
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள படம் என்கிற அடையாளத்துடன் புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘ஓய்’..
கொலைக்குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கும் ஈஷா, தனது அக்கா திருமணத்தை முன்னிட்டு சில நாட்கள் பரோலில் வெளியே வருகிறார். ஊருக்கு செல்ல பேருந்தில் ஏறுபவர், நாயகன் கீதன் அருகில் அமர்கிறார். பஸ் கிளம்புவதற்கு முன் ஸ்நாக்ஸ் வாங்கிவர கீழே இறங்கிச்சென்ற கீதனின் பாக்கெட்டில் இருந்து, செயின் ஒன்றை அவருக்கு தெரியாமல் பிக்பாக்கெட் அடிக்கிறான் திருடன் ஒருவன். அதை பார்க்கும் ஈஷா இறங்கிப்போய் செயினை கைப்பற்றும் முயற்சியில் பஸ்ஸை தவறவிட்டு விடுகிறார்.
அந்த செயினை கொடுப்பதற்காக கீதனின் கிராமத்திற்கு செல்லும் ஈஷாவை, கீதனின் காதலி என அனைவரும் தவறாக புரிந்து கொள்கின்றனர். உண்மையை சொல்லமுடியாமல் தவிக்கும் ஈஷாவை, அவரது அக்காவும் கொஞ்சநாளைக்கு ஊருக்கு வரவேண்டாம் என சொல்லிவிட, கீதனின் காதலியாகவே நாடகத்தை தொடர்கிறார் ஈஷா.. அதற்குள் விஷயம் அறிந்து சென்னையில் இருந்து வரும் கீதனாலும், ஈஷா தனது காதலி இல்லை என தனது குடும்பத்தாரை நம்ப வைக்க முடியவில்லை..
அதற்காக எடுக்கும் முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன. இதற்கிடையே கீதனின் தந்தை நாகிநீடுவை சிலம்பச்சண்டையை மையமாக வைத்து எதிரி அவமானப்படுத்துகிறான்.. இதனால் கீதனை உசுப்பேற்றி, சிலம்பச்சண்டையில் கலந்துகொள்ள வைக்கும் ஈஷா, அவர் ஜெயித்தால் தான் ஊரைவிட்டு போய்விடுவதாகவும் உறுதி தருகிறார்.
இந்தநிலையில் கீதனின் உண்மை காதலியும் அவரை பார்க்க கிராமத்துக்கு வருகிறார். ஆனால் அவரை காதலி என வீட்டில் உள்ளவர்களிடம் அறிமுகப்படுத்த முடியாத இக்கட்டான சூழலில் தவிக்கிறார் கீதன்.. அந்தக்குடும்பத்தின் அன்பில் ஐக்கியமாகும் ஈஷா, தனது நாடகத்தை முடித்தாரா, கீதன் போட்டியில் வென்றாரா, தனது காதலியை கரம் பிடித்தாரா என்பது க்ளைமாக்ஸ்.
தொண்ணூறுகளில் வந்திருக்க வேண்டிய கிராமத்து கதை… மாறிவிட்ட எந்த டெக்னாலஜியையும் பெரிதாக காட்டிக்கொள்ளாமல் அதை இந்த காலகட்டத்தில் நிகழ்வது போல காட்டியிருக்கிறார்கள். நாயகன் கீதன் ஓகேதான்.. இருந்தாலும் நடிப்பில் இன்னும் கொஞ்சம் யதார்த்தம் காட்ட மெனக்கெட்டிருக்கலாம் கீதனை விட முழுப்படத்திலும் நம்மை கவனிக்க வைப்பவர் நாயகி ஈஷா தான்.. காமெடி, சென்டிமென்ட், கொஞ்சம் ரொமான்ஸ் என புகுந்து விளையாடுகிறார்…
இன்னொரு நாயகியான பாப்ரி கோஷுக்கு பெரிய வேலை ஏதும் இல்லை. கீதனின் தந்தையாக வரும் நாகிநீடுவிடம் அளந்தெடுத்த பக்குவமான நடிப்பு.. சண்டியர் மீசையுடன் கிச்சுகிச்சு மூட்டும் அர்ஜுனன், தாத்தா சங்கிலி முருகன் என பலரது நடிப்பும் பரவாயில்லை.. இளையராஜாவின் இசையால் பெரிய பங்களிப்பு எதையும் தரமுடியவில்லை என்பதே உண்மை.
படத்தின் ஐந்தாவது நிமிடத்தில் ஆரம்பிக்கும் லாஜிக் மிஸ்ஸிங் படத்தின் இறுதிவரை விடாமல் தொடர்வதால் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டு முழுப்படத்தையும் நம்மால் ஈடுபாட்டுடன் கவனிக்க முடியாமல் போய் விடுகிறது. ஒரு கம்பீரமான குடும்பத்தில் எல்லோருமே இந்த அளவுக்கா முட்டாளாக இருப்பார்கள்.. தனது உண்மையான காதலியை அடையலாம் காட்ட, ஒரு மொபைல் செல்பி கூடவா நாயகனிடம் இல்லாமல் போகிறது.. அடக்கடவுளே..!
பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டாகி விட்டது என நம்புவதுபோல் இப்படி எந்த லாஜிக்கும் பற்றி கவலைப்படாமல் இயக்குனர் பிரான்சிஸ் மார்க்ஸ் தனக்கு வசதியாக கதையை இஷ்டப்படி நகர்த்துவது ஒருகட்டத்தில் அலுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தவும் தவறவில்லை..
ஆனால் பாஸ்கரனின் அழகான வசனங்களும், நாயகி ஈஷாவின் அழகு முகமும், அவரது செல்ல குறும்புகளும் தான் நம்மை ஆசுவாசப்படுத்துகின்றன.. லாஜிக் பார்க்காமல் படம் பார்க்க செல்பவர்களுக்கு இது ஒரு நல்ல படம் தான்.
Comments are closed.