நடிகர்கள் : சாரத், அனகா, வேல ராமமூர்த்தி, ரேணுகா, உமா பத்மநாபன், அசோக், பரணி, வினோத், ஆர்.என்.ஆர்.மனோகர், ராஜசிம்மன், பவன், கபீர் துஹான் சிங்
இசை : ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு : என்.சண்முக சுந்தரம்
இயக்கம் : சாரத்
தயாரிப்பு : சந்திரபாபு ஃபிலிம் பேக்டரி – சாரத்
அறிமுக நடிகர் சாரத் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருப்பதோடு, சந்திரபாபு ஃபிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘தெற்கத்தி வீரன்’. இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது, என்று விமர்சனத்தை பார்ப்போம்.
மீனவ சங்க தலைவராக இருக்கும் சாரத், கோபம் நிறைந்த அதிரடியான மனிதர் என்றாலும் தன்னை நம்பி வரும் மக்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறார். இதனால் அவருக்கு எதிரிகரிகளும் அதிகரிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சாரத்தின் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை அழிக்க முடிவு செய்கிறார்கள். ஆனால், அவரை நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது என்பதை உணரும் எதிரிகள், கொலை பழி ஒன்றில் அவரை சிக்க வைக்க, அதில் இருந்து சாரத் மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதை கமர்சியல் அம்சங்களுடனும், ஆக்ஷன் காட்சிகளுடனும் சொல்வது தான் ‘தெற்கத்தி வீரன்’.
முதல் படத்திலேயே நாயகன், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல அவதாரங்களுடன் அறிமுகமாகியிருக்கும் சாரத், 6 அடி உயரத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார். வசன உச்சரிப்பு மற்றும் நடிப்பில் சற்று கவனம் செலுத்தினால் ஹீரோவாக இல்லை என்றாலும் வில்லனாக கோலிவுட்டை நிச்சயம் மிரட்டுவார்.
நாயகியாக நடித்திருக்கும் அனகா, பாடல் மற்றும் சில காட்சிகளில் வந்துபோகும் வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் கபீர் துஹான் சிங் வழக்கம் போல் மிரட்டலாக நடித்திருக்கிறார். அமைச்சராக நடித்திருக்கும் ஆர்.என்.ஆர்.மனோகர், பவன், ராஜசிம்மன், ஆர்யன் ஆகிய மற்ற வில்லன்களும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, அம்மாவாக நடித்திருக்கும் ரேணுகா, வழக்கறிஞராக நடித்திருக்கும் உமா பத்மநாபன், நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் அசோக், பரணி, வினோத் என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
என்.சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேத்துள்ளது. குறிப்பாக சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் மிரட்டல். அனைத்து சண்டைக்காட்சிகளையும் பிரமாண்டமான முறையில் படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் இயக்குநரின் விருப்பத்திற்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு ஏற்ப பயணித்துள்ளது. இசையமைப்பாளர் தேவாவின் குரலில் வரும் “கடலம்மா..” பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ”என்ன தவம் செஞ்சிபுட்டேன்..” பாடல் திரும்ப திரும்ப கேட்கும்படி உள்ளது. மற்ற மெலோடி பாடல்களும் இனிமை.
இயக்குநர் மற்றும் ஹீரோ என்ற இரட்டை குதிரையுடன் தயாரிப்பாளர் என்ற மூன்றாவது குதிரையையும் சேர்த்து ஒட்டியிருக்கும் சாரத், அதை சாமர்த்தியமாகவே செய்திருக்கிறார். தனக்கு எது நன்றாக வருமோ அதை படத்தில் அதிகமாக வைத்திருப்பதோடு, அதை ரசிக்கும்படியும் வைத்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஆக்ஷன் பிரியராக இருக்கும் நாயகனும், இயக்குநருமான சாரத், படத்தில் ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகளை வைத்து ஆக்ஷன் பட விரும்பிகளுக்கு அமர்க்களமான விருந்து வைத்தாலும் அழுத்தமான கதை மூலம் அனைத்து தரப்பினரையும் ரசிக்கும்படியான கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார்.
ரேட்டிங் 3/5