நடிகர்கள் : நயன்தாரா, கவின், ராதிகா சரத்குமார், பாக்யராஜ்.கே, பிரபு, அம்ருதா சீனிவாசன், விடிவி கணேஷ், ஃபெப்சி விஜயன், ரெஞ்சி பணிக்கர், சத்யன், ஆதித்ய கதிர், குரேஷி, காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி
இசை – ஜென் மார்ட்டின்
ஒளிப்பதிவு – ராஜேஷ் சுக்லா
இயக்கம் : விஷ்ணு எடவன்
தயாரிப்பு : செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, ரவுடி பிக்சர்ஸ் & Z ஸ்டுடியோஸ் – எஸ்.எஸ்.லலித் குமார், விக்னேஷ் சிவன், நயன்தாரா, உமேஷ் குமார் பன்சால்
முதல் முறையாக கவின் – நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கும் ‘ஹை’ அனைவரது மனங்களையும் கவர்கிறதா? , திரை விமர்சனத்தை பார்ப்போம்.
காதலித்து திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் கவின், தனது முறைப் பெண் காவியா அறிவுமணியை காதலிக்கிறார். ஆனால், அவரது காதலை ஏற்க மறுக்கும் காவியா, காதல் உனக்கு செட்டாகாது என்று சொல்லி விடுகிறார். மகனின் நிலை அறிந்து அவரது பெற்றோர் திருமணத்திற்கு பெண் பார்க்கிறார்கள். ஆனால், காதல் திருமணம் தான் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கவின், வீட்டை விட்டு ஓடி விடுகிறார்.
அம்மா முகத்தை பார்க்காத, அப்பாவின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் வளரும் நாயகி நயன்தாரா, காதல் மற்றும் திருமணம் மீது நம்பிக்கையில்லாமல் இருக்கிறார். அவரது குடும்பத்தார் அவருக்கு திடிரென்று திருமண ஏற்பாடு செய்ய, விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடி விடுகிறார்.
வீட்டை விட்டு ஓடி வந்த நயன்தாராவும், கவினும் சென்னையில் சந்தித்துக் கொள்கிறார்கள். நட்பாக பழகுகிறார்கள். கவின், நயன்தாராவை காதலிக்க தொடங்குகிறார். ஆனால், நயன்தாராவுக்கு காதல் மற்றும் கல்யாணம் மீது நம்பிக்கை இல்லாததை தெரிந்துக் கொண்டு தன் காதலை மறைத்து விடுகிறார்.
இந்த நிலையில், வீட்டை விட்டு ஓடி வந்த இருவரும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவர்களது பெற்றோர் வந்து விடுகிறார்கள். அவர்களுடன் சென்றால் மீண்டும் திருமணம் செய்து வைத்து விடுவார்கள், என்ற அச்சத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடந்து விட்டதாகவும், அவர் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கவின் பொய் சொல்கிறார். அந்த பொய்யால், இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தாரும் முடிவு செய்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன் மீது நயன்தாராவுக்கு காதல் வர வைக்க முயற்சிக்கும் கவின் அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
காதல் மீதான தன் ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் தன் நடிப்பில் மிக சிறப்பாக பிரதிபலித்து மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார் நாயகன் கவின். கொங்கு தமிழ் பேசும் கோவை இளைஞராக அளவாகவும், இயல்பாகவும் நடித்திருக்கும் கவின், ஒன்சைடு லவ்வின் சுகத்தையும், வலியையும் தன் நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கொங்கு மண்டல கிராமத்து பெண் கதாபாத்திரம் என்றாலும் தனது வழக்கமான பாணியிலான நடிப்பையும், வசன உச்சரிப்பையும் வெளிப்படுத்தியிருக்கும் நயன்தாரா, மாடர்ன் உடை மூலம் கிராமத்து அடையாளமே தெரியாத வகையில் பயணித்திருக்கிறார். படம் முழுவதும் பளிச்சென்று இருக்கும் அவரது திரை இருப்பு மற்றும் முதிர்ச்சியான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
கவினின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, அப்பாவாக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் பிரபு, சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி ஆகியோரது காட்சிகள் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. குறிப்பாக சத்யனின் சாதாரண மைண்ட் வாய்ஸ் கூட திரையரங்கமே அதிரும்படியாக சிரிக்க வைக்கிறது. விடிவி கணேஷ், ஃபெப்சி விஜயன், காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி, அம்ருதா சீனிவாசன் ஆகியோரின் திரை இருப்பு சிறியது என்றாலும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, நயன்தாராவை பளிச்சென்று காட்டியிருக்கிறார். ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் கொண்டாட்ட ரகமாகவும், பின்னணி இசை காதல் உணர்வுகளை கடத்தும் விதமாகவும் பயணித்திருக்கிறது. இலகுவான கதையை, பார்வையாளர்கள் உள்ளத்தை தொடும் இதமான உணர்வுகள் போல் காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ்.
படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, எந்தவிதமான திருப்பங்களோ, எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பயணித்தாலும், கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் வடிவமைப்பு மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைத்து மகிழ்விக்கும் வித்தையை இயக்குநர் விஷ்ணு எடவன் மிக சிறப்பாக செய்திருக்கிறார்.
பழக்கப்பட்ட கதை, வழக்கமான குடும்ப பின்னணியிலான காட்சிகள் என்றாலும், குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு கலகலப்பான பொழுதுபோக்கு படமாக இந்த ‘ஹை’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்.
ரேட்டிங் 3.5/5
Comments are closed.