விஜய் சேதுபதியும் கிருஷ்ணாவும் கிராமத்தில் வேலைக்கு போகாமல் ஊர்சுற்றும் நண்பர்கள்… கிருஷ்ணா சுனைனாவை காதலிக்க, விஷயம் அறிந்த சுனைனாவின் அண்ணன் மதுசூதனன் கிருஷ்ணாவை எச்சரிக்க வருகிறார். அப்போது கிருஷ்ணாவை காப்பாற்ற ஏற்படும் கைகலப்பில் எதிர்பாராத விதமாக விஜய்சேதுபதியால் கொல்லப்படுகிறார் மதுசூதனன்.
இந்த விஷயத்தை வெளியே தெரியாமல் இருவரும் பொத்திவைக்கிறார்கள். இதற்கிடையே மதுசூதனனின் முன்னாள் எதிரியான அவரது பார்ட்னரின் தாக்குதலில் இருந்து மதுசூதனன் குழந்தையை காப்பாற்றுவதன் மூலம், தன்னால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கே நெருக்கமானவராக மாறுகிறார் விஜய்சேதுபதி..
அண்ணன் மரணத்தால் வாட்டும் சுனைனாவின் ஆற்றாமையை காண சகிக்காமல், விஜய்சேதுபதியிடம் கொலை சம்பந்தமாக மனம் புண்படுமாறு கிருஷ்ணா பேச, இருவரும் மனக்கசப்பால் பிரிகிறார்கள். சூழ்நிலையால் எதிரியின் கையாளாக மாறுகிறார் கிருஷ்ணா..
நண்பர்கள் இருவருக்கும் அவர்கள் சார்ந்துள்ளவர்களை முன்னிட்டு மோதல் நடக்கிறது. மோதலின் உச்சத்தில் விஜய்சேதுபதி தான் கொலைகாரன் என்கிற உண்மையை உடைத்துவிடுகிறார் கிருஷ்ணா.. உண்மை தெரிந்தபின் என்ன நடக்கிறது என்பது க்ளைமாக்ஸ்..!
தேவையில்லாமல் வார்த்தையை விடுவதும், பின் விளைவை யோசிக்காமல் கோபம் கொள்வதும் கேடு தரும் என்பதைத்தான் குமரி மாவட்ட கதைக்களத்தில் வன்மமாக சொல்லியிருக்கிறார்கள்.
ராதா என்கிற கேரக்டரில் நண்பனுக்காக, பழக்கத்திற்காக எதையும் செய்யத்துணியும் கேரக்டரில் விஜய்சேதுபதி சரியாக பொருந்தியிருக்கிறார். முணுக்கென்று எட்டிப்பார்க்கும் கோபம், சிரிக்காமல் எப்போதும் சீரியசாக இருக்கும் முகம், எதிரிகளை அடிக்கும் மரண அடி என ஒரு கிராமத்தின் நியாயமான சண்டியராக வாழ்ந்திருக்கிறார் விஜய்சேதுபதி.
ஆத்திரப்படுவதும் அவசரப்படுவதும் என எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்கும் சூழ்நிலைக்கைதியாக கிருஷ்ணாவிடமும் குறைசொல்லமுடியாத நடிப்பை காணமுடிகிறது. கிராமத்து அழகு குயிலாக வரும் சுனைனா காதல். கோபம், பாசம் என எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்கிறார்.
கோலிசோடா மதுசூதனின் உக்கிரமான நடிப்பும் அவரது பார்ட்னராக வந்து அனைத்து கலகத்துக்கும் காரணமாக அமையும் அவரது நண்பரின் நரித்தனமான நடிப்பும் படத்தின் கதையை நகர்த்துவதற்கு உதவுகின்றன. கதையோடு பயணித்திருக்கும் போஸ் வெங்கட், ஸ்ரீரஞ்சனி, பாண்டியநாடு முத்துராமன், வினோதினி என மற்ற நடிகர்களும் கிராமத்து யதார்த்த மனிதர்களாக, அந்த வட்டார பேச்சு வழக்குடனேயே உலா வருவது படத்திற்கு இன்னும் பலம் சேர்க்கிறது.
குமரி மாவட்ட அழகை அள்ளிவரும் பாலபரணியின் ஒளிப்பதிவும் தமனின் இசையும் ஒரு கிராமத்து அத்தியாயத்தை அழகாக நகர்த்துகின்றன. சலிப்பு ஏற்படுத்தாத சண்டைக்காட்சிகள் ஒவ்வொன்றிலும் அனல் பறக்கிறது. கோபம் குறை, வன்மம் தவிர் என்கிற சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்தை வலியுறுத்தி படம் எடுத்திருக்கும் இயக்குனர் ஜெயகிருஷ்ணா பாராட்டுதலுக்கு உரியவர். வன்மம் பார்க்கவேண்டிய படம்.