இன்று தமிழ் திரையுலகம் இருக்கும் சூழ்நிலையில் ஒரு படத்தை தயாரித்து அதை விநியோகம் செய்து லாபம் பார்ப்பது என்பது குதிரைக்கொம்புதான். ஆனால் திருப்பதி பிரதர்ஸும் யுடிவியும் கைகோர்த்துள்ள ‘இவன் வேற மாதிரி படம்’ திரையரங்குகளுக்கு வரும் முன்னரே அதன் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை சம்பாதித்துக் கொடுத்துள்ளது. அனைத்து ஏரியாக்களும் நல்ல விலைக்கு விற்றுள்ளனவாம்.
மேலும் வரும் 13ஆம் தேதி தமிழ்நாட்டில் 323, கர்நாடகாவில் 40, கேரளாவில் 36 மற்றும் வெளிநாடுகளில் 102 என கிட்டத்தட்ட 501 தியேட்டர்களில் இந்தப்படம் மெகா ரிலீஸ் செய்யப்படுகிறது.
இந்தப்படத்தின் முதல் காப்பியை பார்த்துவிட்டு வந்த கதாநாயகன் விக்ரம் பிரபு, “டைரக்டர் சரவணன் இந்தப்படத்தை எல்லாவித கமர்ஷியல் அம்சங்களுடன், படு வேகமாக நகரும் திரைக்கதையுடன் படமாக்கியிருக்கிறார். சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் சாதாரண மனிதன் எப்படி போராட்ட குணம் கொண்டவனாக மாறுகிறான் என்பதை, ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப்படத்தை இயக்கியுள்ளார்” என்று பாராட்டுப்பத்திரம் வாசிக்கிறார். இவன் வேற மாதிரித்தான் இருப்பான் போல தெரிகிறதே..!