’கர’ விமர்சனம்

16

நடிகர்கள் : தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ்.ரவிகுமார், சுராஜ் வெஞ்சமுடு, ஜெயராம், கருணாஸ், பிரித்வி பாண்டியராஜன்
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்
இயக்கம் : விக்னேஷ் ராஜா
தயாரிப்பு : ஐசரி கே.கணேஷ்

இளம் வயதில் வீட்டை விட்டு ஓடிப்போய் திருடனாக இருக்கும் தனுஷ், மமிதா பைஜுவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப் பிறகு திருடுவதை நிறுத்திவிட முடிவு செய்பவர், கடைசியாக திருடும் போது போலீஸில் சிக்கி தப்பிக்கிறார். ஆந்திராவுக்கு சென்று அங்கு ஒரு உணவகத்தில் வேலை செய்யும் தனுஷ், தன் மனைவி கஷ்ட்டப்படுவதால் சொந்தமாக உணவகம் வைக்க முடிவு செய்கிறார். அதற்காக பணம் திரட்ட தன் சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கு பல சிக்கல்களை எதிர்கொள்ளும் தனுஷ், மீண்டும் திருட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாகவும், உண்மைகளுக்கு நெருக்கமாகவும் சொல்வது தான் ‘கர’.

1990களில் நடக்கும் கதை. வங்கி கடன்களால் பாதிக்கப்படும் விவசாயிகளின் வலிகளை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் விக்னேஷ் ராஜா, திருடனாக இருக்கும் கரசாமி தன் ஊருக்கே சாமியாவது எப்படி என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் தனுஷ், தனது சிறப்பான நடிப்பின் மூலம் கரசாமி கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாக பதிய வைத்து விடுகிறார். அளவான நடிப்பின் மூலம் பல உணர்வுகளை மிக அழகாக வெளிக்காட்டி வரவேற்புப் பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜூவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், தன் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அவரது அழகை குறைக்கும் சாதாரண ஒப்பனையிலும் அழகாக தெரிபவர், தனுஷ் மீதான காதல் பார்வையில் பார்வையாளர்களை கிரங்க செய்பவர், அழும் காட்சிகளில் கலங்க வைத்து விடுகிறார்.

தனுஷின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டி வியக்க வைத்திருக்கிறார். அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீஜா ரவி, கிராமத்து அம்மாவாகவும், உறுதிமிக்க பெண்ணாகவும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

தனுஷின் மாமாவாக நடித்திருக்கும் கருணாஸ், வெள்ளந்தி கிராமத்து மனிதராக இருந்தாலும், அநீதிக்கெதிராகப் பொங்கும் காட்சிகளில் உயர்ந்து நிற்கிறார்.

தனுஷின் நண்பராக நடித்திருகும் பிரித்வி பாண்டியராஜன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சுராஜ் வெஞ்சரமுடு, வங்கி மேலாளராக நடித்திருக்கும் ஜெயராம் ஆகியோரது நடிப்பு கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், புழுதி படிந்த இராமநாதபுரம் மாவட்ட மண்ணை அப்படியே படமாக்கியிருப்பதோடு, கதாபாத்திரங்களை அந்த மண்ணின் மக்களாக காட்டியிருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கதைக்களத்திற்கு பலம் சேர்க்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.

கடன் என்ற பெயரில் மக்களிடம் கொள்ளையடிக்கும் வங்கிகளின் மோசடிகளையும், அதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் பற்றியும் பேசியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் ராஜா, விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் பரபரப்பான காட்சிகள் மூலம் படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை ஈர்த்து விடுகிறார்.

ரேட்டிங் 4/5

Comments are closed.