’அன்பே டயானா’ விமர்சனம்

நடிகர்கள் : பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, சுதர்சன், இஸ்மத் பானு
இசை : பரத் சங்கர்
ஒளிப்பதிவு : ஷெல்லி கேலிஸ்ட்
இயக்கம் : பாரி இளவழகன்
தயாரிப்பு : மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ், ஈரா எண்டர்டெயின்மெண்ட் – சத்யா கரிகாலன், ஈரா சரவணன், யுவராஜ் கணேசன்

சென்னை, பெரம்பூரில் வசிக்கும் நாயகன் பாரி இளவழகன், அதே பகுதியில் வசிக்கும் ஆங்கிலோ இந்திய பெண்ணான நாயகி ரம்யா ரங்கநாதனை, கல்லூரி காலம் முதலே காதலித்து வருகிறார். பாரியின் காதலை ஏற்க மறுக்கும் ரம்யா ரங்கநாதன், அவருடன் நட்பாக பழகி வருகிறார்.

இதற்கிடையே, பாரி இளவழகனின் கண்டிப்பான அம்மா ரோஜா, தனது தம்பி மகளை பாரிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். ஒன் சைடு காதலால் வீட்டில் காதல் பற்றி சொல்ல தயங்கும் பாரி, ரம்யாவை மறக்க முடியாமல் தவிக்கிறார். அதே சமயம், அவரது அம்மா திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு வர பாரி தன் காதல் பற்றி சொல்லாமல் இருக்கிறார். பத்திரிகை அடித்து அனைவருக்கும் கொடுக்கும் நேரத்தில், பாரியின் காதலை ரம்யா ஏற்றுக் கொள்வதோடு, அவரது பெற்றோர்களிடம் சொல்லி சம்மதமும் வாங்கி விடுகிறார்.

திருமண ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட, ரம்யாவின் காதலை மறுக்க முடியாமல் தவிக்கும் பாரி, இறுதியில் காதலில் வெற்றி பெற்றாரா? அல்லது அம்மா பார்த்த பெண்ணை மணந்தாரா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் பாரி இளவழகன், பக்கத்து வீட்டு பையன் போல் எளிமையான தோற்றத்தோடும், இயல்பான நடிப்போடும் கவனம் ஈர்க்கிறார். பல வருடங்களாக காத்துக் கொண்டிருந்த காதல் கைகூடும் போது, பலவித குழப்பங்களால் அதை ஏற்க தயக்கம் காட்டுவது முதல் கண்டிப்பான அம்மாவுக்கு கட்டுப்பட்டு காதலை சொல்ல முடியாமல் தவிப்பது வரை, எந்தவித அலட்டல் இல்லாமல் அசால்டாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ரம்யா ரங்கநாதன், ஆங்கிலோ இந்திய பெண் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துவதோடு, ஆங்கிலம் கலந்த சென்னை தமிழிழை அசத்தலாக உச்சரித்திருக்கிறார். தன்னிடம் இருந்து விலகிச்செல்ல முயற்சிக்கும் காதலனை மிரட்டுவது, காதலரின் தந்தையிடம் அதிரடியாக பேசுவது என்று தன் நடிப்பின் மூலம் பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ரம்யா ரங்கநாதன், தன் சிறப்பான நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சேத்தன், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரோஜா, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பரிதாபங்கள் கோபி வழக்கமான கமர்ஷியல் பட கதாபாத்திரங்கள் என்றாலும், அதில் தங்களது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்து விடுகிறார்கள்.

மாங்கபாபு கதாபாத்திரத்தில் சில காட்சிகள் வந்தாலும் செல் முருகன், தன் பங்கிற்கும் சிரிக்க வைக்கிறார். நாயகனின் மாமா பெண் வேடத்தில் நடித்திருக்கும் நிகிலா சங்கர், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் இஸ்மத் பானு, சகோதரனாக நடித்திருக்கும் சுதர்சன் காந்தி, நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் நடிகர், நடிகை என அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாகவும், திரைக்கதைக்கு பலமாகவும் பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், பெரம்பூர் பகுதியை அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கிறார். பார்த்து பழக்கப்பட்ட இங்களாக இருந்தாலும், தன் கேமரா மூலம் அப்பகுதியின் அழகியலை அதிகரிக்கச் செய்திருக்கும் ஒளிப்பதிவாளஃர் ஷெல்லியின் பருந்து கோணக் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. பரத் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இதமாக பயணிக்கிறது. பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் இயல்பு தன்மைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. கதாபாத்திரங்களும், அவர்களது வசனங்களும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிப்பதை உணர்த்து காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் பார்த்தா.எம்.ஏ, படத்தை தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார்.

சாதாரண காதல் கதை என்றாலும், இயல்பான திரைக்கதை மூலம் ஜாலியான பொழுதுபோக்கு படமாக இயக்கியிருக்கும் பாரி இளவழகன், எளிமையான வசனங்கள் மூலம் சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.

முதல் பாதி மிக மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் காமெடி சரவெடி மூலம் படத்தை எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தில் நகர்த்தி செல்லும் இயக்குநர் பாரி இளவழகன், தான் வடிவமைத்த கதாபாத்திரங்களின் தனித்துவத்தின் மூலம் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து, ‘அன்பே டயானா’ படத்தை ரசிக்க வைத்து விடுகிறார்.

ரேட்டிங் 3.5/5

anbe diana movie reviewanbe diana reviewtamil movie anbe diana reviewஅன்பே டயானா சினிமா விமர்சனம்அன்பே டயானா திரைப்பட விமர்சனம்அன்பே டயானா விமர்சனம்