அட்ரா மச்சான் விசிலு – விமர்சனம்

254

atra machan visilu

தனது அபிமான நடிகரால் நஷ்டப்பட்ட மூன்று ரசிகர்கள் அவருக்கு பாடம் புகட்டுவதே இந்தப்படத்தின் கதை..

பவர்ஸ்டாரின் மூன்று வெறித்தனமான ரசிகர்களான மதுரையை சேர்ந்த சிவா, சென்ராயன், அருண்பாலாஜி மூவரும் அவரது படத்தை மதுரையில் திரையிட்டு அதன்மூலம் தங்களது வாழ்க்கையை தொடங்க நினைக்கிறார்கள்.. அனால் படம் தோல்வியடைய இவர்களது பணம் அம்பேல் ஆகிறது.. நஷ்ட ஈடு கேட்கப்போன இடத்தில் பவர்ஸ்டார் இவர்களை விரட்டியடிக்க, இந்த மூவரும் பவருக்கு எப்படி படம் புகட்டுகிறார்கள் என்பதே கதை.

நடிகர்கள் பங்களிப்பு என பார்த்தால் ரசிகர்களாக கட் அவுட், பாலாபிஷேகம் என அலப்பறை கொடுத்து, பின்னர் பவர்ஸ்டாரால் பாதிக்கப்பட்டு அவருக்கு எதிராக பொங்குவதையும் சிவா, சென்ராயன், அருண்பாலாஜி ஆகிய மூவருமே பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட வில்லத்தனம் கலந்த கேரக்டரில் பவர்ஸ்டார் அடிக்கடி உதிர்க்கும் அதிரடி பஞ்ச் டயலாக்குகளால் தியேட்டரை கதிகலக்குகிறார்.

கதாநாயகி நைனா சர்வாரின் அழகு முகத்தை விட, சிவாவின் மீது அவர் வைத்திருக்கும் அளவு கடந்த காதல், அவர்மீது நம்மை பாசப்பார்வை வீச வைக்கிறது. பவர்ஸ்டாரின் பி.ஏவாக வரும் சிங்கமுத்துவின் பந்தா, காமெடி தான் என்றாலும் கொஞ்சம் ஓவர் டோஸ் தான். மற்ற நடிகர்களும் தனகல்து பங்களிப்பை நிறைவாகவே செய்திருக்கின்றனர். என்.ஆர்.ரகுனந்தனின் இசையில் ‘தேவதை தேவதை’, ‘யாரு இவ’, கண்ணாமூச்சி’ ஆகிய பாடல்கள் சுகராகம்.

‘லிங்கா’ படம் தோல்வியடைந்தபோது நஷ்ட ஈடு கேட்டு போராடி உண்ணாவிரதம், பிச்சை எடுக்கும் போராட்டம் என தொடர்ந்து விநியோகஸ்தர்கள் சிலர் போராட்டம் நடத்தினார்கள் அல்லவா..? அதில் உரிய நஷ்ட ஈடு கேட்டு அது கிடைக்காத சிலர், ரஜினியை கிண்டலடிக்கும் விதமாக படம் எடுப்போம் என அந்த சமயத்தில் சபதம் செய்திருந்தனர்.. இந்தப்படத்தை பார்க்கும்போது அவர்கள் தான் சூப்பர்ஸ்டாரின் மீதான தங்களது கோபத்தை படம் முழுதும் வாரி இறைத்திருக்கிறார்களோ என்று எண்ண வைக்கிறது.

படத்தில் வரும் பல பஞ்ச் டயலாக்குகளும் மாட்டுக்கொம்பு, பாம்பு, சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிப்பது என ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியை மறைமுகமாக தாக்கவே முயற்சித்திருக்கிறார் இயக்குனர் திரைவண்ணன்.. சினிமா தான் என்றாலும் நடந்த விஷயங்களை நன்றாக தெரிந்த ரசிகர்கள் இந்தப்படத்தை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என தெரியவில்லை.

அதுமட்டுமல்ல, தானாகவே முன்வந்து இந்த நஷ்டத்தை திருப்பிக்கொடுக்கும் முறையை ஆரம்பித்தவரும் ரஜினி தான்.. அதேபோல இதுவரை படம் வாங்கி வெளியிட்டு நஷ்ட ஈடு கேட்டு போராட்டம் நடைபெற்றதும் அவருக்கு எதிராகத்தான். ஆக இந்தபடம் முழுவதும் அவரைத்தான் குறிவைக்கிறது என்பது நன்றாகவே புலனாகிறது.

பல இடங்களில் சூப்பர்ஸ்டாரை உயர்த்திப்பிடிப்பதுபோல சில வசனங்களை வைத்திருந்தாலும் கூட, இது முழுக்க முழுக்க அவரை மறைமுகமாக தாக்கும் படம் தான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆக, பவர்ஸ்டார் கதாபாத்திரம் மூலமாக சூப்பர்ஸ்டார் மீதான தங்களது கோபத்தை சிலர் இந்தவிதமாக தீர்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை

Comments are closed.