புதிய படத்தை ஆரம்பிக்கும் இயக்குனர்கள் முதலில் பயப்படுவது படத்தின் டைட்டிலை வெளியே சொல்வதற்குத்தான். ஏன் படத்திற்கு விளம்பரம் தானே. சொன்னால் என்ன என்று நீங்கள் நினைக்கலாம். உதாரணமாக விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு போட்டியாக ‘கள்ளத்துப்பாக்கி’ என ஒருவர் தன் படத்திற்கு பெயர் வைத்ததோடு விஜய்யின் படத்தலைப்பை மாற்றும்படி கோர்ட்டுக்கும் போய்விட்டார். ஒருவழியாக ‘துப்பாக்கி’ என்ற பெயரிலேயே படம் வெளியாகி வெற்றியும் பெற்றது.
அதே மாதிரி தான் ‘தலைவா’ பட டைட்டில் விவகாரமும். முதலில் தலைவன் என பெயர் வைக்க, எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது(எம்.ஜி.ஆர் நடித்த படத்தின் பெயர் தான் ‘தலைவன்’). பின்னர் ‘தலைவா’ என மாற்ற அந்த டைட்டிலும் என்னுடையது என ஒரு மகானுபாவன் போர்க்கொடி தூக்கினார். ஆனாலும் ‘தலைவா’ டைட்டிலை கைப்பற்றியது விஜய்&விஜய் அன் கோ.
இப்போது லேட்டஸ்ட் நிலவரத்துக்கு வருவோம். அடுத்த மாதம் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்தப்படத்தின் தலைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் படத்திற்கு ‘வாள்’ என பெயர் வைத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. போன படத்திற்கு ‘துப்பாக்கி’. இந்தப்படத்திற்கு ‘வாள்’… கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் யாராவது சில உப்புமா கம்பெனிகள் நான் என் படத்திற்கு ‘போர்வாள்’ என பெயர் வைத்திருக்கிறேன் என்றோ ‘குறுவாள்’ என பெயர் வைத்திருக்கிறேன் என்றோ கிளம்பி வருவார்களோ என்கிற பயமும் நமக்கு எழாமல் இல்லை. இந்த டைட்டிலை வைத்து அட்ராசிட்டி பண்ணி பப்ளிசிட்டி தேடுறவங்களுக்கு ஏதாவது நூதன தண்டனை கொடுத்தால் என்ன?