லேட்டஸ்ட் கார்களாக வாங்கித்தான் கால் டாக்ஸி ஆரம்பிக்கவேண்டுமா..? எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்து மாடல் கார்களை வாங்கி கால் டாக்ஸி ஆரம்பித்தால் என்ன என நயன்தாராவுக்கு தோன்ற, அப்பா தம்பி ராமையாவின் சேமிப்பைக்கொண்டு ஒரு பழைய மாடல் கார் ஒன்றை வாங்குகிறார்..
வாங்கிய கொஞ்ச நாட்களிலேயே அந்த காரில் அமானுஷ்ய சக்தி ஒன்று இருப்பதையும் பல நேரங்களில் அது தனது இஷ்டப்படி ரோட்டில் ஓடுவதையும் கண்டு அதிர்ச்சியாகிறார் நயன்தாரா.. இது போதாதென்று சாலையில் நடந்து சென்ற வடமாநில வாலிபன் ஒருவனை விரட்டி விரட்டி மோதிக்கொல்கிறது அந்த கார்..
அந்த அதிர்ச்சியில் இருந்து நயன்தாரா மீள்வதற்குள் கொலை நடந்த இடத்தில் அவர் இருந்ததற்கான தடயங்கள் இருந்ததாக கூறி போலீஸ் அவரை நெருங்க, அதிலிருந்து சாமர்த்தியமாக தப்பிக்கிறார் நயன்தாரா. பின்னர் தனது குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் நயன்தாராவுக்கு அந்த கார் பற்றியும் அந்த காருக்குள் புகுந்திருக்கும் ‘டோரா’ என்கிற நாயின் ஆன்மா பற்றியும் தெரிய வருகிறது..
யார் இந்த டோரா..? அது காருக்குள் எதற்காக புக வேண்டும்..? அதிலும் நயன்தாராவின் வீட்டை தேடி ஏன் அவரவேண்டும்..? வடமாநில வாலிபனை ஏன் கொல்லவேண்டும்..? இத்துடன் அதன் டார்கெட் முடிந்ததா…? அதன் உத்தேசம் என்ன என்பதற்கெல்லாம் மீதிக்கதை விடை சொல்கிறது.
கதையின் நாயகியாக நடிப்பது என முடிவெடுத்துவிட்ட நயன்தாராவுக்கு படம் முழுவதும் காமெடி, சென்டிமென்ட், லைட் ஆக்சன் என செமத்தியான வேலை கொடுத்திருக்கிறார்கள்.. ஆனால் மொத்தப்படத்தையும் அசால்ட்டாக சுமந்திருக்கிறார் நயன்தாரா. குறிப்பாக ரவுடி ஒருவனை கர்ச்சீப்பில் கண்ணாடி துண்டுகளை கட்டி தாக்கும் இடத்தில் பலத்த கைதட்டலை அள்ளுகிறார்..
நாயகன் என்றும் இல்லாமல், நயன்தாராவுக்கு ஜோடி என்று இல்லாமலும் பாசிடிவான அதேசமயம் கெடுபிடியான போலீஸ் அதிகாரியாக ஹரீஷ் உத்தமனை பார்ப்பதே புதிதாக இருக்கிறது. நயன்தாராவின் அப்பாவாக தம்பி ராமையா.. மகளை செல்லமாக ‘பவளப்பாப்பா’ என அவர் கொஞ்சலாக கூப்பிடுவதே தனி அழகு..
படத்தில் முக்கியமான கேரக்டர்களாக வரும் அந்த அழகு குழந்தையும் அந்த டோரா நாயும், சாகசங்கள் செய்து பயமுறுத்தும் அந்த காரும் குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்து வரும் வேலையை கச்சிதமாக செய்துவிடும் என்பதில் ஐயமில்லை..
நயன்தாரா, டோரா என்கிற ஒரு நாய், கார் வடிவத்தில் உலா வரும் நாயின் ஆன்மா என இந்த மூன்று அம்சங்களை வைத்து வெகு சுலபமாக ஒரு வெற்றிப்படத்துக்கு தேவையான திரைக்கதையை அமைத்து சுவாரஸ்யம் குறையாமல் அடித்து தூள் கிளப்பியிருக்கிறார் அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி.
காமெடி, த்ரில், சென்டிமென்ட் எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த இந்தப்படம் குழந்தைகளுக்கான சம்மர் ஸ்பெஷல் ட்ரீட் என்பதில் ஐயமில்லை.