’குதிரைவால்’ விமர்சனம்


நடிகர்கள் : கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன், ஆனந்த்சாமி
இசை : பிரதீப் குமார், மார்டின் விஸ்ஸர்
ஒளிப்பதிவு : கார்த்திக் முத்துகுமார்
இயக்கம் : மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர்
தயாரிப்பு : விக்னேஷ் சுந்தரேசன்

இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோரது இயக்கத்தில், கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன், ஆனந்த்சாமி ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘குதிரைவால்’ எப்படி என்பதை பார்ப்போம்.

படத்தின் முதல் காட்சியிலேயே கலையரசன் ஒரு குதிரைவாலோடு உறக்கத்திலிருந்து விழிக்கிறார்.வால் முளைத்த காரணத்தை தேடி அலையும் கலையரசன், தன் பெயரை மறந்து, தான் ஃபிராய்ட் என உணரும் போது கனவுகளிலேயே தனக்கு வால் முளைத்த காரணமும் இருப்பதாக எண்ணி ஒரு குறிசொல்லும் பாட்டி, ஒரு ஜோசியர் மற்றும் ஒரு கணக்கு வாத்தியார் என வெவ்வேறு ஆட்களிடம் ஆலோசனை கேட்கிறார்.
மறந்து போன கனவை ஞாபகப் படுத்த சொல்லும் பாட்டி, உலகத்துல இருக்க எல்லா பிரச்சினைக்கும் கணக்குல தீர்வு இருக்கென சொல்லும் கணக்கு வாத்தியார் என அனைவரும் படத்தின் அடுத்து அடுத்த காட்சிக்கு கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கின்றனர்.

படத்தின் ஒவ்வொரு ஃபிரேம்மிலும் பல அடுக்குகளில் அழகியல் கொட்டிக்கிடக்கிறது. தற்கால சினிமா வகைமைகளில் புதிய வகைமையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் குதிரைவால் ஒரு முக்கியமான திரைப்படம்.

ஒற்றை கதை சொல்லல் தன்மையை விடுத்து படம் நெடுகிலும் பல்வேறு கிளைக்கதைகள் வால் போல முளைத்துக்கொண்டே இருந்தாலும் கவனிக்கத்தக்க வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

கதையில் வரும் கனவுத்தன்மை, கற்பனையில் உருவாகும் உலகம், காட்சிகளி்ன் படிமங்களின் இருக்கும் நுண் அரசியல் குறியீடுகள் எனப் பல காரணிகள் முழுக்க நம் மூளையை ஆக்கிரமித்து பெரும் கவனத்தை கோருகிறது.

ஒரு காட்சியின் முழுச்சாரத்தை அறிந்துகொள்ள பலமுறை திரும்ப பார்க்க தூண்டும் தன்மையுடைதாக இருந்தாலும் நம்முள் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்தே படத்தில் பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

வால் முளைத்த பிறகு வாலின் அசைவுக்கு ஏற்றார் போல கலையரசன நடிப்பு சிறப்பு. அஞ்சலி பாட்டீல் கதாப்பாத்திரத்திற்கு வேலை குறைவு என்றாலும், மற்ற கதாப்பாத்திரங்களும் அதில் நடித்திருப்பவர்களும் கவனம் பெறுகிறார்கள்.

கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பலம் சேர்க்கிறது. கலை இயக்குனர் ராமு தங்கராஜ் ஒவ்வொரு இடத்திலும் ஓவிய அழகை காட்சிகளில் அடுக்கி உள்ளார். Non -Linear கதைசொல்லலில் படத்தொகுப்பில் ஒரு புதிய வடிவத்தை அமைத்து பார்வையாளர்களுக்கு பெருங்கதையை எளிதாக்கி 2 மணிநேர படமாக கொடுத்துள்ளார் எடிட்டர் கிரிதரன்.

பிண்ணனி இசை மற்றும் ஒலி வடிவமைப்பு ஃப்ராய்டின் மனசிக்கல்களுக்கு ஏற்றவாறு கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தோனி ரூபன் ஃப்ராய்டின் காதுகளில் கேட்கும் ஒலிகள் முதல் மலைகளில் கேட்கப்படும் பிரத்தியேக ஒலிகள் வரை அனைத்தும் அப்படியே உணர வைக்கிறார். பாடகர் பிரதீப் குமார் இசையப்பாளராகவும் தமிழ் சினிமா உலகில் முக்கிய இடம் பிடிப்பார்.

பெரும் தனி இலக்கியத்திற்கு உண்டான அனைத்து கூறுகளுடன் கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார் இராஜேஷ் .இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க பெரும் உழைப்பை கொடுத்துள்ளனர் இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர்.

குழப்பங்கள் பல நிறைந்திருந்தாலும், குதிரைவாலின் காரணம் தேடிசெல்லும் பயணம் என்றென்றும் கலை உலகில் நிலைத்து நிற்கும்.

anjali patelfilm newsKALAIYARASANkollywood moviekuthiraivaal reviewPa.Ranjithtamil film kuthiraivaal reviewtamil movie kuthiraivaal review