சிகளை படமாகி படம் பார்ப்பவர்களிடம் பெரும் பயத்தை உண்டாக்கி விடுகிறார்.
மனு ரமேஷனின் பின்னணி இசை அதீத சத்தம் இல்லை என்றாலும் ரசிகர்களின் இதய துடிப்பை அதிவேகத்தில் துடிக்க செய்து விடுகிறது. படத்தொகுப்பாளர் கதிரேஷ் அலகேஷனின் நேர்த்தியான தொகுப்பு காட்சிகளில் இருக்கும் பதட்டத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் கல்யாண் கே.ஜெகன், பேய் கதையை உளவியல் ரீதியாக கையாண்டிருப்பதோடு, திகில் காட்சிகளை வித்தியாசமான முறையில் கையாண்டு ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.
கதை ஒரே இடத்தில் நகர்வது போன்ற உணர்வு ஏற்பட்டாலும், ஒரு வீட்டையும், சில கதாபாத்திரங்களையும் வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரம் ரசிகர்களை அச்சத்தில் உறைய வைப்பவதோடு, எந்த நேரத்தில், எப்படிப்பட்ட திகிலை கொடுக்கப் போகிறார்கள், என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்களை படத்துடன் பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் கல்யாண் கே.ஜெகன், இந்த ‘டார்க்’ திகில் மற்றும் திரில்லர் பட விரும்பிகளை திகிக்கை வைத்திருக்கிறார்.
ரேட்டிங் 3.5/5