
படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இது அறுவை, தேறாது என ஆன்லைனில் ஸ்டேட்டஸ் போடுபவர்கள் விமர்சிக்கத்தான் லாயக்கு, சாதாரண ரசிகர்கள் விரும்புகிற மாதிரி.. அவ்வளவு ஏன் அவர்கள் விரும்புகிற மாதிரி படத்தையே கூட அவர்களால் ஒருபோதும் எடுக்க முடியாது என்பதை மசாலா படம் எடுத்து சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் லக்ஸ்மன் குமார்.
மசாலா படமாக எடுத்து வெற்றிகளை அள்ளுகிறார் சினிமா தயாரிப்பாளரான வெங்கட். ஆன்லைன் கலாய்ப்பு கோஷ்டி ஒன்று அவரது படங்களை விமர்சித்து டார்ச்சர் பண்ணுகிறது. ஒருகட்டத்தில் அவர்களை அழைத்து முடிந்தால் உங்கள் பாணியில் கமர்ஷியலாக ஒரு கதை பண்ணிக்கொண்டு வாருங்கள், நான் தயாரிக்கிறேன் என சவால் விடுகிறார் வெங்கட். இளைஞர்களால் அப்படிப்பட்ட கதையை உருவாக்க முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.
இந்த இளைஞர்கள் ரியாலிட்டியாக சினிமா பண்ணவேண்டும் என்பதற்காக அவர்கள் தேடிப்பிடித்து பின் தொடரும் கதாபாத்திரங்களாக ரவுடி பாபி சிம்ஹா, மார்க்கெடிங் எக்ஸிகியூட்டிவ் சிவா, பணக்கார இளைஞன் க்ரிஷ் ஆகிய மூவரும் நடித்துள்ளார்கள். மூவருமே தங்கள் பாத்திரம் உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளார்கள், இவர்கள் மூவரையும் சந்தித்து இவர்களுடன் நட்பை ஏற்படுத்தி அவர்களது யதார்த்த வாழ்க்கையை இந்த நண்பர்கள் டீமுக்கு சொல்லும் கதாநாயகி சாந்தி தேவி கதாபாத்திரம் தான் ரொம்பவே முரண்படுகின்றது.
மசாலா படங்களை ஒழித்து ரியாலிடி சினிமா எடுக்கிறேன் என இந்த இளைஞர்கள் டீம் பேசுவதும், அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் சோதனை முறைகளும் தான் படம் என்றாலும் சாதாரண ரசிகன் வெகு கவனமாக பார்த்தால் கூட கதையோட்டத்தை புரிந்துகொள்வது சிரமம் தான். கதைக்காக யதார்த்த மனிதர்களை தேடிப்போவதைத்தான் ‘ஜிகர்தண்டா’விலேயே நாம் பார்த்தாச்சே.
கடைமட்ட ரசிகன் தன்னை மறந்து சினிமா மூலம் கனவிலேயே தன்னை ஒரு ஹீரோவாக நினைத்துக்கொள்ளும் சூழல் மாறும் வரை மசாலா படங்கள் எடுப்பதை நிறுத்த மாட்டேன் என சொல்லும் தயாரிப்பாளர் வெங்கட்ராமன் கதாபாத்திரம் மூலம் சினிமாவின் யதார்த்த நிலையை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் லக்ஸ்மன் குமார். ஆனால் சுற்றி வளைத்து அவர் சொல்லியுள்ள விதம் தான் படத்திற்கே பலவீனமாக அமைந்துள்ளது
Comments are closed.