இரும்பு குதிரை – விமர்சனம்

பைக் பந்தயத்தில் தோற்ற தம்பிக்காக அண்ணன் பழிவாங்க முயற்சிக்கும் கதைதான் ‘இரும்பு குதிரை’.

பாண்டிச்சேரியில் பார்ட் டைமாக பீட்சா டெலிவரி செய்யும் வேலை பார்க்கிறார் அதர்வா. பிரியா ஆனந்த்தை பார்த்ததும் நட்பாக பழகி, பின் காதலிக்கவும் ஆரம்பிக்கிறார்.. பைக் பிரியையான பிரியாவை கவர்வதற்காக அவருக்கு பிடித்த சூப்பர்பைக் ஒன்றை விலைக்கு வாங்கி அவரை ஏற்றிக்கொண்டு ஜாலி ரைட் போகிறார்.

வரும் வழியில் நான்கைந்து சூப்பர் பைக்கர்ஸ் உடன் பின்தொடரும் ஜானி ட்ரி நியூயன்(டாங் லீ) அதர்வாவை அடித்துப்போட்டுவிட்டு பிரியாவை கடத்துகிறார். நண்பர்களான ராய் லட்சுமி, ஜெகன் ஆகியோரின் உதவியுடன் பிரியாவை தேடும்போதுதான், தான் வாங்கி இருக்கும் பைக் ஜானியுடையது என்றும் அது அவரது தம்பி பந்தயத்தில் தோற்ற பைக் என்பதும் தெரிய வருகிறது.

பிரியாவை கேரளாவில் உள்ள மாகிக்கு( பாண்டிச்சேரியின் இன்னொரு பகுதி) கடத்தும் ஜானி, அதர்வாவை விடிவதற்குள் அங்கே பைக்குடன் வந்து பிரியாவை மீட்டுச்செல்ல கெடு விதிக்கிறார்.. அதர்வா மாகி போனாரா, காதலியை மீட்டாரா என்பது க்ளைமாக்ஸ்…

இடைவேளை வரை அம்மா, நண்பர்கள், காதல் என வழக்கமான பாதையில் நகரும் கதை, பிரியா கடத்தப்பட்டதிலிருந்து சூடு பிடிக்கிறது. அதர்வா, பிரியா ஆனந்த் காதலில் உயிரோட்டம் குறைவுதான்.. ஆனால் சண்டைக்காட்சியில் மிரட்டுகிறார் அதர்வா.. பைக் ரேஸ் காட்சிகள் நம்மை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன..

நட்பை தூக்கிப்பிடிக்கும் ராய்லட்சுமியும் இரண்டு மூன்று காட்சிகளில் வந்து கலாய்த்துவிட்டு போகும் ஜெகனும் சுவராஸ்யம் கூட்டுகிறார்கள்.. தம்பிக்காக பழிவாங்க முற்படுவதும் பந்தயத்தில் தோற்றதும், பைக்கை மீட்க தான் மீண்டும் வருவதாக சபதம் செய்வதுமாக ஜெண்டில் வில்லன் ஜானி நம்மை கவர்கிறார்.. க்ளைமாக்ஸில் வரும் ஜோ மல்லூரி அவரது கேரக்டரில் நிறைவு காட்டியிருக்கிறார். ஆனால் அதர்வாவின் அம்மாவான தேவதர்ஷினியை இளமையாக காட்டவேண்டிய அவசியம் என்னவென்றுதான் தெரியவில்லை…?

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளுக்கு வேகத்தை கூட்டுகிறது. அதேசமயம் விறுவிறுப்பாக நகரும் கதையில் சட் சட்டென குறுக்கிடும் பாடல்கள் தான் வேகத்தடை போடுகின்றன… க்ளைமாக்ஸில் அந்து பத்து நிமிட பந்தயத்தையும், மாகியின் அழகையும் அள்ளி வந்திருக்கிறது குருதேவின் கேமரா..

காதலி கடத்தல், பைக் பந்தயம் என சிம்பிளான கதையை பின்புலமாக வைத்து படமாக்கிய விதத்தில் இடைவேளைக்குப்பின் விறுவிறுப்பு கூட்டி இருக்கிறார் அறிமுக இயக்குனர் யுவராஜ் போஸ்.. இளசுகளை.. குறிப்பாக பைக் ரேஸ் பிரியர்களை இந்த இரும்பு குதிரை கவரும்..

AdharvaaPriya Anandஇரும்பு குதிரை – விமர்சனம்