நடிகர்கள் : சண்முக பாண்டியன், சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், கல்கி, ராம்ஸ், விஜே ஐஸ்வர்யா
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியம்
இயக்கம் : பொன்ராம்
தயாரிப்பு : ஸ்டார் சினிமாஸ் – முகேஷ் டி.செல்லையா
வைகை அணை கட்டும் போது சுமார் 12 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனால், அந்த கிராம மக்கள் வேறு ஒரு இடத்திற்கு குடியமர்த்தப்படுகிறர்கள். ஆனால், அங்கு விவசாயம் செய்வதற்கான வசதிகள் இல்லாததால், அணையின் நீர் மட்டம் குறைந்து, அவர்களது நிலம் தெரியும் போது அவர்கள் அங்கு விவசாயம் செய்கிறார்கள். மீண்டும் அணை நிரம்பியதும் அவர்களது நிலம் தண்ணீரில் மூழ்கி விடும் போது, வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறார்கள். தங்கள் பிழைப்புக்காக சிலர் சில தவறான வேலைகளை செய்கிறார்கள். அப்படி செய்பவர்களுக்கு துணையாக நிற்கிறார் சரத்குமார். அவரும் அவ்வபோது சில தவறான செயல்களில் ஈடுபட்டாலும், அனைத்தும் ஊர் மக்களுக்காகவே என்பதால், அவரை தலைவராகவே ஊர் மக்கள் பார்க்கிறார்கள்.
இதற்கிடையே, இதே பிரச்சனையால் வாழ்வாதாரத்தை இழந்ததோடு, அதன் காரணமாக தனது பெற்றோரையும் இழந்த சண்முக பாண்டியன், சிறு வயதில் சரத்குமாருடன் வேலைக்கு சேர்ந்து அவரைப் போலவே தவறான செயல்களில் ஈடுபடுவதோடு, அளவுக்கு அதிகமான பணம் சம்பாதிப்பதை ஆசையாக வைத்துக் கொண்டு பயணிக்கிறார். இவர்களது இந்த தவறான பயணம், அவர்களுக்கு எத்தகைய சிக்கல்களை உருவாக்குகிறது, அதில் இருந்து மீண்டு, மீண்டும் விவசாயிகளாக வாழ்ந்தார்களா ? இல்லையா ? என்பது தான் ‘கொம்புசீவி’ படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியன், ஆக்ஷன் ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் இன்றி, காதல் மற்றும் காமெடி காட்சிகளிலும் ஸ்கோர் செய்யும் விதத்தில் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
தலைமுடி மற்றும் தாடி முழுவதும் நரைத்த ஒரு கெட்டப்பில் மாமனாக நடித்திருக்கும் சரத்குமார், நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது கதாபாத்திர பெயருக்கு பொருத்தமாக திரையில் கம்பீரமாக தோன்றுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை தார்னிகா, காவல்துறை அதிகாரியாக மிடுக்காகவும், எடுப்பாகவும் இருக்கிறார். புடவையில் கூடுதல் கவனம் ஈர்ப்பவர், கவர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் கிடைத்தால், ரசிகர்களை கிரங்கடித்து விடுவார் என்பது தெரிகிறது. நடிப்பு பரவாயில்லை.
காவலர்களாக நடித்திருக்கும் காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், கல்கி ராஜா ஆகியோர் பார்வையாளர்களை சிரிக்க வைக்க படாதபாடு படுகிறார்கள். சில இடங்களில் சிரிப்பு வந்தாலும் பல இடங்களில், அவர்களது காமெடி கடியாய் கடித்து கொள்ளுகிறது.
காவல்துறை அதிகாரியாக சிறிய வில்லத்தனம் காட்டி நடித்திருக்கும் சுஜித் சங்கர், சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் விஜே ஐஸ்வர்யா, ராம்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை எதிர்பார்த்த விதத்தில் இல்லை என்றாலும், குறை இல்லாமல் பயணித்திருக்கிறது.
பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவில் படம் குழுவதும் பளிச்சென்று கலர்புல்லாக இருக்கிறது. குறிப்பாக வைகை அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளாக காட்டப்படும் பகுதிகளை காட்சிப்படுத்திய விதம் அழகோ அழகு.
படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், வழக்கமான கமர்ஷியல் ஃபார்மட் திரைக்கதையாக இருந்தாலும், தன்னால் முடிந்தவரை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.
இயக்குநர் பொன்ராமின் வழக்கமான பாணியிலான திரைக்கதை என்றாலும், கதையோடு பயணிக்கும் அவரது இயல்பான காமெடி காட்சிகள் இதில் மிஸ்ஸிங்.
சண்முக பாண்டியனுக்காக திரைக்கதையில் ஆக்ஷனை தூக்கலாக எழுதியிருக்கும் இயக்குநர் பொன்ராம், அதை ரசிகர்கள் ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருப்பதோடு, சரத்குமாரின் கதாபாத்திரத்தையும் மிக நேர்த்தியாக கையாண்டு ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
ஹீரோ தவறு செய்தாலும் இறுதியில் அதற்கான நியாயத்தை சொல்லியிருக்கும் இயக்குநர் பொன்ராம், வைகை அணையால் பலன் அடைந்தவர்கள் போல், வாழ்வாதாரத்தையும் இழந்தவர்கள் இருக்கிறார்கள், என்பதை அழுத்தமாக பதிவு செய்வதில் தடுமாறியிருந்தாலும், அந்த கதைக்கருவை வைத்துக்கொண்டு ஒரு முழுமையான கமர்ஷியல் படம் கொடுப்படத்தில் மிக தெளிவாகவே இருந்திருக்கிறார்.
ரேட்டிங் 3/5
Comments are closed.