‘யாத்திசை’ விமர்சனம்

நடிகர்கள் : ஷக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சுபத்ரா, சமர், வைதேகி அமர்நாத்
இசை : சக்கரவர்த்தி
ஒளிப்பதிவு : அகிலேஷ் காத்தமுத்து
இயக்கம் : தரணி ராசேந்திரன்
தயாரிப்பு : கே.ஜே.கணேஷ்

புதுமுக இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், புதுமுக நடிகர்களின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியிருக்கும் ‘யாத்திசை’ திரைப்படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.

யாத்திசை என்றால் தென் திசை என்று அர்த்தம். தென் தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னன் ரணதீர பாண்டியனை மையப்படுத்திய கதை என்பதால் இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சோழர்களையும், சேரர்களையும் போரில் வீழ்த்தும் ரணதீர பாண்டியன், சோழ நாட்டை கைப்பற்றி ஆட்சி செய்கிறார். போரில் சோழர் படைக்கு உதவிய சிறுகுடியான எயினர்கள் பாலை நிலத்திற்கு விரட்டியடிக்கப்பட்டு, அங்கு வேட்டையாடி சமூகமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதற்கிடையே எயினர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் கொதி, பதுங்கி வாழ்ந்தது போதும், மீண்டும் சொந்த நாட்டுடன், அரசாட்சி செய்யும் இனமாக எயினர் இனம் வாழ வேண்டும், என்று ஆசைப்படுகிறார். அதை தொடர்ந்து தன் சமூக மக்களை ஒன்றிணைத்து படை திரட்டும் கொதி, அப்படை மூலம் ரணதீர பாண்டியனை வீழ்த்தி விட்டு, சோழ கோட்டையை கைப்பற்ற திட்டம் தீட்டுகிறார். அவரது திட்டம் மாற்றங்களை நிகழ்த்தியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

தமிழ் சினிமாவில் பல சரித்திர வரலாற்று படங்கள் வந்திருக்கிறது. அவை அனைத்தும் ஒரே பாணியில் இருக்கும். ஆனால், இந்த ‘யாத்திசை’ முற்றிலும் வித்தியாசமான முறையில் இருப்பதோடு, தமிழர்களின் அக்காலத்து வாழ்க்கையை மிக இயல்பாக காட்சிப்படுத்தி கவனம் ஈர்க்கிறது.

ரணதீர பாண்டியன் வேடத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஷக்தி மித்ரன் மற்றும் கொதி வேடத்தில் நடித்திருக்கும் சேயோன், இருவரும் கதாபாத்திரத்திற்காக மிக கடினமாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுடைய தோற்றம் நடிப்பு அனைத்துமே ஆச்சரியப்பட வைக்கிறது.

மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகளும் புதுமுகங்களாக இருந்தாலும் அவர்களுடைய நடிப்பு அவர்களின் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் இருக்கிறது.

அனுபவம் வாய்ந்த குரு சோமசுந்தரத்தை முகம் தெரியாத அளவுக்கு சிறப்பு தோற்றத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. சுபத்ராவின் கதாப்பாத்திரமும் அவரது நடிப்பும் நன்று.

ஒளிப்பதிவாளர் அகிலேஷ் காத்தமுத்து, இசையமைப்பாளர் சக்கரவர்த்தி, படத்தொகுப்பாளர் மகேந்திரன் கணேசன், உடை வடிமைப்பாளர் வெ. சுரேஷ் குமார், கலை இயக்குநர் இரஞ்சித் குமார், சண்டைக்காட்சி இயக்குநர் ஓம் சிவ பிரகாஷ் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களது பணியை மிக சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். இவர்களின் கூட்டு முயற்சி படத்தை சர்வதேச அளவிலான தரத்தை கொடுத்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் தரணி ராசேந்திரன், தனக்கு கிடைத்த வசதிகளை வைத்துக்கொண்டு இப்படி ஒரு பிரமாண்ட படத்தை மக்களுக்கு நெருக்கமாக கொடுத்திருப்பது தான் இப்படத்தின் மிகப்பெரிய பலம்.

சங்ககால தமிழ் வார்த்தைகளை வசனங்களாக பயன்படுத்திய விதம், படத்தில் காட்டப்படும் பெண் போராளி, கூர்மையான வசனங்கள், கிராபிக்ஸ் காட்சிகளுடன் லைவ் லொக்கேஷன் காட்சிகளை இணைத்தது என படத்தில் அனைத்தையும் மிக சரியான அளவில் கொடுத்து இயக்குநர் அசத்தியிருக்கிறார்.

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உருவான இந்த படம், கடந்த ஒரு வாரமாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்புகள் அத்தனைக்கும் நியாயம் சேர்க்கும் வகையில் மிக சிறப்பாக இருக்கும் ‘யாத்திசை’ உலக தரத்திலான புதிய முயற்சி.

ரேட்டிங் 4/5

director tharani rasendrankollywood movie yathisai reviewproducer ganeshtamil movie yathisai reviewyathisai review