நடிகர்கள் : துல்கர் சல்மான், சாத்விகா வேதவல்லி, ஸ்ருதி ஹாசன், ருஹானி சர்மா, நாசன், கெளதம் வாசுதேவ் மேனன், சின்னி ஜெயந்த், ஸ்வாசிகா
இஐ : ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : சுஜித் சாரங்
இயக்கம் : பவன் சதினேனி
தயாரிப்பு : கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமா, லைட்பாக்ஸ் மீடியா – சந்தீப் குன்னம், ரம்யா குன்னம்
பெண்ணின் கனவுக்கு உறுதுணையாக நிற்கும் கணவன் கிடைத்தால், அந்தக் கனவு வானத்தையும் தாண்டும்! பெண்களின் கல்வி, லட்சியம், தன்னம்பிக்கை மற்றும் தம்பதியரின் புரிதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியிருக்கிறது ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’.
சிறுவயது முதலே விண்வெளியில் பறக்க வேண்டும், விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற உயரிய லட்சியத்துடன் வாழும் சாத்விகா வீரவல்லியின் வாழ்க்கையில், இளம் வயதிலேயே திருமணம் குறுக்கிடுகிறது. பத்தாம் வகுப்பை முடித்த கையோடு திருமண வாழ்க்கைக்குள் நுழையும் அவருக்கு, தனது கனவு இனி சாத்தியமில்லை என்ற சூழல் உருவாகிறது. ஆனால், அவரது மனதில் புதைந்திருக்கும் ஆசையையும், படிப்பின் மீதான ஆர்வத்தையும் புரிந்துகொள்ளும் கணவர் கிருஷ்ணா, அவருக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுக்கிறார். மனைவியின் ஆசையைத் தனது லட்சியமாக ஏற்றுக்கொண்டு, அவரது கல்விக்கும் எதிர்காலத்திற்கும் துணை நிற்கிறார். அந்த ஆதரவால் சாத்விகா தனது இலக்கை அடைந்தாரா? ஒரு பெண்ணின் கனவுக்காக ஒரு குடும்பமே பயணிக்க முடியுமா? என்ற கேள்விகளுக்குப் பதிலாக விரிகிறது திரைக்கதை.
கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துல்கர் சல்மான், வழக்கமான கதாநாயகப் பிம்பத்தைக் கடந்து, அன்பும் புரிதலும் நிறைந்த ஒரு கணவனாக மனதில் இடம்பிடிக்கிறார். ஆர்ப்பாட்டமான அறிமுகம், அதிரடி சண்டைகள் என எதுவுமின்றி, மிக இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்த்தியிருக்கிறார். மனைவியின் முன்னேற்றத்திற்காகத் தன்னையே அர்ப்பணிக்கும் மனிதராக அவரது ஒவ்வொரு வெளிப்பாடும் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, மனைவியின் கனவை மதிக்கும் அவரது அணுகுமுறை பார்வையாளர்களுக்கு நெகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.
நாயகியாக அறிமுகமாகியிருக்கும் சாத்விகா வேதவல்லிக்கு இது குறிப்பிடத்தக்க அறிமுகம். ஆசை, ஏக்கம், அச்சம், நம்பிக்கை, மகிழ்ச்சி எனப் பல்வேறு உணர்வுகளை வசனங்களின் துணையின்றி கண்களின் வழியாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். கனவுக்கும் குடும்பப் பொறுப்புகளுக்கும் இடையே தவிக்கும் பெண்ணின் மனநிலையை அழகாகப் பிரதிபலித்திருக்கும் அவரது நடிப்பு பாராட்டுக்குரியது.
ஸ்ருதி ஹாசன், ருஹானி ஷர்மா, நாசர், கௌதம் வாசுதேவ் மேனன், முரளி ஷர்மா, ஸ்வாசிகா, கோட்டா ஜெயராம், மானசி சுதிர், சின்னி ஜெயந்த், பிரவின், காசி ரெட்டி, சைதன்யா ஜொன்னலகட்டா எனப் படத்தில் இடம்பெற்றிருக்கும் மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள்.
சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு பலம். கிராமப்புறங்களின் இயற்கை அழகையும், கதாபாத்திரங்களின் கனவுகளுக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகளையும் காட்சிகளின் வழியாக அழகாகக் கடத்தியிருக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் இனிமையான அனுபவத்தைத் தருகின்றன. உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு வலுசேர்க்கும் பின்னணி இசையும் படத்துடன் இயல்பாகப் பயணிக்கிறது. பிரவீன் கே.எல். படத்தொகுப்பும், ஸ்வேதா சபு சிரிலின் தயாரிப்பு வடிவமைப்பும் படத்தின் காட்சியமைப்பையும் நேர்த்தியையும் மெருகேற்றியிருக்கின்றன.
இயக்குநர் பவன் சதினேனி, ஒரு பெண்ணின் கல்வி மற்றும் தனிப்பட்ட லட்சியங்களை மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு பெண்களின் கனவுகள் முடிவுக்கு வர வேண்டியதில்லை என்பதையும், அவர்களுக்குச் சரியான ஆதரவும் வாய்ப்பும் கிடைத்தால் எத்தகைய உயரத்தையும் எட்ட முடியும் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
பொதுவாக ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்கு தந்தையும் சகோதரர்களும் துணையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கணவனும் அவளது கனவுகளின் மிகப்பெரிய பலமாக இருக்க முடியும் என்ற அழகான கருத்தை இயக்குநர் முன்வைத்திருக்கிறார். மனைவியின் வெற்றியைத் தனது வெற்றியாகக் கருதும் கணவன் என்ற சிந்தனை படத்தின் மிகப்பெரிய சிறப்பு.
சில இடங்களில் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், படத்தின் அடிப்படை நோக்கமும் அது சொல்ல வரும் கருத்தும் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.
காதல் என்பது ஒருவரை ஒருவர் நேசிப்பது மட்டுமல்ல, ஒருவர் காணும் கனவுக்கு மற்றொருவர் சிறகாக இருப்பதும்தான் என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’. பெண்களின் கல்வி, சுயமரியாதை, லட்சியம் மற்றும் வாழ்க்கைத்துணையின் ஆதரவு ஆகியவற்றைப் பேசும் இந்தப் படம் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய நம்பிக்கையூட்டும் படைப்பு.
மதிப்பீடு: 3.8 / 5