கதையே இல்லாமல் படம் எடுத்திருக்கிறேன் என பார்த்திபன் சொல்லியிருக்கிறாரே.. சரி அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார்..? தனது முதல் படத்தை இயக்க தயாராகும் உதவி இயக்குனரும் அவரது உதவியாளர்களும் சேர்ந்து டிஸ்கஷன் பண்ணுவதும் இறுதியில் பட வாய்ப்பு கிடைக்கிறதா என்பதும் தான் கதை (ஹாய்.. கதை இருக்கே)..!
கதையை எதிர்பார்க்கவேண்டாம் என்று சொன்னதால் தனது இஷ்டப்படி ஜாலியாக படத்தை நகர்த்தி இருக்கிறார் பார்த்திபன்.. படம் முழுக்க இந்த டீமும் தம்பி ராமையாவும் இன்றைக்கு சினிமா போகும் போக்கை கின்டலடித்து கலாய்க்கும் லூட்டிகளில் பத்துக்கு எழு கைதட்டல் பெறுகின்றன.
அதிலும் தம்பி ராமையாவின் ஓல்டு இஸ் கோல்டு காமெடி, சிரிப்பிற்கு முழு உத்தரவாதம் தருகிறது. புதுமுகங்கள் சந்தோஷ், விஜயராம், தினேஷ், லல்லு ஆகியோர் ஒரு இயக்குனரின் டீமை அச்சு அசலாக பிரதிபலித்திருக்கிறார்கள். இயக்குனராக வரும் சந்தோஷ் மற்றும் அவரது மனைவியாக வரும் அகிலா கிஷோர் இருவரின் ரொமான்ஸ் ட்ராக் ரசிக்க வைக்கிறது. உதவி இயக்குனராக வரும் சாஹித்யா ரொம்பவே இயல்பான கேரக்டர். வரும் நான்கைந்து காட்சியிலும் கூட புதுமுகம் மகாலட்சுமியின் டபுள் ஆக்ஷன் ட்விஸ்ட் வேறு இருக்கிறது.
படத்தில் ஓப்பனிங்கிலேயே வரும் சுனாமி காட்சியில் விஷால் மிரட்டுகிறார். ஒரு காட்சி வந்தாலும் விஜய் சேதுபதி அமர்க்களம். படத்தில் கெஸ்ட் ரோல் என்றாலும் ஆர்யாவும் அமலாபாலும் கதையுடன் கொஞ்சம் அதிக நேரம் பயணிப்பது படத்துக்கு ப்ளஸ். இன்னும் பரத், இனியா டாப்சி மற்றும் சேரனும் கூட உண்டு.
ராஜரத்தினம் ஒளிப்பதிவும் எப்போதாவது வந்துபோகும் பாடல்களும் நம்மை தொந்தரவு செய்யாமல் ரசிக்கவைக்கின்றன. படம் முழுவதும் பார்த்திபன் டச் நன்றாகவே எடுபடுகிறது. இன்றைய உதவி இயக்குனர்களின் யதார்த்த நிலையை எந்தவித பாசாங்கும் இல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பார்த்திபன்..
இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால்..
புதிய பாதைக்கு பார்த்திபன் மீண்டு(ம்) வந்துவிட்டார்…..!