’அப்பா குட்டி’ விமர்சனம்

நடிகர்கள் : விஜய் ஆண்டனி, பிரித்தி அஸ்ராணி, லிதன்யா, ஜென்சன் திவாகர், ஹரிப்பிரியா இசை, ஸ்ரீஜா ரவி, லிஸி ஆண்டனி, பகவதி பெருமாள், அருவி மதன், ஹரிதா, முருகானந்தம்
இசை : விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு : ராஜீவ் ராஜேந்திரன்
இயக்கம் : மு.மாறன்
தயாரிப்பு : விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்

அப்பா – மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் கதைகள், உணர்வுப்பூர்வமான காட்சிகளால் பார்வையாளர்களின் மனதை எளிதில் தொட்டுவிடும். அதிலும் மருத்துவப் போராட்டம், பெற்றோரின் தேடல், குழந்தையின் உயிர் என பல உணர்ச்சிகரமான அம்சங்கள் இணைந்திருந்தால் எதிர்பார்ப்பு அதிகரிப்பது இயல்பு. அப்படிப்பட்ட கதைக்களத்துடன் வெளியாகியிருக்கும் ‘அப்பா குட்டி’ மனதை தொடுகிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.

மகளின் உலகமே தனது வாழ்க்கை என்று வாழும் விஜய் ஆண்டனி, ஊட்டியில் மகளுடன் வசித்து வருகிறார். மகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் பிரித்தி அஸ்ராணி, அவர் மீது ஒருதலைக் காதல் கொண்டிருப்பதுடன், சிறுமியிடமும் அன்பாகப் பழகுகிறார். இந்தச் சூழலில், விஜய் ஆண்டனியின் மனைவி என்று அவர் கூறும் பெண்ணை, வேறொரு இடத்தில் கணவர் மற்றும் குழந்தையுடன் குடும்பமாகப் பார்க்கிறார் பிரித்தி. இதனால் அதிர்ச்சியடையும் அவர், விஜய் ஆண்டனியிடம் உண்மையைச் சொல்லி, குழந்தையிடம் பொய்யான தகவலைப் பகிர்ந்ததற்காகவும் வருத்தப்படுகிறார்.

இதற்கிடையே, சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. மருத்துவப் பரிசோதனையில் மரபணு சார்ந்த ரத்தக் கோளாறு இருப்பது தெரியவர, அவரது உயிரைக் காப்பாற்ற உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது. இதற்கான பொருத்தமான நன்கொடையாளரைத் தேடும் முயற்சியில் இறங்கும்போதுதான், கதையின் அடிப்படையையே மாற்றும் பல உண்மைகள் வெளிப்படுகின்றன.

சிறுமியின் உயிரைக் காப்பாற்ற அவரது உயிரியல் பெற்றோரின் பங்களிப்பு அவசியம் என்ற சூழலில், அவர்களைத் தேடிப் புறப்படுகிறார் விஜய் ஆண்டனி. அப்போதுதான் அவருக்கு திருமணமே ஆகவில்லை என்பதும், அவர் வளர்த்து வரும் குழந்தை ஆதரவற்ற இல்லத்திலிருந்து வந்தவர் என்பதும் தெரியவருகிறது.

அப்படியானால், விஜய் ஆண்டனியிடம் அந்தக் குழந்தை எப்படி வந்தது? அவர் மனைவி என்று குறிப்பிட்ட பெண் யார்? சிறுமியின் உண்மையான பெற்றோர்களைக் கண்டுபிடித்து, மகளின் உயிரைக் காப்பாற்றினாரா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடிப் பயணிக்கிறது படத்தின் திரைக்கதை.

பல ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அதனுடன் பல கற்பனைக் கிளைக்கதைகளை இணைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் மு.மாறன். ஆனால், உண்மைச் சம்பவத்தின் பின்னணியை இன்றைய மருத்துவத் துறை வளர்ச்சியுடன் பொருத்திப் பார்க்காமல், பழைய கால அணுகுமுறையிலேயே கதையை நகர்த்தியிருப்பது பெரும் பலவீனம்.

விஜய் ஆண்டனி வழக்கம்போலவே சோகமான முகபாவனையுடன், வாழ்க்கையில் பல சோதனைகளைச் சந்திக்கும் மனிதராக வலம் வருகிறார். மகள் மீதான அளவற்ற பாசத்தை வெளிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட காட்சிகள் உணர்வுப்பூர்வமாக இருந்தாலும், அதில் வெளிப்படும் சோகம் மக்கள் மனதை பாதிக்கவில்லை.

பள்ளி ஆசிரியையாக வரும் பிரித்தி அஸ்ராணியின் கதாபாத்திர வடிவமைப்பிலும் அழுத்தம் இல்லை. இருந்தாலும், முழுப்படத்திலும் பயணிக்கும் பிரித்தி, திரைக்கதையில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.

சிறுமியாக நடித்திருக்கும் லிதன்யா படத்தின் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறார். இயல்பான முகபாவனைகள், குறும்பான பேச்சு, குழந்தைகளுக்கே உரிய வெகுளித்தனம் என தனது நடிப்பால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார். குறிப்பாக, இறுதிக்கட்டத்தில் அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள், படம் முழுவதும் எதிர்பார்த்துக் கிடைக்காத தாக்கத்தை ஒரே தருணத்தில் ஏற்படுத்திவிடுகின்றன.

பகவதி பெருமாள், முத்துக்குமார், அருவி மதன், ஹரிப்பிரியா இசை, ஸ்ரீஜா ரவி, குமார் நடராஜன், பிரவீனா, லிஸி ஆண்டனி, சித்ரா லட்சுமணன், மூணாறு ரமேஷ், ஜென்சன் திவாகர், ஹரிதா முத்தரசன், முருகாந்தம் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன், ஊட்டியின் இயற்கை அழகைக் காட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகளை காட்சிகளின் வழியாக வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். கதையின் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு ஏற்ற வகையில் அவரது ஒளிப்பதிவு அமைந்திருக்கிறது.

விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதையின் சூழலுக்கு பொருந்தும் வகையில் அமைந்துள்ளன. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெட்டுகளும், கதையோட்டத்துடன் இணைந்த பாடல்களும் இசைப் பகுதியில் பலம் சேர்க்கின்றன. பின்னணி இசையும் தேவையற்ற ஆர்ப்பாட்டமின்றி காட்சிகளுக்கு ஆதரவாகப் பயணிக்கிறது.

படத்தொகுப்பையும் கவனித்திருக்கும் விஜய் ஆண்டனி, காட்சிகளை நேர்த்தியாக இணைத்து இயக்குநர் சொல்ல நினைத்த கதையைத் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் மு.மாறன், தந்தை – மகள் பாசத்தை மருத்துவப் பின்னணியுடன் இணைத்து ஒரு உணர்ச்சிகரமான படைப்பை வழங்க நினைத்திருக்கிறார். ஆனால், கதையின் மையக்கரு எந்த அளவுக்கு சுவாரஸ்யமானதோ, அந்த அளவுக்கு அதைத் திரையில் சொல்லியிருக்கும் விதத்தில் சுவாரஸ்யம் குறைவு.

மகளைக் காப்பாற்றத் துடிக்கும் தந்தையின் போராட்டம் பார்வையாளர்களின் மனதை தொடவில்லை என்றாலும், சிறுமியின் அம்மா ஏக்கமும், தந்தை பாதிப்படையக் கூடாது என்பதால் அதை வெளிக்காட்டாமல் இருப்பதும், அம்மாவை உயிருடன் பார்த்த உடன் தனது மன குமுறலை குழந்தை மொழியில் விவரிப்பதும் பார்வையாளர்கள் மனதை தொட்டு, கண்கலங்க வைத்து விடுகிறது.

அழகான உணர்வுப்பூர்வமான கதைக்கருவைத் தேர்வு செய்திருந்தாலும், அதை சமகாலத்திற்குப் பொருந்தும் திரைக்கதையாக மாற்றத் தவறியிருக்கிறது ‘அப்பா குட்டி’. படத்தின் பலவீனங்களுக்கு மத்தியில் சிறுமி லிதன்யாவின் இயல்பான நடிப்பும், இறுதிக்கட்டத்தில் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளும் மட்டுமே பார்வையாளர்களுக்கு சிறிய ஆறுதலைத் தருகின்றன.

ரேட்டிங் 3/5

appa kutty movie reviewappa kutty reviewtamil movie appa kutty reviewஅப்பா குட்டி திரைப்பட விமர்சனம்அப்பா குட்டி விமர்சனம்தமிழ்ப் படம் அப்பா குட்டி விமர்சனம்