நட்சத்திரங்களின் ‘அந்த நாள் ஞாபகம்’

95

ஒரு கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்த மாணவர்கள் பத்து, இருபது வருடங்கள் கழித்து தங்களுடன் படித்த நண்பர்களை எல்லாம் ஒருங்கிணைத்து மீண்டும் ஒன்று சேரும் தருணம் இருக்கிறதே, அதனால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

மாணவர்களுக்கே அப்படி என்றால் ஒரு காலத்தில் பிரபலங்களாக ஜோடி சேர்ந்து நடித்து திரையுலகையே கலக்கிய நட்சத்திரங்கள் மீண்டும் ஒன்றுகூடி சந்தித்துக்கொண்டால் சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும். அப்படி ஒரு நிகழ்வுதான் சமீபத்தில் சூப்பர்ஸ்டார் தலைமையில் 80களில் அனைத்து மொழிகளிலும் கோலோச்சிய நட்சத்திரங்கள் ஒன்று கூடியதும்.

இவர்கள் வருடம் தோறும் ஒருநாள் ஒன்றாக கூடி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 2009–ல் இவர்களின் முதல் சந்திப்பு நடந்தது. நடிகைகள் லிசியும், சுகாசினியும் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள். அப்போது முதல் ஒவ்வொரு வருடமும் இந்த குதூகல சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இந்த வருடத்துக்கான சந்திப்பு நேற்று முன்தினம் இரவு சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை அருகில் உள்ள மலையாள நடிகர் மோகன்லால் பண்ணை வீட்டில் நடந்தது. அவரே விருந்துக்கான ஏற்பாடுகளையும் செய்து இருந்தார். நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராக காரில் வந்து இறங்க மோகன்லால் வரவேற்றார்.

ரஜினி, சிரஞ்சீவி, மோகன்லால், ஜெயராம், அர்ஜூன், மோகன், சுமன், ரமேஷ் அரவிந்த், அம்பரீஷ், நடிகைகள் ராதா, அம்பிகா, ரேவதி, நதியா, ரம்யாகிருஷ்ணன், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், சுமலதா, சுகாசினி, லிசி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நடிகர், நடிகைகள் மட்டுமே இதில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் கணவன், மனைவி, குழந்தைகளுக்கோ வெளியாட்களுக்கோ அனுமதி இல்லை. ஒவ்வொருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர். ரஜினி, சிரஞ்சீவியை நடுவில் உட்கார வைத்து ‘குரூப்’ போட்டோவும் எடுத்துக் கொண்டனர். விருந்து முடிந்ததும் அனைவரும் பரிசு பொருட்கள் கொடுத்து வழியனுப்பி வைக்கப்பட்டார்கள்.

[nggallery id=1046]

Leave A Reply

Your email address will not be published.