கல்லூரியில் படிக்கும் கார்த்திக்கும் ஸ்வேதாவும் முதலில் நண்பர்களாக பழக ஆரம்பித்து பின்னர் காதலர்களாக மாறுகிறார்கள். மாமல்லபுரத்திற்கு ஜாலி ட்ரிப் போகும்போது தங்களை மறந்து எல்லைமீற, அதன்விளைவாக ஸ்வேதா கர்ப்பமாகிறாள். ஒரு கட்டத்தில் அவளது பெற்றோருக்கு உண்மை தெரியவர, சந்தோஷ் வீட்டிற்கு திருமணம் பேச செல்கிறார்கள். ஆனால் சந்தோஷின் அப்பாவோ திருமணத்தை மறுக்கும் விதமாக கர்ப்பத்தை கலைக்கச் சொல்ல, அந்தக்கட்டத்தையெல்லாம் தாண்டி விடுகிறாள் ஸ்வேதா. இறுதியில் குழந்தையை பெற்றெடுக்கும் ஸ்வேதா வேறு ஒருவனை கைபிடிக்கிறாள். அவள் காதலன் இன்னொருத்தியை திருமணம் செய்துகொள்கிறான். ஆனால் இவர்களுக்கு பிறந்த குழந்தையின் நிலை..? அதுதான் நெஞ்சை நெகிழவைக்கும் க்ளைமாக்ஸ்.
கார்த்திக்காக அறிமுகம் சந்தோஷ். ஸ்வேதாவாக வழக்கு எண் படத்தில் நடித்த மனிஷா. சந்தோஷைவிட மனிஷாவுக்குத்தான் நடிக்க அதிக வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் மனிஷா. கல்லூரியில் காதல் பறவையாக ஜாலியாக வலம் வரும்போதும் அதன்பின் ஏமாற்றிவிட்ட காதலனின் கருவை வயிற்றில் சுமந்துகொண்டு அல்லாடும்போதும் இருவிதமான மனநிலையை சரியாக பிரதிபலித்திருக்கிறார்.
மனிஷாவின் அப்பாவாக வரும் ஜெயபிரகாஷ் மற்றும் அம்மாவாக வருபவர் இருவரின் நடிப்பில்தான் எவ்வளவு யதார்த்தம். தன் மகள் இப்படிப் பண்ணிவிட்டாளே என்று குமுறும்போதும் தனது மகளைப்பற்றி நான்குபேர் தவறாக பேசும்போது அதை கேட்கவேண்டியிருக்கிறதே என தலை குனியும்போதும் ஜெயபிரகாஷ் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபிக்கிறார்.
சந்தோஷின் அம்மாவாக நீண்ட இடைவெளிக்குப்பின் தலைகாட்டியிருப்பதன் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார் பூர்ணிமா பாக்யராஜ்.
யுவனின் இசையில் ஆதலால் காதல் செய்வீர் என்ற பாடல் இளசுகளை கவரும் என்றால், ஆராரிரோ பாடல் நெஞ்சை கனக்க வைக்கிறது சுசீந்திரனுக்கு பக்கபலமாக இருந்து வெற்றிக்குத் துணை நின்றிருக்கும் ஒளிப்பதிவாளர் சூர்யாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்தே ஆக வேண்டும்.. அவ்வளவு இயல்பாக காட்சிகளை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல படமாக்கியிருக்கிறார்.
படிக்கிற வயதில் ஆண், பெண் இருவருக்கிடையே ஏற்படும் ஈர்ப்பு தவறான திசையில் பயணித்தால் என்ன ஆகும் என்பதை இரண்டரை மணி நேர படமாக… இல்லையில்லை பாடமாக எடுத்திருக்கிறார் சுசீந்திரன். ராஜபாட்டையில் சறுக்கியதுபோல் இந்தமுறை ஏமாந்துவிடக்கூடாது என்பதால் பார்த்து பார்த்து காட்சிகளை செதுக்கியிருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.
இளைஞர்களிடையே.. ஏன்.. அவர்களது பெற்றோர்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு படத்தை இயக்க முடிவெடுத்த சுசீந்திரன் அதை கச்சிதமாகவே படமாக்கியிருக்கிறார். அம்மாவுக்கும் பெண்ணுக்குமிடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டத்தை படமாக்கிய விதம் சூப்பர்… முதல் பாதியை விட இரண்டாம் பாதிதான் நம்மை ரொம்பவே பாதிக்கிறது. அதிலும் க்ளைமாக்ஸ் நம்மை உலுக்கிவிடுகிறது. அவ்வப்போது பேப்பரில் படித்துவிட்டு அடுத்தநாளே மறந்துபோகும் செய்திதான்.. ஒருமுறை படமாக பாருங்கள்.. அதன் உண்மையான வலி என்னவென்று காட்டியிருக்கிறார் சுசீந்திரன்.