மக்களுக்காக போராடியதால் தீவிரவாதி என அடையாளம் குத்தப்பட்ட தோழர் ஆர்யா, பலத்த பாதுகாப்புகளுக்கிடையே அவரது தூக்குத்தண்டனையை நிறைவேற்ற துடிக்கும் ஜெயில் அதிகாரி ஷாம், ஆர்யாவை தூக்கில் போடும் வேலைக்காக நியமிக்கப்பட்ட விஜய் சேதுபதி, ஆர்யாவை காப்பாற்ற வெளியில் இருந்து காய் நகர்த்தும் இயக்க தோழர் கார்த்திகா இவர்களுக்குள் நடக்கும் சதுரங்க ஆட்டம் தான் ‘புறம்போக்கு’.
பிளேபாயாக பார்த்துவந்த ஆர்யாவை அமைதியும் சாந்தமும் கொண்ட கம்யூனிஸ்ட்டாக பார்ப்பதே புதிதாக இருக்கிறது.. அதிரடி சண்டை, கலாய்க்கும் காமெடி என இல்லாமல் பேச்சு, பார்வை என படம் முழுவதும் தோழர் பாலுவாக நடிப்பில் ஒரு புது பரிமாணம் காட்டியிருக்கிறார் ஆர்யா.. அந்த க்ளைமாக்ஸ் காட்சி ஒரு சாம்பிள் போதும் அவரது டெடிகேஷனுக்கு.
ஷாம் எனும் புல்லாங்குழல், ஜனநாதன் போன்றவர்கள் கையில் கிடைக்கும்போதுதான் சுகமான ராகத்தை தருகிறது. டி.ஜி.பி.மெக்காலேவாக ஜெயிலுக்குள் ஷாம் கம்பீரமாக வலம் வரும்போது அந்த கேரக்டரை ஷாமைவிட யார் பெட்டராக செய்துவிடமுடியும் என்கிற கேள்வி எழுவது உண்மை. வெல்டன் ஷாம்.
எமலிங்கமாக வரும் விஜய் சேதுபதிக்கும் இது புது ரூட், புது பயணம் தான். புறம்போக்கு நிலத்தில் அவரது இஷ்டத்துக்கு விளையாடி இருக்கிறார்.. தூக்கு போடும் தொழிலாளியின் மனநிலையை அச்சு அசலாக பிரதிபலித்திருக்கிறார். கார்த்திகா & கோவுடன் சேர்ந்து ஆர்யாவை தப்பிக்க வைக்க இவர் எடுக்கும் முயற்சிகள் திக் திக் ரகம்.
தற்கொலைப்படையாக மாறி நாளை சாகப்போகிறோம் என தெரிந்தும், இன்று நடனம் ஆடி சந்தோஷப்படுகின்ற புரட்சிப்பெண் குயிலியாக கார்த்திகா.. ஆரம்பத்தில் அவரது கேரக்டர் கொஞ்சம் அந்நியப்பட்டு விலகி இருந்தாலும் போகப்போக கதையின் வேகத்தில் உளே நுழைந்துகொள்கிறார். விஜய்சேதுபதியின் அம்மாவாக வரும் ரமா, ஜெயிலராக வரும் கிருஷ்ணமூர்த்தி, இவர்கள் தவிர படத்தில் நடித்துள்ள பல கதாபாத்திரங்கள் படத்தின் இயல்புத்தன்மைக்கு உதவியிருக்கிறார்கள்.
வர்ஷனின் இசையில் படத்தின் பாடல்கள் இரண்டும் இடைச்செருகலாகத்தான் இருக்கின்றன.. ஆனால் பின்னணி இசை ஸ்ரீகாந்த் தேவா என்று என்ட் கார்டு போடும்போது நம்மால் நம்ப முடியவில்லை.. படத்தின் கடைசி அரைமணி நேரத்தை டென்ஷனுடன் நகர்த்துவதில் ஸ்ரீகாந்த்தின் பின்னணி இசை இறங்கி வேலைபார்த்திருக்கிறது.
படத்தின் மிக முக்கியமான கதபாத்திரமாக படம் முழுவதும் ஒரு மௌன சாட்சியாகவே வருகிறது அந்த பிரமாண்ட ஜெயில்.. அதன் இண்டு இடுக்குகளில் எல்லாம் புகுந்து புறப்பட்டிருக்கும் ஏகாம்பரத்தின் கேமரா, ஆர்ட் டைரக்டர் செல்வகுமாரின் கடின உழைப்பை இன்ச் விடாமல் பதிவு செய்திருக்கிறது.
தேவையில்லாத இரண்டு பாடல்களும், கார்த்திகா அன் கோவின் ஆரம்ப கட்ட அமெச்சூர் நடவடிக்கைகளும் இடைவேளை வரை இது எஸ்.பி.ஜனநாதன் படம் தானா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தவே செய்கின்றன. ஆனால் இடைவேளைக்குப்பின் வரும் ஒவ்வொரு காட்சியிலும் ஜனநாதனின் ஆதிக்கம் ரசிகனை கட்டிப்போட்டு விடுகிறது.
குறிப்பாக ஆர்யா தப்பிப்பதற்காக விஜய் சேதுபதி மற்றும் கார்த்திகா போடும் திட்டமும், அதை முறியடிக்க ஷாம் போடும் மாற்றுத்திட்டமும் என கடைசி அரைமணி நேரம் மட்டுமே கொடுத்த காசுக்கு சரியாக போய்விடுகிறது. கூடவே வெளிநாடுகள் தங்களது கழிவுகளை நம் நாட்டில் கொட்டும் மோசடியையும் பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருக்கிறார்.
ஜெயிலில் உள்ள பாதுகாப்புகளை மீறி விஜய்சேதுபதி செய்யும் சில காரியங்கள், அவரை ஷாம் எதுவுமே கண்டுகொள்ளாமல் விடுவது, கார்த்திகாவின் கூட்டத்தினர் துப்பாக்கியுடன் ஆம்னி வேனில் பகிரங்கமாக ஜெயில் பகுதிகளில் சுற்றி வருவது, என லாஜிக் இடிக்கும் பல இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனால் அதையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் ஒதுக்கி தள்ளிவிடும் மனநிலைக்கு ரசிகனை தனது வேகமான திரைக்கதையால் மகுடி ஊதி கொண்டுவந்து விடுகிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். தனது பாதையில் இருந்து மாறாமல் படம் இயக்கியிருக்கும் ஜனநாதனை மனம் விட்டு பாராட்டலாம்.