’29’ விமர்சனம்

10

நடிகர்கள் : விது, பிரீத்தி அஸ்ரானி, அவினாஸ், மாஸ்டர் மகேந்திரன், ஆதிரா பாண்டியலக்‌ஷ்மி, சிந்து ஷியாம்
இசை : ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு : மாதேஷ் மாணிக்கம்
இயக்கம் : ரத்னகுமார்
தயாரிப்பு : ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் – கார்த்திகேயன்.எஸ், லோகேஷ் கனகராஜ்

தனக்கென்று தனி அடையாளம் இல்லாமல் தவிக்கும் நாயகன் விது, வேலைக்காக சென்னைக்கு வருகிறார். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை என்றாலும் கிடைத்த வேலையை செய்துகொண்டு விரக்தியில் வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு நாயகி பிரீத்தி அஸ்ரானியின் அறிமுகம் புத்துணர்ச்சியை கொடுக்கிறது. அவரது நட்பு காதலாக மாற, அந்த காதலும், அழகான பெண்ணின் காதலன் என்பதும் தான் தன்னுடைய அடையாளம் என்று நம்புகிறார். ஆனால், பிரீத்தியோ காதலுக்கு உடலும், அன்பும் மட்டும் போதாது, வெற்றியும், லட்சியமும் தேவை என்பதை புரிய வைக்க முயற்சிக்கிறார்.

பிரீத்தி அஸ்ரானியின் மனதையும் அவரது எண்ணத்தையும் புரிந்துக் கொள்ளாமல் காதல் மட்டுமே வாழ்க்கை என்ற மனநிலையில் மட்டுமே மது இருக்க, அவரது மனநிலையை மாற்றுவதற்காக காதலையே முறித்துக்கொள்ள பிரீத்தி முடிவு செய்கிறார். அவரது இத்தகைய முடிவு விதுவின் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது, என்பது தான் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் விது, பக்கத்து வீட்டு பையன் போன்ற எளிமையான தோற்றம், காதல் உணர்வுகளையும், காதலி பிரிவால் ஏற்பட்ட மன வலியையும் தன் அளவான நடிப்பின் மூலம் எதார்த்தமாக வெளிப்படுத்தி நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்.

காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் ஆண்களே வல்லவர்கள் என்பதை மாற்றிக்காட்டும் வகையில் சிறப்பாக நடித்திருக்கும் நாயகி பிரீத்தி அஸ்ரானி, தன் காதல் உணர்வுகளையும், அதே காதலுக்கு எது தேவை என்பதை விளக்கும் முயற்சிகளிலும், பார்வையாளர்கள் மனதில் விஜியாக ஒட்டிக்கொள்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் அவினாஸ், காதல் தோல்வியில் புலம்புவது மட்டும் இன்றி அவ்வபோது இறுக்கமான சூழல்களை விலக்கி, பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறார்.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஆதிரா பாண்டியலக்‌ஷ்மி, நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் சிந்து ஷியாம் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக பயணித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு மறந்து போன கடற்கரை காதல் மற்றும் பேருந்து காதலை நினைவுப்படுத்துவதோடு, காதலர்கள் கடந்து செல்லும் பாதைகள், பயணித்த இடங்களையும் ரசிக்க வைத்திருக்கிறது.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் காதலின் கொண்டாட்டத்தையும், காதலின் வலியையும் பார்வையாளர்கள் மனதில் எளிதில் கடத்தி விடுகிறது. மெதுவாக பயணித்தாலும் காட்சிகளை ரசிக்க வைக்கும் விதத்தில் பின்னணி இசை உணர்வுப்பூர்வமாக பயணிக்கிறது.

காதலும், காதலர்களின் பயணம் மட்டுமே கதை என்றாலும், அதை தொய்வின்றி நகர்த்தி சென்றிருப்பதோடு, திரைக்கதை மற்றும் காட்சிகளில் இருக்கும் காதல் உணர்வுகளை படம் பார்ப்பவர்களிடத்தில் கடத்தும் விதமாகவும் காட்சிகளை சிறப்பாக தொகுத்திருக்கிறார் ஆர்.எஸ்.சதீஷ் குமார்.

என்ன தான் உருகி உருகி பல வருடங்கள் காதலித்தாலும், காதல் பயணத்தின் முடிவு என்பது சில நிமிட காமம் மட்டுமே, என்பதை கவித்துவத்தோடும், நாகரீகமான முறையிலும் சொல்லியிருக்கும் இயக்குநர் ரத்னகுமார், பெண்ணை நிலா, மலர், நட்சத்திரம் என்று வர்ணித்தாலும் கடைசியில் அவர் ஒரு பெண் மட்டுமே, ஆணை சிங்கம், காளை என்று வர்ணித்தாலும் அவர் ஒரு ஆண் மட்டுமே, இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் காதல், எதார்த்தமான வாழ்க்கையை விட பெரியது அல்ல, அதையும் தாண்டி இங்கு சாதிக்க நிறைய இருக்கிறது, என்பதை சொன்ன விதமும், அதற்கான காட்சிகளை கையாண்ட முறையும், காதலர்களை மட்டும் அல்ல காதலிக்காதவர்களையும் கைதட்ட வைக்கும்.

எளிய மக்களின் காதலை எதார்த்தமாக மட்டும் இன்றி இனிமையாகவும், வலிமையாகவும் சொல்லுவதில் ஏற்கனவே தன்னை நிரூபித்த இயக்குநர் ரத்னகுமார், இந்த முறை ஒருபடி மேலே சென்று காதல் கொண்டாட்டத்தோடு, அதை தாண்டிய வாழ்க்கை ஒன்று இருக்கிறது, என்ற அறிவுரையை அழகாகவும், ஆழமாகவும் சொல்லியிருக்கிறார்.

உண்மையான அன்பை பேசும் காதல் இறுதியில் முடிவது காமத்தில் தான், அந்த காமத்திற்கு தேவையான ஆண் – பெண் உடல் வெறும் சதை தான். எனவே, இவை மட்டுமே காதல் அல்ல, அதை தாண்டிய வாழ்க்கையும், அதில் சாதிப்பது தான் காதல், என்பதை அனைத்து தரப்பினரும் பாராட்டும்படி சொல்லியிருக்கும் ‘29’ படம் அனைத்து தரப்பு வயதினரையும் நிச்சயம் திரும்ப திரும்ப பார்க்க வைக்கும்.

ரேட்டிங் 4.2/5

Comments are closed.