அர்த்தநாரி – விமர்சனம்

202

arthanari
கிராமங்களில் இருந்து தொழிலாளர்களாக நகரத்துக்கு அழைத்து வரப்படும் குழந்தைகளை தங்களது வியாபார மூலப்பொருளாக பயன்படுத்தும் கும்பலையும் அந்த கும்பலை அழிக்க துணிச்சலாக போராடும் ஒரு பெண் போலீஸ் அதிகாரியையும் பற்றிய கதை தான் இந்த அர்த்தநாரி..

துடிப்பான இளம் போலீஸ் அதிகாரி அருந்ததி, அவரது தலைமையில் நால்வர் என. சமூக விரோதிகளின் நெட்வொர்க்கை தேடி கண்டுபிடித்து என்கவுண்டர் செய்கிறது ஸ்பெஷல் டீம்.. இந்த டீம் இஞ்சினீயர் ராம்குமாரை தவறாக நினைத்து அழைத்து விசாரணை செய்ய, அதனால் ராம்குமாரின் பெண் பார்க்கும் படலம் தடைபடுகிறது.. இதனாலலேயே நாளடைவில் அருந்ததிக்கும் ராம்குமாருக்கும் காதல் ஏற்படுகிறது.

இந்தநிலையில் ராம்குமாரின் காட்பாதரும் குழந்தை தொழிலாளர் முறையை எதிர்த்து போராடுபவருமான நாசர் திடீரென மரணமடைகிறார்.. பின்னர்தான் அது கொலை என்பது தெரியவருகிறது.. ராம்குமார் அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என தேடி கிளம்புகிறார். அருந்ததி தனது போலீஸ் டீமுடன் வலை விரிக்கிறார்.. கயவர்கள் அடையாளம் காணப்பட்டு அஸ்தியாக்கப்படும் அதேவேளையில் போலீஸ் விரித்த வலையில் எதிர்பாராத விதமாக ராம்குமார் வீழ்கிறார்.. முடிவு என்ன ஆனது..?

கதாநாயகன் என்கிற பெயரில் படம் முழுவதும் வரும் ராம்குமார் தான் புதுமுகம் என்பதை காட்சிக்கு காட்சி பிரதிபலித்திருக்கிறார்.. போலீஸ் அதிகாரியான அருந்ததியை அவர் விரட்டி காதலிப்பது சரியான கேலிக்கூத்து.. அதேபோல அவர்மீது அருந்ததிக்கு சடாரென காதல் வருவதும் செம ‘க்ளிசே’.. இருந்தாலும் படத்தை கொஞ்சம் உட்கார்ந்து பார்க்கவைப்பது அருந்ததியும் அவரது துணிச்சலான நடிப்பும், அவரது கவர்ச்சியான வனப்பும் தான். ஆனால் என்னதான் பெண் க்ரைம் பிராஞ்ச் போலீஸ் அதிகாரி என்றாலும் இப்படித்தான் எல்லா காட்சிகளிலும் அரைகுறை உடைகளுடன் சுற்றுவார்களா என்ன..?

நான் கடவுள் ராஜேந்திரன், இதில் மீண்டும் வில்லத்தனம் காட்டியுள்ளார். அநாதை இல்லம் நடத்தி, குழந்தை தொழிலாளர் முறையை எதிர்த்து போராடும் உயர்ந்த மனிதராக நாசர் கச்சிதம். ‘வழக்கு என்’ முத்த்ராமனின் போலீஸ் அதிகாரி கேரக்டரும் அந்த நரித்தனமும் அவருக்கு நன்றாக செட்டாகிறது.

ரவுடிகளை என் கவுண்டர் டீம் மடக்கும் காட்சிகள் எல்லாமே உரல் ஒன்றை வாங்கி அதில் மூட்டைப்பூச்சியை பிடித்துப்போட்டு இடிக்கச்சொல்லும் வடிவேலு காமெடியைத்தான் ஞாபகமூட்டுகிறது. படத்தை இயக்கியிருக்கும் சுந்தர இளங்கோ என்பவர் இயக்குனர் பாலாவிடம் துணை இயக்குனராக பணியாற்றியவராம்… ஆனால் குருவின் பெயரை எந்த ஒரு இடத்திலும் இவர் காப்பாற்றவே இல்லை..

வெளிநாட்டு மருந்துகளை குழந்தைகள் மீது செலுத்தி பரிசோதிக்கும் ‘தனி ஒருவன்’ கதையை தைரியமாகவே சுட்டிருக்கிறார் இயக்குனர். அதுபோகட்டும். நாயகன் ராம்குமார் பாத்திரத்தை இன்னும் ஷார்ப் கட் செய்து, மொத்தப்படத்தையும் அருந்ததி மேல் பயணிக்க வைத்திருந்தால் இந்த அர்த்தநாரி ஓரளவு பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கும்.

Comments are closed.