’ஐ , நோபடி’ (I,Nobody) விமர்சனம்

நடிகர்கள் : பிரித்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து, ஹக்கிம் ஷாஜகான், அசோகன், விஜயராகவன், மதுபால், சங்கர் ராமகிருஷ்ணன், நக்ஷத்ரா
இசை : ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : தினேஷ் புருஷோத்தமன்
இயக்கம் : நிசாம் பஷீர்
தயாரிப்பு : பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் & E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் – சுப்ரியா மேனன், முகேஷ் ஆர். மேத்தா, சி.வி. சாரதி

மூன்று பேர் வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கிறார்கள். அப்போது அந்த வங்கியில் இருக்கும் பிரித்விராஜ் சுகுமாரனின் முகத்தை மூடி பிணைக் கைதியாக தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். ஒரு இடத்தில் அவரை இறக்கி விடும்போது, மூவரில் ஒருவரது ஆதாரம் பிரித்விராஜ் கையில் சிக்குவதோடு, விபத்தில் சிக்கி மூன்று பேரும் இறக்கிறார்கள்.

பிரித்விராஜிக்கு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் திருடர்கள் யார் ? என்பதை கண்டுபிடிக்கும் போலீஸ், அவர்கள் இறந்துவிட்டதால், அவர்கள் கொள்ளையடித்த பணத்தை கைப்பற்ற முடியாமல் தவிக்கிறது.

இந்த நிலையில், அந்த வங்கியில் தனக்கும், தனது குடும்ப நபர்களுக்கோ கணக்கு உள்ளிட்ட எந்தவித தொடர்பும் இல்லாத பிரித்விராஜ் அங்கு சென்றதோடு, வங்கி ஊழியர்களிடம் எந்தவித உதவியும் கேட்காமல் நெடுநேரமாக அங்கு இருந்தது ஏன் ? என்ற கேள்வி எழுகிறது. அந்த கேள்வியால் பிரித்விராஜுக்கும் அந்த கொள்ளையில் சம்மந்தம் இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. அதே சமயம், ஊடகங்கள் அந்த சந்தேகத்திற்கு திரைக்கதை அமைத்து வெளியிடும் செய்திகளால், பிரித்விராஜுக்கு மட்டும் இன்றி அவரது குடும்பத்தாருக்கும் பல சிக்கல்கள் ஏற்படுகிறது.

சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு போராடும் பிரித்விராஜின் செயல்கள் புதிய சிக்கல்களை உருவாக்கி, தப்பிக்க முடியாத அளவுக்கு பெரும் சிலந்திவலையில் அவரை சிக்க வைக்க, அதில் இருந்து அவரும், அவரது குடும்பத்தாரும் எப்படி மீண்டார்கள் ?, சம்மந்தமே இல்லாத அந்த வங்கிக்கு பிரித்விராஜ் சென்றது ஏன் ?, கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே போனது ?, அதை கண்டுபிடிக்க போலீஸ் ஒருபக்கம் முயற்சித்தாலும், மேலும் சிலரும் முயற்சிக்க, யாரிடம் பணம் கிடைத்தது ?, ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் தான் படத்தின் மீதிக்கதை.

வங்கி கொள்ளை சம்பவம் தான் கதையின் மையக்கரு. ஆனால், கொள்ளையடித்தவர்களை தவிர்த்துவிட்டு, அதற்கு சம்மந்தமே இல்லாத ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு, காட்சிக்கு காட்சி திருப்பம், நொடிக்கு நொடி திரில்லர் என்று எழுத்தாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், நட்சத்திரங்கள் என ஒட்டுமொத்த ’ஐ , நோபடி’ படக்குழுவே மிகப்பெரிய திரை மாயாஜாலத்தை நிகழ்த்தி பார்வையாளர்களின் கவனம் முழுவதையும் ஈர்த்து விடுகிறார்கள்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் பிரித்விராஜ் சுகுமாரன், ஆரம்பக் காட்சியில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழையும் போதும் சரி, கொள்ளையர்களின் பிணைக் கைதியாக வீக்கமடைந்த கண்களோடு அறிமுகமாவதும் சரி, புரியாத புதிராக பல விசயங்களை தனது மெளனத்தின் மூலமாகவே யோசிக்க வைத்திருக்கிறார். தன் இளைய மகளிடம் மட்டுமே பேசிக்கொண்டு தனது வாழ்க்கை சம்பவங்களை கதையாக விவரிப்பதும், தனக்கு எதிரான சிக்கல்களில் இருந்து விடுபட சாமானியனாக போராடுவதும், என்று நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அதே சமயம், அதீதமான ஆக்‌ஷன் காட்சிகள், மசாலத்தனத்தோடு இருந்தாலும், அதில் நம்பகத்தன்மையோடு நடித்து கவனம் ஈர்க்கவும் செய்திருக்கிறார்.

பிரித்விராஜின் மனைவியாக நடித்திருக்கும் பார்வதி திருவோத்து, முதுமை எட்டிப்பார்க்கும் முகத்தோடு வலம் வந்தாலும், கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக, இயல்பான நடிப்பு மற்றும் எக்ஸ்பிரஷன்கள் மூலம் சிறந்த நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

காவலர் கதாபாத்திரத்தில் கொள்ளை பணத்தை தேடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹக்கிம் ஷாஜகானின் அமைதியான முகமும், தேடல் மிக்க நடிப்பும் கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.

ஜேக்கப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அசோகன், முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜயராகவன், டி.எஸ்.பியாக நடித்திருக்கும் சங்கர் ராமகிருஷ்ணன், வங்கி கொள்ளை வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு அதிகாரியாக நடித்திருக்கும் மதுபால், பிரித்விராஜின் மூத்த மகளாக நடித்திருக்கும் ஜியா மற்றும் இளைய மகளாக நடித்திருக்கும் சிறுமி அனைவரும் திரைக்கதையின் பதட்டத்தை அதிகரிக்கும் வகையிலும், காட்சிகளின் திருப்பங்களுக்கு ஏற்றபடியுமான நடிப்பை வழங்கியிருப்பதோடு, தங்களது சிறு சிறு உடல் மொழி மூலம் பார்வையாளர்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்த்து விடுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கேமரா, சாலையில் நிகழும் வாகன விபத்தை பிரமாண்டமாக காட்சிப்படுத்துவது முதல், பேருந்தில் நடக்கும் சண்டைக்காட்சி, மின்தூக்கியில் நடக்கும் சண்டைக்காட்சி, ஒரு அறைக்குள் நடக்கும் சண்டைக்காட்சி என அனைத்துவிதமான சண்டைக்காட்சிகளையும் பிரமிக்கும்படி படமாக்கியிருக்கிறது.

ஒளிப்பதிவாளரின் கேமரா மேஜிக்கை மிஞ்சும் அளவுக்கு படத்தொகுப்பாளர் ரமீஸ் எம்.பி-யின் பணி அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களை பார்வையாளர்களிடத்தில் கடத்தும் வகையில், வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட காட்சிகளை ஒரே கண்ணோட்டத்தில் தொகுத்து, படத்தின் நீளத்தால் சோர்வு ஏற்படாத வகையில் காட்சிகளை வேகமாக நகர்த்திச் சென்றாலும், காட்சிகளின் திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களின் படபடப்பை அதிக்கரிக்கச் செய்கிறார்.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து பயணித்திருப்பதோடு, அமைதியான சூழல்களின் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யத்தை குலைக்காமல் பயணித்து படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

யானிக் பென், கலை கிங்சன் மற்றும் அமித் ஜாலி பாஸ்டின் ஆகியோரது சண்டைக்காட்சிகள் மிரட்டல். இரண்டாம் பாதியின் பெரும்பாலான காட்சிகளை இவர்களது சண்டைக்காட்சிகள் ஆக்கிரமித்தாலும், ஒவ்வொன்றையும் ஒவ்வொரு ரகத்தில் படமாக்கி பாராட்டு பெறுகிறார்கள்.

எழுத்தாளர் சமீர் அப்துல், வங்கி கொள்ளை என்ற மிகப்பெரிய குற்ற சம்பவத்தை வைத்துக்கொண்டு, அதற்கு சம்மந்தமே இல்லாத ஒரு சாமனியனின் வாழ்க்கை போராட்டத்தையும், அவரது குடும்ப சிக்கல்களையும், காட்சிக்கு காட்சி பரபரப்போடும், நொடிக்கு நொடி பதட்டத்தோடும் பயணிக்க வைத்த விதம் பிரமிக்க வைக்கிறது. இப்படி ஒரு சிக்கலில் இருந்து நாயகன் எப்படி மீண்டு வரப்போகிறார், என்ற பதட்டம் குறைவதற்குள்ளாகவே, அவரை அடுத்த சிக்கலில் சிக்க வைத்து, திரைக்கதையில் இருக்கும் பதட்டத்தை தொடர்ந்து அதிகரித்திருக்கும் எழுத்தாளர் சமீர் அப்துல், இறுதிவரை அந்த பதட்டம் குறையாமல் படத்தை நகர்த்தி செல்கிறார்.

படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதிக் காட்சி வரை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நர்த்தி செல்லும் இயக்குநர் நிசாம் பஷீர், சிறு குழந்தைகளை வைத்துக் கூட ரசிகர்களிடம் பதட்டத்தை ஏற்படுத்தி விடுகிறார். படம் முழுவதும் அடுத்தது என்ன நடக்கும் ? என்ற கேள்விகள் நிரம்பியிருக்க, ஒவ்வொரு கேள்விக்குமான பதிலை மிக சுவாரஸ்யமாக கொடுத்திருக்கும் இயக்குநர் முழு படத்தையும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்க வைத்திருக்கிறார்.

ரேட்டிங் 4.5/5
——————————

இரண்டாம் பாதியில் வரும் அதிகப்படியான சண்டைக்காட்சிகள் சில இடங்களில் பார்வையாளர்களை சோர்வடைய செய்வது சற்று குறையாக இருந்தாலும், அதை வித்தியாசமான முறையில் படமாக்கியது மற்றும் அதன் வேகம், அந்த குறையை மறக்கடிக்க செய்து விடுகிறது. இருந்தாலும், சண்டைக்காட்சிகளையும், அதன் நீளத்தையும் சற்று குறைத்திருந்தால் எழுத்தாளரின் திறன் இன்னும் மேலோங்கி நின்றிருக்கும்.

வித்தியாசம் என்ற பெயரில் பார்வையாளர்களை குழப்பமடைய செய்யும் ‘இன்செப்ஷன்’ (Inception) போன்ற ஹாலிவுட் படங்களை கொண்டாடும் மக்கள், நம்ம உள்நாட்டில் உருவாகியிருக்கும் எழுத்தாளர் சமீர் அப்துலின் புத்திசாலித்தனமான எழுத்து மற்றும் இயக்குநர் நிசாம் பஷீரின் நுணுக்கமான யோசனைகள் கொண்ட இத்தகைய படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள் என்பது உறுதி.

மொத்தத்தில், ‘ஐ , நோபடி’ (I,Nobody) மிரள வைக்கும் கிரைம் திரில்லர்.

ரேட்டிங் 4.5/5

i nobody movie reviewi nobody reviewஐ நோபடி திரைப்பட விமர்சனம்ஐ நோபடி விமர்சனம்