கனடாவில் இருந்து இந்தியா வந்து கட்டுமான நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார் ஜீவன். வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் ஜீவன், லாயர் ரஞ்சித்தை நம்பி. தனது லீகல் அட்வைசராக நியமிகிறார். ரவுடியான நந்தா ஜீவனால் மனம் மாறி அவரது நிறுவனத்தின் மேனேஜராகிறார்.
ஒருகட்டத்தில் தனது கட்டுமான நிறுவனம் உருவாக்கிய பிளாட்டுகள் அனைத்தும் நிர்ணயித்த விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருப்பதும், சில நிலங்கள் மோசடியால் வாங்கப்பட்டிருப்பதும் பணம் கட்டிய சிலருக்கு அவர்கள் குறிப்பிட்ட நபர்களின் பெயரில் பத்திரம் முடிக்காமல் மோசடி நடந்திருப்பதும் இதற்கெல்லாம் காரணம் லாயர் ரஞ்சித் தான் என்பதும் ஜீவனுக்கு தெரியவருகிறது.
ஆனால் நிலைமை கைமீறிப்போய்விட, மேனேஜர் நந்தாவும் ஜீவனின் இன்னொரு விசுவாசி உதவியாளரும் ரஞ்சித்தின் தம்பியான ரவுடி ரிச்சர்டால் கொலை செய்யப்படுகிறார்கள்… ஜீவன் ஏமாற்று வழக்கில் சி.பி.ஐயால் கைது செய்யபடுகிறார். சி.பி.ஐயில் அதிகாரியாக உள்ள சரவணன் சுப்பையாக ரஞ்சித்தின் கையாளாக செயல்டுகிறார்.
ஜீவனின் மனைவி வித்யா இன்னொரு நேர்மையான சிபிஐ அதிகாரியான டி.சிவகுமாரின் உதவியை நாட, அவர் வழக்கை திறமையாக கையாண்டு ஜீவனை விடுவிக்கிறார்.. கூடவே சிபி.ஐயில் வேறொரு வழக்கில் சிக்கிய சமுத்திரக்கனியும் ஜீவனின் உதவியால் விடுதலையாகி, ஜீவனின் வலதுகரமாக மாறுகிறார்.. மீண்டும் வேறொரு கட்டுமான நிறுவனம் ஆரம்பிக்கும் ஜீவன், தன்னை இந்தநிலைக்கு ஆளாக்கிய தனது எதிரிகளை எப்படி வீழ்த்துகிறார் என்பதுதான் மீதிக்கதை.
கட்டுமான நிறுவனம், அதில் நடைபெறும் மோசடி, சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம் என முழுக்க முழுக்க கட்டுமான துறையை மையப்படுத்தி மட்டுமே கதை பின்னப்பட்டிருப்பது புதுசு. தொழிலதிபர் வேடத்தில் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜீவன்.. என்னதான் எல்லோரையும் நம்பினாலும், ஒரு தொழிலதிபர் இந்த அளவுக்கா வெகுளியாக இருப்பார்..? ஆனால் தயாரிப்பாளரின் உண்மை கதை என்பதால் நம்பத்தான் வேண்டியிருக்கிறது.
கதாநாயகி வித்யாவிற்கு குடும்ப பாங்கான களையான முகம். இடைவேளைக்குப்பின் அதிக காட்சிகளில் வரும் அவருக்கு, நன்றாக நடிக்கவும் வருவது ப்ளஸ்.. ரவுடியாக வரும் நந்தா சட்டென மனம் மாறுவது செயற்கையாக இருந்தாலும், அதன்பின் அவர் வரும் காட்சிகளும் ஜீவனுக்காக தனது உயிரை கொடுப்பதிலும் அவரது கேரக்டர் மேல் மரியாதை ஏற்படச்செய்து நம் மனதில் தங்கிவிடுகிறது..
லீகல் அட்வைசராக மாறி, நரியாக மாறி வில்லத்தனம் காட்டியுள்ளார் ரஞ்சித். அவரது தம்பியாக வரும் ரிச்சர்டின் அடியாள் முறுக்கும் ஒகே தான். ஜீவனின் மாமாவாக வரும் தம்பி ராமையாவின் காமெடி சில இடங்களில் மட்டுமே எடுபடுகிறது. கோவை சரளாவின் கேரக்டரை சுத்தமாக வேஸ்ட் செய்துள்ளார்கள்.
சிபி.ஐ அதிகாரியாக வரும் (தயாரிப்பாளர்) டி.சிவக்குமாரின் உருவத்திலும் நடிப்பிலும் கம்பீரம்.. அவர் வரும் காட்சிகள் எல்லாமே விறுவிறுப்புதான். சமுத்திரக்கனி என்றாலே சீரியஸான முகமும் அந்த கம்பீரமும் தான் நம் கண்முன்னே நிற்கும். ஆனால் இந்தமுறை காமெடி ஏரியாவுக்கு தாவ முயன்று தடுக்கி விழுந்திருக்கிறார்..
ரியல் எஸ்டேட் மோசடிகளையும், ஏமாற்றி, அடாவடி செய்து நிலத்தை பறிக்கும் கும்பல்களின் வேலையையும் வெளிச்சம் போட்டு காட்ட முயன்றுள்ளார் இயக்குனர் சூர்ய பிரகாஷ்.. சாதாரணமாக நகரும் முன்பாதி கதை, ஜீவனின் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவரின் புகாருக்குப்பின் சூடுபிடிப்பது உண்மை.. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் கவனமாக செதுக்கியிருந்தால் முழு விறுவிறுப்பான ஆக்சன் படமாக மாறியிருக்கும்.. இருந்தாலும் ஜீவனுக்கு ரீ-என்ட்ரி தரும் விதமாக ஓரளவு ஜீவன் கொடுத்துள்ளது இந்த அதிபர்.
Comments are closed.