’ஒன்ஸ்மோர்’ விமர்சனம்

15

நடிகர்கள் : அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர், சோனா ஒலிக்கல், டிராவிட் செல்வம், அனுஷா பிரபு, ஜகபர், மோனிஷ் எலமாரன். வர்ணிகா வரத், பிலிப்சன் தாமஸ், அருண்குமார் மணி, சௌந்தர்யா மனோகரன்
ஒளிப்பதிவு : அரவிந்த் விஸ்வநாதன்
இசை : ஹேஷாம் அப்துல் வஹாப்
இயக்கம் : விக்னேஷ் ஸ்ரீகாந்த்
தயாரிப்பு : மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – யுவராஜ் கணேசன்

காதல் தோல்வியால் சோகமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாயகன் அர்ஜுன் தாஸை, சந்திக்கும் நாயகி அதிதி சங்கர், தான் உன் கல்லூரியின் ஜூனியர், என்று அறிமுகப்படுத்திக் கொள்வதோடு, சட்டென்று காதலிப்பதாக சொல்கிறார். முடிந்தால் என் வீட்டுக்கு பையன் கேட்டு வா..,என்று கூறி அர்ஜுன் தாஸ் அவரது காதலை நிராகிக்க, மறுநாளே பெற்றோருடன் அதிதி சங்கர், அர்ஜுன் தாஸ் வீட்டுக்கு செல்கிறார். இரு வீட்டாருக்கும் சம்மதம் என்றாலும், அர்ஜுன் தாஸுக்கு உடன்பாடு இல்லாததால், இருவரும் நட்பாக பழக, அதிதி சங்கரின் தீவிர முயற்சியினால் அர்ஜுன் தாஸ் மனதிலும் காதல் பிறக்கிறது. இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

நிச்சயதார்த்தத்தின் போது, அர்ஜுன் தாஸின் முன்னாள் காதலி போன் செய்து சந்திக்க வேண்டும், என்று சொல்கிறார். 8 வருடங்களுக்குப் பிறகு முன்னாள் காதலியை சந்திக்கும் அர்ஜுன் தாஸ், குழப்பமான மனநிலைக்கு செல்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது ? என்பதே படத்தின் மீதிக்கதை.

அர்ஜுன் தாஸ், வழக்கம் போல் இறுக்கமான முகத்தோடு வலம் வருவதோடு, சிரிக்க மறந்தவராக சோகமான முகத்தோடு நடித்திருக்கிறார். முதல் பாதியில் கதாபாத்திரத்திற்கு ஏற்ப விரக்தியுடன் காணப்படும் அர்ஜுன் தாஸ், இரண்டாம் பாதியில் ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்தாலும், அங்கேயும் அவர் முகத்தில் அமைதியும், சோகமும் தான் தாண்டவமாடுகிறது.

நாயகி அதிதி சங்கர் தனது துடிப்பான நடிப்பு மூலம் படத்தை சற்று தாங்கிப் பிடித்திருக்கிறார். நிராகரிப்புகளை மிக சாதாரணமாக எடுத்துக் கொண்டு நாயகனை விரட்டி விரட்டி காதலிக்கும் கதாபாத்திரத்தை மிக சாதாரணமாக கையாண்டிருக்கும் அதிதி சங்கர், தனது இயல்பான நடிப்பு மற்றும் உடல்மொழி மூலம் கதாபாத்திரத்திற்கும், படத்திற்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை சோனா ஒலிக்கலுக்கு பெரிய வேலை ஏதும் இல்லை. அவர் எதற்காக அர்ஜுன் தாஸை காதலித்தார், எதற்காக பிரிந்தார், மீண்டும் எதற்காக வந்தார், ஆகியவற்றுக்கு திரைக்கதையில் அழுத்தமான காரணங்கள் இல்லாததால், அவரும் அவரது கதாபாத்திரமும் படத்துடன் ஒட்டாமல் பயணிக்கின்றனர்.

டிராவிட் செல்வம், அனுஷா பிரபு, ஜகபர், மோனிஷ் எலமாரன், வர்ணிகா வரத், அருண்குமார் மணி, செளந்தர்யா மனோகரன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு எளிமையாக இருப்பதோடு, நாயகனின் சோகமான முகத்தைப் போலவே முழுப்படத்தையும் பொலிவற்றதாக காட்சிப்படுத்தியிருக்கிறது. ஹேஷாம் அப்துல் வஹாப்-ன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ரகங்கள். தொய்வாக நகரும் திரைக்கதையால் சோர்வடைந்த பார்வையாளர்களுக்கு பாடல்கள் உற்சாகமூட்டும் விதத்திலும், பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டும் விதத்திலும் பயணித்திருக்கிறது. முதல் பாதியில் நாயகியின் காதல், இரண்டாம் பாதியில் நாயகனின் காதல் என்று நகரும் கதையை எந்தவிதமான சுவாரஸ்யமும், மனதை தொடும் காதல் உணர்வுகளும் இல்லாமல் காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் நாஷ்.

முக்கோண காதல் கதையை, நாயகியின் பார்வையில் சொல்லியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த், முதல் பாதியில் நாயகியின் காதல், இரண்டாம் பாதியில் நாயகனின் காதல், என இரண்டு காதல்களை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருந்தாலும், முதல் பாதி மட்டுமே அவருக்கு பலன் கொடுத்திருக்கிறது. இரண்டாம் பாதியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ரேட்டிங் 3/5

Comments are closed.