காட்டை அழித்து அதை காசாக்க நினைக்கும் தீய சக்திகளிடம் இருந்து, காட்டில் வசிக்கும் பூர்வகுடி மக்கள், தங்களையும் காட்டையும் எப்படி காப்பாற்றிக்கொள்கிறார்கள் என்பதுதான் ‘கடம்பன்’ படத்தின் ஒன்லைன் ஸ்டோரி..
மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் ஒரு பகுதி கடம்பவனம்.. அங்கே சிமென்ட் தயாரிக்கும் மூலப்பொருட்கள் கிடைப்பதால் அப்பகுதியை முறைகேடாக கைப்பற்ற நினைக்கிறார் சிமென்ட் ஆலை அதிபர் தீப்ராஜ் ராணா… காட்டிலாகா அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு, முதலில் சாத்வீகமாக அங்கிருக்கும் மக்களை அப்புறப்படுத்த முயற்சிக்கிறார்..
கடம்பவனத்தின் நல்லது கெட்டதுகளை முன்னின்று கவனித்துக்கொள்ளும் கடம்பன் ஆர்யாவுக்கு இந்த திட்டம் புரிய, இதனை எதிர்க்கிறார்.. அடுத்ததாக ஹிம்சை முறையில் இறங்கும் கார்ப்பரேட் முதலாளி ராணா, அவர்களது குடிசைகளை எரித்து நாசம் செய்து அந்த மக்களை விரட்டுகிறார்.. ஆர்யாவுடன் சேர்த்து சிலரை குழி தோண்டி புதைக்கிறார்..
தெய்வாதீனமாக அதிலிருந்து உயிர் தப்பிக்கும் ஆர்யா, வேகத்தை குறைத்து நிதானமான விவேகத்துடன் கார்ப்பரேட் முதலாளிக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பிக்கிறார். அதன் ஒரு கட்டமாக அவரது தம்பியை கடத்துகிறார். இதனால் முன்னைவிட கோபத்துடன் ஆட்களை ஏவுகிறார் முதலாளி.. போராட்டம் ஆர்யா தரப்பில் இன்னும் சில உயிர்களை காவு வாங்குகிறது.. இறுதி வெற்றி யாருக்கு என்பது க்ளைமாக்ஸ்.
மொத்தப்படத்திலும் ஆர்யாவின் மெனக்கெடலும் கடின உழைப்பும் நம்மை அசரவைக்கிறது.. சாக்லேட் ஹீரோவாக இதுவரை பார்த்த ஆர்யா காட்டுவாசியாக ஆளே மாறிப்போய் கடம்பனாகவே மாறியிருக்கிறார். அதிலும் தேனெடுப்பதற்காக இரங்கும் முதல் காட்சியிலேயே அமர்க்களப்படுத்துகிறார். ‘கடம்பன்’ ஆர்யாவுக்கு டர்னிங் பாயின்ட்டான கேரக்டரும் படமும் என்றால் அதில் பொய்யில்லை..
கேத்தரின் தெரசா… காட்டுப்பகுதி பெண்ணாக அவர் நடிக்க முயற்சித்தாலும் அவரது உடை, மேக்கப் இரண்டும் அதற்கு தடையாய் நிற்கிறது.. மற்றபடி கூட்டத்தோடு கூட்டமாய் எதிரி ஆட்களுடன் மோதும் அளவுக்கு கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி இருக்கிறார்.
முதலில் அஹிம்சை முறையிலும் பின்னர் அடக்கு முறையிலும் ஆதிவாசி மக்களை விரட்ட சாமர்த்தியமாக திட்டம் தீட்டும் காட்சிகளில் தீப்ராஜ் ராணா சபாஷ் போட வைக்கிறார். அவருக்கு துணையாக காட்டிலாக அதிகாரியாக வரும் ரேஞ்சரின் குரூரமான நடிப்பு அவரது தேர்வை நியாயப்படுத்துகிறது..
வருஷம் தவறாமல் மனைவியை பிரசவத்துக்கு தயார் பண்ணும் ஆடுகளம் முருகதாஸின் கதாபாத்திரம் சிரிக்க வைப்பதுடன், பல காட்சிகளில் உணர்ச்சிகரமான குணச்சித்திர நடிப்பை வழங்கவும் தவறவில்லை. மனித உரிமை ஆர்வலர்களாக வரும் ஒய்.ஜி.மகேந்திரனும் மதுவந்தியும் ஆடும் குள்ளநரி ஆட்டம் செம சுவாரஸ்யம். மதுசூதனன், சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலரும் மிகச்சரியான தேர்வு..
குறிப்பாக காட்டிற்குள்ளேயே இருந்து இந்த மொத்தப்படத்தையும் எடுக்க அத்தனை பேரின் உழைப்பும் பிரமிக்க வைக்கிறது. யுவனின் இசையில் பாடல்களும் கானக சூழலுக்கே உரித்தான பின்னணி இசையும் சிலிர்க்க வைக்கின்றன. சண்டைக்காட்சிகளில் திலீப் சுப்பராயனின் புதிய யுக்திகள் புருவங்களை உயர்த்த வைக்கின்றன. சதீஷ்குமாரின் கேமரா படத்தின் மற்றொரு ஹீரோ என்றே சொல்லலாம்.
முதல் படத்தில் தாத்தா-பேரனின் பாசத்தை சொன்ன இயக்குனர் ராகவா, அடுத்த படத்தை அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத, ஆனால் சமூகத்துக்கு தேவையான கதைக்களத்திற்கு மாற்றியது யாரும் எதிர்பாராதது.. பாராட்டுதலுக்குரியது..
முழுப்படத்தையும் காட்டில் படமாக்கியது சாதராண ஒரு விஷயம் அல்ல. ஆனால் அதை நேர்த்தியாக சாகச காட்சிகளுடன் படமாக்கி, இயற்கையை மீட்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதற்காக இயக்குனர் ராகவாவுக்கு இன்னொரு சபாஷ். படமாக்கலில் சிற்சில லாஜிக் குறைபாடுகள் இருக்கின்றன.. இருந்துவிட்டு போகட்டும்.. அவை ஒன்றும் படத்தை பெரிதாக பாதிக்கவில்லை. இந்த சம்மர் சீசனில் இரண்டு மணி நேரம் காட்டுக்குள், திகில் கலந்த குளுகுளு பயணம் சென்றுவந்த அனுபவத்தை தருகிறது ‘கடம்பன்’..
இயற்கையை, காட்டை, விலங்குகளை நேசிப்பவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படம் இது.