நடிகர்கள் : உபேந்திரா, திரிஷா, சுதீப், சிவராஜ்குமார்,
இசை : ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு : ஏ.ஜெ.ஷெட்டி
இயக்கம் : ஆர்.சந்துரு
தயாரிப்பு : ஆனந்த் பண்டிட், ஆர்.சந்துரு, அலங்கார் பாண்டியன்
உபேந்திரா, சிவராஜ்குமார், சுதீப், ஸ்ரேயா ஆகியோரது நடிப்பில், ஆர்.சந்துரு இயக்கத்தில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியிருக்கும் ‘கப்ஜா’ எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
சுதந்திர வீரரின் மகனும், இந்திய விமானப்படை விமானியுமான நாயகன் உபேந்திரா, தனது அண்ணனின் கொடூரமான கொலைக்கு பழி தீர்க்க களத்தில் இறங்குகிறார். ஆனால், காலம் அவரை இந்தியாவே பார்த்து மிரளும் நிலழ் உலக தாதாவாக மாற்றிவிடுகிறது. அவர் அப்படி மாறியது ஏன்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? அவரை அடக்க இந்திய அரசு என்ன செய்தது? போன்ற கேள்விகளுக்கான விடையை பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகளோடு சொல்வதே ‘கப்ஜா’ படத்தின் கதை.
நாயகன் உபேந்திரா ஆர்கேஷ்வரன் என்ற வேடத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அமர்க்களப்படுத்தியிருக்கிறர். இந்த வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர், படத்தில் இடம்பெறும் அனைத்து ஆக்ஷன் காட்சிகளுக்கும் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். ஆனால், சில இடங்களில் ரஜினியின் உடல்மொழியோடு நடிக்கவும் செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரேயா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு களம் இறங்கியிருக்கிறார். ஒரு பாடல் மூலம் நடனத்தில் கவனம் ஈர்ப்பவர், குறையில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார்.
படத்தில் ஏகப்பட்ட வில்லன் கதாபாத்திரங்கள் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கதையில் கொடுக்கப்படும் பில்டப்புகளுக்கு ஏற்றபடி இருப்பதோடு, மிரட்டலாகவும் இருக்கிறார்கள்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கிச்சா சுதீப், சிவராஜ்குமார் வரும் காட்சிகள் கைதட்டல் பெறுகிறது.
ஒளிப்பதிவாளர் ஏ.ஜே.ஷெட்டி காட்சிகளை பிரமாண்டமாக கட்ட மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். எது செட், எது கிராபிக்ஸ் என்று தெரியாதவாறு காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ‘கே.ஜி.எப்’ படத்திற்கு பயன்படுத்திய அதே பாணியை இந்த படத்திலும் பயன்படுத்தியிருப்பதால் பின்னணி இசை கவனம் ஈர்க்கவில்லை. “நடராஜா…” பாடல் மட்டும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது.
படத்தொகுப்பாளர் எஸ்.ரெட்டி, படத்தில் இருக்கும் குறைகளை முடிந்தவரை மறைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அதையும் தாண்டி சில காட்சிகள் குழப்பத்தையும், சலிப்படையும் ஏற்படுத்துகிறது.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஆர்.சந்துரு ‘கே.ஜி.எப்’ படத்தின் பாதிப்பால் தான் இப்படி ஒரு படத்தை எழுதி இயக்கியதாக சொல்லியிருந்தார். ஆனால், அவருடைய ஒவ்வொரு நரம்பிலும் கே.ஜி.எப் படத்தின் பாதிப்பு இருப்பதை படத்தின் அனைத்து காட்சிகளும், அதை வடிவமைத்த விதமும் நிரூபிக்கிறது.
படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் யார்? என்பது சரியாக புரியாமல் இருப்பதோடு, அவர்கள் கதையில் இருந்து விலகியிருப்பது படத்திற்கு சற்று தொய்வை கொடுக்கிறது.
காட்சிகள் வடிவமைக்கப்பட்ட விதம் மற்றும் அதை பிரமாண்டமாக காட்டியது உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாக படம் ரசிக்க வைப்பதோடு, காட்சிக்கு காட்சி எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.
ரேட்டிங் 3.5/5
Comments are closed.