நடிகர்கள் : சூர்யா, பிரகாஷ்ராஜ், மணிகண்டன், லிஜிமோல் ஜோஸ் மற்றும் பலர்
இயக்கம் : த.செ.ஞானவேல்
ஒளிப்பதிவு : எஸ்.ஆர்.கதிர்
இசை : ஷான் ரோலண்ட்
தயாரிப்பு : சூர்யா, ஜோதிகா
இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மணிகண்டன் மீது பொய்யான திருட்டு வழக்கை பதிவு செய்யும் காவல்துறை, செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ள வைப்பதற்காக அவரை சித்ரவாதை செய்வதோடு, அவருடைய குடும்ப பெண்களையும் கொடுமைப்படுத்துகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு இடையே, மணிகண்டன் தப்பித்துவிட்டதாக காவல்துறை கூற, மாயமான தனது கணவருக்கு என்ன ஆனது, என்று தெரியாமல் தவிக்கும் அவருடைய கர்ப்பிணி மனைவியான லிஜிமோல் ஜோஸ், தனது கணவனை காப்பாற்றுவதற்காக வழக்கறிஞரான சூர்யாவின் உதவியை நாடுகிறார். சட்ட ரீதியிலான போராட்டத்தில் இறங்கும் வழக்கறிஞர் சூர்யா, மாயமான மணிகண்டன் விவகாரத்தில் இருக்கும் மர்மங்களை கண்டுபிடிப்பதோடு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்று தருவது தான் படத்தின் கதை.
படத்தின் கதை உண்மை சம்பவம் என்றாலும், இப்படத்தை தமிழ் சினிமாவாக மட்டும் இன்றி உலக சினிமாவாக கொண்டாடும் விதத்தில் இயக்கியிருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல்.
வழக்கறிஞர் சந்துருவாக நடிகர் சூர்யா வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வது ரொம்ப பழசாக இருந்தாலும், அது தான் உண்மை. வழக்கறிஞராக சூர்யா நடித்திருக்கிறார் என்பதை விட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியிருக்கிறார், என்று சொல்லும் அளவுக்கு அவருடைய ஒவ்வொரு அசைவும் அமைந்திருக்கிறது.
பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவராக நடித்திருக்கும் மணிகண்டனும், அவருடைய மனைவியாக நடித்திருக்கும் லிஜிமோல் ஜோஸ் இருவரும், அவர்களின் வாழ்க்கையை மட்டும் அல்ல வலிகளையும், தங்களது நடிப்பின் மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இருவம் நடிகர்களாக மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார்கள், என்பது உறுதி.
காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் அலட்டல் இல்லாத நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார். சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நடிகர் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, நடிப்பிலும் கவர்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமான தேர்வாக இருக்கிறார்கள்.
எஸ்.ஆர்.கதிர் கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, சில காட்சிகளில் தனது கேமரா கோணங்கள் மூலமாகவும் கதை சொல்கிறார்.
இசையமைப்பாளர் ஷான் ரோலண்ட், பாடல்கள் மூலமாக மட்டும் இன்றி, பின்னணி இசை மூலமாகவும் பழங்குடியின மக்கள் அனுபவித்த வலிகளை சொல்லியிருக்கிறார்.
உண்மை சம்பவத்தின் வலிகளை படம் பார்ப்பவர்கள் நெஞ்ச்சில் கடத்தும் இயக்குநர் த.செ.ஞானவேல், திரைமொழி வடிவிலும் படத்தை ரசிக்கும்படி இயக்கியிருப்பது படத்தின் கூடுதல் பலம்.
கதாப்பாத்திரங்களை கையாண்ட விதம், காட்சி அமைப்புகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என்று நீதிமன்ற வழக்காடலை ஒரு சுவாரஸ்யமான திரைப்படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் த.செ.ஞானவேல், பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளை நமக்குள் செலுத்தி பல இடங்களில் கண் கலங்க வைத்துவிடுகிறார்.
மொத்தத்தில், வலிகள் நிறைந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் ஒரு திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தை சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி, ஒட்டு மொத்த சமூகமே கொண்டாடும்.