கூதரா (மலையாளம்) – விமர்சனம்


நடிகர்கள் : மோகன்லால் (சிறப்புத்தோற்றம்), பரத், சன்னி வெய்ன்,டொவினோ தாமஸ், பாவனா, ஜனனி ஐயர், கௌதமி நாயர், ஸ்ரீதர் சிவ்தாஸ், மதுரிமா, ரஞ்சனி (சிறப்புத்தோற்றம்)

இசை : கோபிசுந்தர்

ஒளிப்பதிவு : பப்பு

கதை : வினி விஷ்வா லால்

இயக்கம் : ஸ்ரீநாத் ராஜேந்திரன்

தயாரிப்பு : சாகுல் ஹமீது மரைக்கார்

வெளியீடு : யுடிவி மோஷன் ஃபிக்சர்ஸ்

கதை என்ன?

பரத், சன்னி வெய்ன், டொவினோ தாமஸ் மூவரும் கோழிக்கோட்டில் உள்ள இஞ்சினியரிங் காலேஜில் சேர்கிறார்கள்.. இவர்கள் மூவர் செய்யும் கலாட்டாக்களால் முதலில் பத்து நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள் பின்னரும் அது தொடர்வதால்
அடுத்தமுறை பெற்றோரை வரவழைத்து மூவருக்கும் டி.சி.யை கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள்.

பிரிந்துபோன சில நாட்கள் கழித்து பரத் மத போதகாராகும் பயிற்சியில் ஈடுபட, வசதியான வீட்டுப்பிள்ளையான சன்னி வெய்ன் கால் செண்டரிலும், டொவினோ தாமஸ் அவரது தந்தையுடன் சேர்ந்து பெயிண்டராகவும் வேலைபார்க்கிறார்கள்.

மீண்டும் நண்பர்கள் ஒன்றுகூட மூவரும் சேர்ந்து சிறிதாக சாஃப்ட்வேர் கம்பெனி தொடங்க முடிவு செய்கிறார்கள். தன் அம்மாவுக்கு தெரியாமல் சன்னி வெய்ன் காரை விற்க, அது முதலீடாக மாறுகிறது. ஆனால் ஆறு மாதத்திலேயே வாடகையும் சம்பளமும் கொடுக்க முடியாமல் கம்பெனி தள்ளாடுகிறது.

இந்த நேரத்தில் மூவருக்கும் பாரில் அறிமுகம் ஆகும் மோகன்லால் அவர்களை மீன்பிடிக்க கடலுக்குள் அழைத்து செல்கின்றார். அதன்பின் போட் ஒன்றை வாங்கி தொழில் தொடங்க ஊக்கப்படுத்தி இரண்டு லட்சம் முன்பணமும் தன் கையில் இருந்து தருகிறார். மீதி பதினெட்டு லட்சத்தை ஃபைனான்ஸில் இருந்து வாங்கி செட்டில் செய்தபின், படகை போய் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி.. அது நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி கிடக்கும் குறைந்த அளவே விலை போகக்கூடிய படகு.

மூவரும் மோகன்லால் தங்களை ஏமாற்றிவிட்டதாக அவரிடம் சண்டை போட, அவரோ அந்தப்படகை வைத்து என்னமோ செய்துகொள்ளுங்கள் என அவர்களை துரத்தி விட்டு அங்கிருந்து வேறோர் ஊருக்கு போய்விடுகிறார். ஏற்கனவே ஆரம்பித்த சாஃப்ட்வேர் கம்பெனி தொழிலும் நட்டப்பட, இப்போது அதிகப்படியாக பணம் கொடுத்து ஏமாந்ததால் திரும்பவும் ஃபைனான்ஸுக்கு பணம் கட்ட வேண்டிய சூழல்.. இந்நிலையில் மூவரும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்..

மோகன்லால் இதில் மொத்தமே கால் மணி நேரமே வருவது அதிலும் இடைவேளைக்குப்பின் மட்டுமே வருவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே.. ஆனால் அவரது நீண்ட தலைமுடி, நெடுநாளைய தாடி என அவர் ஏற்றிருக்கும் அந்த நாடோடி டான் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு புதுசு.

பரத், சன்னி வெய்ன், டொவினோ தாமஸ் மூவருக்குமே சம (செம) வாய்ப்பு.. படத்தின் முதல் பாதியில் இவர்களின் காலேஜ் லூட்டிகள் ஜாலியான் கலாட்டா என்றாலும் பரத்தின் துறுதுறுப்பான கேரக்டர் மட்டும் கொஞ்சம் எரிச்சலூட்டவே செய்கிறது..

முதலில் ஜனனி ஐயரை சுற்றுவது, பின்னர் மது ரிமாவுக்கு ரூட் விடுவது, இடைவேளைக்குப்பின் தனது நண்பனின் மனைவி என தெரியாமல் பாவனாவுக்கு காதல் அம்பு வீசுவது என மன்மதராஜாவாக வலம் வந்திருக்கிறார் பரத்.

இயக்குனரின் முதல் படமான ‘செகண்ட் ஷோ’வில் முக்கியமான கேரக்டரில் அறிமுகமாகிய சன்னி வெய்னுக்கு இதிலும் வெயிட்டான கேரக்டர்..காமெடி, கோபம் எல்லாமே இயல்பாக அருகிறது. அதனால்யே சன்னி அடிக்கும் டயலாக்குளுக்கு தியேட்டரில் விசிலும் கைதட்டலும் பறக்கிறது.

டொவினோ தாமஸ் தான் இவர்கள் மூவரிலேயே அமைதியான பிள்ளைப்பூச்சி. முதலில் அப்பாவியாக வரும் இவர் க்ளைமாக்ஸில் பாவனாவின் கணவர் என தெரியவரும்போது அடப்பாவி என சொல்ல வைக்கிறார். குறிப்பாக பட்த்தின் ஆரம்பத்தில் தன்னைப்பற்றி அவர் சொல்லவரும்போது அட வழக்கமான கதை தானே என மற்ற இருவரும் அவரை சொல்லைடாம்ல தடுத்து தாங்களாகவே ஒரு கதையை சொல்வதும், க்ளைமாக்ஸில் அதற்கு நேர்மாறாக அது அமைவதும் புதிய ட்விஸ்ட்.

பாவனா, ஜனனி ஐயர், கௌதமி நாயர், ஸ்ரீதா சிவ்தாஸ், மதுரிமா என நிறைய ஹீரோயின்கள் இருந்தாலும் பாவ முகமாக வரும் கௌதமி நாயரும், புன்னகை முகமாக வரும் ‘ஆர்டினரி’ புகழ் ஸ்ரீதா சிவ்தாஸும் நம்மை சட்டென கவருகிறார்கள்.

அதிலும் கேண்டீனில் அழுதுகொண்டிருக்கும் கௌதமியிடம், பரத் காபி சொல்லவா என ஆதரவாக கேட்க அவரோ அய்யோ.. அதெல்லாம் வேண்டாங்க.. ஐஸ்கிரீம் சொல்லுங்க என்பதும் சாப்பாடு வேண்டுமா என்றால் வேண்டாங்க.. மட்டன் பிரியாணி சொல்லுங்க என்பதுமாக நான்கு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ‘நச்’ கௌதமி.

சிவ்தாஸுக்கும் சன்னிக்குமான லவ் போர்ஷன் க்யூட். ஜனனி ஐயரும், மதுரிமாவும் கல்லூரிக்காட்சிகளோடு சரி.. கிளம்பிவிடுகிறார்கள். இடைவேளைக்கு பின்வரும் பாவனாவுக்கும் பெரிய அளவில் வேலை இல்லை. சன்னியின் அம்மாவாக ‘கடலோர கவிதைகள்’ ரஞ்சனி சில காட்சிகளில் தலைகாட்டி இருக்கிறார்.

முதல் பாதி முழுவதும் கல்லூரியிலே நகர்ந்து விடுவதால் அதில் புதிய விஷயங்கள் ஏதுமில்லை. ஆனால் இரண்டாம் பாதி நாம் எதிர்பார்த்த அளவு நம்மை திருப்திப்படுத்தவில்லை என்றாலும் கொஞ்சம் புதிதாக இருக்கின்றது. குறிப்பாக மூவரும் கடலில் மோகன்லாலுடனும் தனியாகவும் மீன் பிடிக்க செல்வது. கடல் காட்சிகளில் பப்புவின் கேமரா விளையாடி இருக்கிறது.

மெகாஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானுக்கு அறிமுகத்திலேயே ஹிட் தந்த, ‘செகண்ட் ஷோ’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய, ஸ்ரீநாத் ராஜேந்திரனின் இரண்டாவது படம் இது.. ஆனால் முதல் படத்தில் ரசிகர்களுக்கு சரியான தீனி போட்டவர், இதில் அரைகுறை வயிற்றோடுதான் நம்மை அனுப்பி வைக்கிறார்.

அதே வேளையில் படிக்கவேண்டிய வயதில் படிப்பில் மட்டுமே கானம் செலுத்துங்கள்.. சந்தோசம் தருகிறதே என்று பருவக்குறும்புகளில் ஈடுபட்டால் கல்வி நம் கையை விட்டு போய்விடும் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லி இருக்கிறது இந்தப்படம்.. மேலும் சொந்தமாக தொழில் தொடங்குவோர் தோல்வி கண்டு துவளக்கூடாது.. தன்னம்பிக்கையுடன் அதை எதிர்கொள்ளவேண்டும் என உற்சாக டானிக்கும் கொடுக்கிறது இந்தப்படம்.

BarathGouthami NairJanani IyerKootharaMohanlalRanjaniSrinath RajendranSunny Veinகூதராகூதரா (மலையாளம்) – விமர்சனம்கௌதமி நாயர்சன்னி வெய்ன்ஜனனி ஐயர்டொவினோ தாமஸ்பரத்பாவனாமதுரிமாமோகன்லால்ரஞ்சனிஸ்ரீதர் சிவ்தாஸ்ஸ்ரீநாத் ராஜேந்திரன்