நடிகர்கள் : ஷாந்தனு, கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு, சஞ்சய் சரவணன், தீபா சங்கர், அருள்தாஸ், பி.எல்.தேனப்பன்
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு : வெற்றிவேல்
இயக்கம் : விக்ரம் சுகுமாரன்
தயாரிப்பு ள் : கண்ணன் ரவி குரூப்
’மதயானை கூட்டம்’ படத்திற்கு பிறகு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘இராவண கோட்டம்’ படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மேலத்தெரு, கீழத்தெரு என்று தெருக்களில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும், மனதில் எந்தவித ஏற்றத்தாழ்வும் இன்றி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக ஒற்றுமையாக இருக்கும் கிராம மக்களை பிரிக்க அரசியல்வாதிகள் சதி திட்டம் போடுகிறார்கள். நட்புக்காக உயிரையும் கொடுக்கும் நண்பர்களான மேலத்தெரு ஷாந்தனுவும், கீழத்தெரு சஞ்சய் சரவணனும், அரசியல்வாதிகளின் சதி திட்டத்தால் உயிரை பறிக்கும் பகை கொண்டவர்களாக மாறுகிறார்கள்.
இவர்களுடைய பகை மொத்த கிராமத்தையே பற்ற வைக்கும் தீயாக மாற, இறுதியில் அரசியல்வாதிகளின் சதி திட்டம் வெற்றி பெற்றதா? அல்லது சதியை அறிந்து ஷாந்தனுவும், சஞ்சய் சரவணனும் மனம் மாறினார்களா? என்பதை சொல்வவது தான் ‘இராவண கோட்டம்’.
சுமார் 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாயகனாக நடித்திருக்கும் ஷாந்தனு, கடினமாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. இராமநாதபுர மாவட்ட வட்டார தமிழ் பேசி நடித்திருக்கும் ஷாந்தனு ஆக்ஷன், காதல், காமெடியோடு இல்லாமல் இராமநாதபுரம் மாவட்ட வட்டார தமிழை மிக நேர்த்தியாக பேசி நடித்து கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ’கயல்’ ஆனந்தி, தனது குழந்தைத்தனமான சிரிப்பு, பேச்சு என வழக்கமான பாணியில் வந்து போகிறார்.
படத்தின் இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் சஞ்சய் சரவணன், முக்கிய வேடத்தில் நடித்திருப்பது முதல் முறை என்றாலும் அதை முகத்தில் காட்டாமல் நடித்திருக்கிறார்.
மேலத்தெரு மக்களின் தலைவராக நடித்திருக்கும் பிரபு, கீழத்தெரு மக்களின் தலைவராக நடித்திருக்கும் இளவரசு இருவரும் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரங்களை கவனிக்க வைக்கிறார்கள்.
எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் அருள்தாஸ், அமைச்சராக நடித்திருக்கும் பி.எல்.தேனப்பன் இருவரும் கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருக்கிறார்கள். ஆடை வடிவமைப்பாளர் சத்யா என்.ஜே வித்தியாசமான தோற்றத்தில் கவனிக்க வைத்தாலும், குறைவான வசனம் மற்றும் சரியான வாய்ப்பு இல்லாததால் மனதில் நிற்கவில்லை.
ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் கதையோடு பயணித்தாலும் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கவில்லை. குறிப்பாக இரு சமூகத்தை சேர்ந்த தலைவர்களின் இறப்பையும், அவர்களது இறுதி ஊர்வலத்தையும் காட்டிய விதம் மிகப்பெரிய ஏமாற்றம்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் சுமார் ரகமாகவும், பின்னணி இசை படு மோசமாகவும் இருக்கிறது.
சாதி கலவரத்தின் பின்னணியில் இருக்கும் அரசியல் மற்றும் கார்பரேட் வியாபாரத்தை தோலுரித்து காட்டும் விதத்தில் எழுதி இயக்கியிருக்கும் விக்ரம் சுகுமாரன், சீமைக்கருவேலம் மரங்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் அரசியலை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறார்.
படத்தில் இடம்பெற்றிருக்கும் சண்டைக்காட்சிகள், கபடி விளையாட்டு போன்றவற்றிற்காக நடிகர்கள் கடுமையாக உழைத்திருப்பது காட்சிகளில் தெரிகிறது. இன்னமும் சாதி பெயரால் ஏற்படும் கலரவங்களில் பல அப்பாவி இளைஞர்கள் பலியாவதை தடுக்கும் விதத்தில் இப்படத்தை இயக்கியிருக்கும் விக்ரம் சுகுமாரன், மேக்கிங்கில் சொதப்பியிருந்தாலும் தான் சொல்ல வந்த கருத்தை மிக தெளிவாக சொல்லி ரசிகர்களை கவர்கிறார்.
ரேட்டிங் 3/5