விக்ரம் வேதா – விமர்சனம்

போலீஸ்-ரவுடி என்கவுன்ட்டர் கதை தான் என்றாலும் அதில் புதிய அணுகுமுறையுடன் வெளியாகியுள்ள படம் தான் ‘விக்ரம் வேதா’..

என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரி மாதவன் (விக்ரம்).. டீம் லீடர் பிரேம் தலைமையில் நகரின் மிகப்பெரிய ரவுடியான விஜய்சேதுபதி (வேதா) அன் கோவை போட்டுத்தள்ள களமிறங்குகிறார்கள்… ஆரம்பத்தில் விஜய்சேதுபதியின் தம்பி கதிர் உள்ளிட்ட சிலர் அதில் காலியாகின்றனர்.. பதிலுக்கு பிரேம் பழி தீர்க்கப்படுகிறார். அந்த மோதலில் கதிரின் காதலி வரலட்சுமி உள்ளிட்ட விஜய்சேதுபதி தரப்பினர் சிலர் பலியாகின்றனர்..

நண்பன் பிரேமின் மரணத்துக்கு பழி தீர்க்கும் விதமாக உக்கிரமாக விஜய்சேதுபதியை தேடுகிறார் மாதவன். விஜய்சேதுபதி தரப்பு லாயராக இருக்கும் தனது மனைவி ஷ்ரத்தா ஸ்ரீநாத் மூலமாக அவருக்கு தெரியாமலேயே வேவு பார்த்து அதனால் மனைவியின் கோபத்துக்கும் கூட ஆளாகிறார் மாதவன்.. ஒரு வழியாக விஜய்சேதுபதியை நெருங்குகிறார்.

அதேசமயம் மாதவனிடம் இருமுறை கையும் களவுமாக சிக்கும் விஜய்சேதுபதி, விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் கதை சொல்வதுபோல, தனது தரப்பிலும் போலீஸ் தரப்பிலும் என்ன நடக்கிறது என்பதை கதையாக சொல்லி நியாயம் கேட்கிறார்..

மாதவனுக்கு உண்மையான சில நியாயங்கள் புரியவரும்போது, நிலைமை கைமீறி போகிறது. இதை மாதவன் சமாளித்தாரா..? விஜய்சேதுபதியை அவரால் என்ன செய்ய முடிந்தது என்பதை சில அதிர்ச்சிகரமான திருப்பங்களுடன் விவரிக்கிறது மீதிக்கதை.

ரவுடிக்கு அவன் தரப்பு நியாயம், போலீஸுக்கு அவர்கள் தரப்பு நியாயம் என இரண்டு பக்கங்களையும் சரியாக அலசி இருக்கிறது இந்த விக்ரம் வேதா.. மாதவனும் விஜய்சேதுபதியும் இந்த இரண்டு கதாபாத்திரங்களை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள்.. இருவருமே துரோகங்களை சந்திக்கும் தருணத்தை சரியாக உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறார்கள்.. போலீஸ்-ரவுடி இருவருக்குமான உடல்மொழியில் இருவருமே கெத்து காட்டுகிறார்கள்..

மாதவனின் மனைவியாக கோபமும் ரொமான்ஸுமாக ரசிக்கவைக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஒரு லாயராக தனது பக்க நியாயம் பற்றி கணவரிடம் வாதாடும் காட்சிகளில் அவரது நடிப்பு சிறப்பு.. இன்னொரு நாயகியாக வரலட்சுமி.. தன்னை விட வயது குறைந்த கதிரை காதலிப்பதும், விஜய்சேதுபதி எது சொன்னாலும் அதற்கு ‘அக்காங்’ என திரும்ப திரும்ப பதில் சொல்வதுமாக சிரிக்கவும் சிலிர்க்கவும் வைக்கிறார்.

கதிருக்கு இதில் சொல்லிக்கொள்ளும்படியான ‘நச்’ கேரக்டர்.. விஜய்சேதுபதியின் தம்பியாக தனது பொறுப்பை திறம்பட செய்திருக்கிறார். வில்லன் தரப்பில் ரவுடி கும்பலின் தலைவராக ஹரீஸ் பெராடி, கையாட்களான விவேக் பிரசன்னா ஆகியோரும் பொருத்தமான தேர்வு. போலீஸ் என்கவுன்ட்டர் டீமில் சைமன் கேரக்டரில் வரும் பிரேம் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள அனைத்து காவலர்களும் ஒவ்வொரு விதமாக நம் கவனம் ஈர்க்கிறார்கள்..

விஜய்சேதுபதி-மாதவன் இருவருக்குமான வசன காட்சிகள் பிரமாதம்.. தனநனநா என அவ்வபோது பின்னணி இசையிலே பயத்தை ஏற்படுத்துகிறார் இசையமைப்பாளர் சாம். ‘வாழ்க்க வளைஞ்சு நெளிஞ்சு’ பாடல் கேட்கும்போதே சுறுசுறு என இருக்கிறது.. அதேசமயம் அந்த குத்துப்படல் தேவையில்லாத ஒன்று.. மனிதர்களின் கருப்பு வெள்ளை பக்கங்களை புதுவிதமான கலரில் காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத்.

போலீஸ் அதிகாரிகள் நடத்தும் என்கவுன்ட்டர்களில் எந்த அளவுக்கு நியாயமும் மக்களின் பாதுகாப்பிற்கான ஆதரவும் இருக்கிறது என்பதைவிட, அதில் போலீஸ் அதிகாரிகளின் சொந்த வாழ்கை சுயநலம் தான் அதிகம் தலைவிரித்து ஆடுகிறது என்பதை பொட்டில் அடித்தாற்போல பளிச்சென சமரசம் பண்ணிக்கொள்ளாமல் சொல்லியிருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி.

MadhavanPushkar GayathriVijay SethupathiVikram Vedhaபுஷ்கர்-காயத்ரிமாதவன்விக்ரம் வேதாவிஜய்சேதுபதி