நடிகர்கள் : தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, நஸ்ரூதின் ஷா, ஸ்ரீலீலா
இசை : சாய் அபயங்கர்
ஒளிப்பதிவு : கே.எழில் அரசு
இயக்கம் : ராஜ்குமார் பெரியசாமி
தயாரிப்புய் : வுண்டர்பார் பிலிம்ஸ், ஆர் டேக் ஸ்டுடியோஸ் – தனுஷ், ஷ்ரத்தா அகர்வால், அஷ்மத் ஜக்மக்
அதிகாரம், அரசியல், பணம் ஆகியவற்றின் பின்னணியில் இயங்கும் செம்மரக் கடத்தல் உலகத்தையும், அதில் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படும் ஏழைத் தொழிலாளர்களின் அவலத்தையும் அதிரடி சினிமாவின் வழியாகச் சொல்லியிருக்கிறது ‘ஓம்’.
திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் மலைப்பகுதிகளில் இருந்து வேலை தேடிச் செல்லும் ஏழைத் தொழிலாளர்கள், ஆந்திரக் காடுகளில் செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஆனால், கோடிக்கணக்கில் பணம் புரளும் இந்தத் தொழிலின் உண்மையான பயனாளிகள் வேறு சிலர். காவல்துறையின் நடவடிக்கைகளுக்கும் கடத்தல் கும்பலின் பேராசைக்கும் இடையில் சிக்கிக்கொண்டு உயிரைப் பறிகொடுப்பவர்கள் அப்பாவி கூலித் தொழிலாளர்கள்தான்.
இந்தப் பின்னணியில், செம்மரக் கடத்தலை முற்றிலுமாக ஒழிப்பதற்காக உருவாக்கப்படும் ரகசியக் காவல்துறை நடவடிக்கையில் தனுஷ் களமிறங்குகிறார். கடத்தல் கும்பலுக்குள் ஊடுருவி அதன் செயல்பாடுகளைக் கண்டறிய வேண்டிய பொறுப்பு அவருக்கு வழங்கப்படுகிறது. அந்தக் கும்பலின் முக்கியப் புள்ளியான மம்மூட்டியின் நம்பிக்கையைப் பெறுவதில் வெற்றியும் அடைகிறார்.
ஆனால், இந்த ரகசியப் பணிக்கு அப்பால் ஒரு தனிப்பட்ட இழப்பு தனுஷை வேறு பாதைக்கு அழைத்துச் செல்கிறது. அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதும், அவர்களில் தனது தந்தையும் ஒருவர் என்பதும் தெரிய வரும்போது, சட்டத்தின் கடமைக்கும் மனிதநேயத்தின் குரலுக்கும் இடையில் அவர் எதிர்கொள்ளும் போராட்டம் கதையின் உணர்வுப்பூர்வமான மையமாக மாறுகிறது.
காவல்துறையின் ரகசிய அதிகாரியாகவும், கடத்தல் கும்பலின் நம்பிக்கைக்குரிய இளைஞராகவும் தனுஷ் காட்டும் வேறுபாடு படத்தின் முக்கியமான அம்சம். இளமையான தோற்றம், சுறுசுறுப்பான உடல்மொழி, அதிரடியான சண்டைகள், உற்சாகமான நடனம் என ரசிகர்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் தனது திரை இருப்பில் கொண்டுவந்திருக்கிறார். குறிப்பாக, எதிரிகளின் கூட்டத்தில் ஒருவனாக வலம் வரும் காட்சிகளில் அவரது அணுகுமுறை ரசிக்க வைக்கிறது. அதேசமயம், குடும்பம் சார்ந்த உணர்ச்சிகரமான தருணங்களில் தனது அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இரண்டு வெவ்வேறு அடையாளங்களுடன் பயணிக்கும் கதாபாத்திரத்தைத் தனுஷ் சுவாரஸ்யமாகவே சுமந்திருக்கிறார்.
மம்மூட்டி திரையில் தோன்றும் ஒவ்வொரு தருணமும் கதைக்கு ஒரு கனத்தைச் சேர்க்கிறது. கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மனிதராக மட்டுமின்றி, அந்தத் தொழிலின் பின்னணியில் இருக்கும் அதிகார அரசியலையும் அறிந்தவராக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அப்பாவித் தொழிலாளர்களின் நிலை குறித்துப் பேசும் காட்சிகளில் அவரது முதிர்ச்சியான நடிப்பு கவனம் ஈர்க்கிறது. தனுஷுடன் உருவாகும் உறவும் கதைக்கு ஒரு சுவாரஸ்யமான பரிமாணத்தைத் தருகிறது.
சாய் பல்லவி ஏற்றிருக்கும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரம், பெண் அதிகாரி என்ற அடையாளத்தைத் தாண்டி, பொறுப்புணர்வும் உறுதியும் கொண்ட காவல்துறைத் தலைமைக்கான முகமாக இருக்கிறது. தனிப்பட்ட இழப்புகளையும் மீறி தனது கடமையை நிறைவேற்ற முயலும் அவரது கதாபாத்திரத்தில் கம்பீரமும் மென்மையும் இணைந்திருக்கின்றன. குறிப்பாக, அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதைப் பார்த்து மனம் கலங்கும் தருணங்களில் அவரது இயல்பான நடிப்பு மனதைத் தொடுகிறது.
தனுஷின் மனைவியாக ஸ்ரீலீலா, கடத்தல் சாம்ராஜ்யத்தின் முக்கியப் புள்ளியாக நஸ்ருதீன் ஷா, தனுஷின் தந்தையாக இந்திரன்ஸ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தை நிறைவாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கே. எழில் அரசுவின் கேமரா, படத்தின் கதைக்களத்திற்கு முக்கியமான பலம். திருவண்ணாமலையின் மலைக்கிராமங்களையும் அங்குள்ள மக்களின் எளிய வாழ்க்கையையும் மிகக் குறைவான காட்சிகளிலேயே பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். செம்மரம் வெட்டப்படும் அடர்ந்த வனப்பகுதிகளின் சூழலும், அங்கே நிலவும் பதற்றமும் காட்சிகளில் நம்பகத்தன்மையுடன் வெளிப்படுகின்றன.
சாய் அபயங்கரின் இசையில் இடம்பெறும் பாடல்கள் இளமைத் துள்ளலுடன் பயணிக்கின்றன. அதிரடி காட்சிகளுக்கு வேகத்தையும், உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு அமைதியான அழுத்தத்தையும் கொடுக்கும் பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்கு உதவுகிறது.
ஆர். கலைவாணனின் படத்தொகுப்பு, ரகசியப் புலனாய்வு நடவடிக்கையின் பின்னணியைச் சுவாரஸ்யமாக நகர்த்த முயற்சித்திருக்கிறது. குறிப்பாக, கதாநாயகனின் உண்மையான அடையாளத்தை ஆரம்பத்திலேயே வெளிப்படுத்திவிட்டாலும், அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தேர்ந்தெடுத்திருக்கும் கதைக்களம் வலுவானது. செம்மரக் கடத்தல் என்ற குற்றச்செயலை மட்டும் பேசாமல், அதன் பின்னால் இருக்கும் பணப்பேராசை, அதிகாரப் போட்டி, அரசியல் தொடர்புகள் மற்றும் அப்பாவித் தொழிலாளர்களின் அவல வாழ்க்கை ஆகியவற்றையும் திரைக்கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார்.
காவல்துறையினரும் வனத்துறையினரும் தங்களது உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது. அதேபோல், ஒரு சிலரின் பணத்தாசைக்காகப் பல ஏழைக் குடும்பங்கள் அழிவைச் சந்திப்பதை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்திருக்கிறார்.
இருப்பினும், படத்தின் திரைக்கதையில் சில முக்கியமான பலவீனங்கள் இருக்கின்றன. குறிப்பாக, தனுஷ் ரகசியப் புலனாய்வு அதிகாரி என்பது ஆரம்பத்திலேயே தெரியப்படுத்தப்படுவதால், அவரது ஊடுருவல் நடவடிக்கையில் இருக்கும் மர்மம் குறைந்துவிடுகிறது. அதைவிட, மம்மூட்டி தனுஷ் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைப்பதோடு, தனது கூட்டத்தின் ரகசியங்களையும் அவரிடம் எளிதாகப் பகிர்ந்துகொள்வது நம்பகத்தன்மையைக் குறைக்கிறது.
ஒரு திறமையான உளவாளி எதிரிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்காகப் பல சவால்களைச் சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு உருவாகும் நிலையில், தனுஷ் பெரிய அளவில் போராடாமலேயே பல தகவல்களைப் பெற்றுவிடுகிறார். இதனால், கதையின் முக்கியமான பகுதி விறுவிறுப்பின்றி நகர்கிறது. ஆரம்பத்தில் வேகமெடுக்கும் திரைக்கதை, ஒரு கட்டத்திற்குப் பிறகு அந்த வேகத்தைத் தக்கவைத்துக்கொள்ளத் தவறுகிறது.
செம்மரக் கடத்தல் என்ற கதைக்களத்தை ஏற்கெனவே கமர்ஷியல் அம்சங்களுடன் அணுகிய திரைப்படங்கள் இருந்தாலும், ‘ஓம்’ அந்தப் பாதையை அப்படியே பின்பற்றாமல், அதன் பின்னணியில் இருக்கும் சமூகப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
‘புஷ்பா’ போன்ற படங்களில் கடத்தல் உலகத்தின் பிரமாண்டமும் அதன் கதாநாயகர்களின் ஆதிக்கமும் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இந்தப் படம் அந்தத் தொழிலால் பாதிக்கப்படும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைப் பேசுவதில் கவனம் செலுத்துகிறது. அதேநேரம், கருத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காகப் பிரச்சாரத் திரைப்படமாக மாறாமல், வணிக சினிமாவுக்கான அம்சங்களையும் தக்கவைத்திருக்கிறது.
சில இடங்களில் திரைக்கதையின் சுவாரஸ்யம் குறைந்தாலும், தனுஷின் அதிரடி நடிப்பு, மம்மூட்டியின் கம்பீரமான திரை இருப்பு, சாய் பல்லவியின் இயல்பான பங்களிப்பு மற்றும் சமூக அக்கறையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைக்களம் ஆகியவை படத்தைப் பார்க்க வைக்கின்றன.
ரேட்டிங் 3.8/5