சொன்னால் நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 40 படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. ஆனால், அத்தனை படங்களையும் ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்கள் இல்லை என்பதுதான் உண்மை நிலவரம். ஆனாலும், இது கடைசி மாதம் என்பதால் பெரிய மற்றும் சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்துவிட வேண்டுமென்று சிலர் தீயாய் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி, இந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 14 தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. நாளை ‘ஈகோ’, ‘கல்யாண சமையல் சாதம்’, ‘தகராறு’, வெள்ளை தேசத்தின் இதயம்’ ஆகிய நான்கு படங்கள் வெளியாகின்றன. ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தில் பிரசன்னா, லேகா வாஷிங்டனும், ‘தகராறு’ படத்தில் அருள்நிதியும் பூர்ணாவும் நடித்துள்ளனர்.
டிசம்பர்-13ல் விக்ரம்பிரபு நடித்துள்ள ‘இவன்வேற மாதிரி’, நித்யாமேனன் நடித்த ‘மாலினி 22 பாளையங்கோட்டை’, ஓவியா நடித்த ‘மதயானைக்கூட்டம்’ ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன. ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் ‘இவன் வேற மாதிரி’ படத்தை இயக்கி இருப்பதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஸ்ரீப்ரியா ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படத்தை இயக்கி உள்ளார். இது ஒரு மலையாளப் படத்தின் ரீமேக் ஆகும். ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பாளராக மாறியுள்ள ‘மதயானைக்கூட்டம்’ படத்தை ‘ஆடுகளம்’ படத்துக்கு வசனம் எழுதிய விக்ரம் சுகுமாரன் இயக்கி உள்ளார்.
டிசம்பர்-20ல் வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா நடித்த ‘பிரியாணி’, ஜீவா, த்ரிஷா, ஆண்ட்ரியா நடித்த ‘என்றென்றும் புன்னகை’ படங்கள் வெளியாகின்றன. இதேநாளில் சேரன் இயக்கிய ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’, பாலுமகேந்திரா இயக்கிய ‘தலைமுறைகள்’, மகேந்திரன் ஹீரோவாக நடித்த ‘விழா’ படங்களையும் சேர்த்து மொத்தம் ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
இந்தமாத இறுதியில் அதாவது டிசம்பர்-27ல் விஜய் சேதுபதி நடித்த ‘ரம்மி’, கஞ்சா கருப்பு தயாரிப்பில் மகேஷ் நடித்த ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின்றன. விஜய் சேதுபதியின் படத்துக்கான எதிர்பார்ப்பு உங்களுக்கே தெரியும். அதேபோல தொடர்ந்து கஞ்சா கருப்பு தயாரிப்பாளராக நீடிப்பதும் அவர் தயாரித்திருக்கும் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்துத்தான் அமையும்.
இந்தப்படங்கள் வெளியான நாளில் இருந்து பள்ளிகளுக்கு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ், நியூ இயர் என விடுமுறைக் கொண்டாட்டங்கள் தொடர்ந்து வருவதால் தியேட்டர்களில் கூட்டம் களைகட்ட வாய்ப்பு இருக்கிறது.
மேற்கூறிய பட்டியலில் சில படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை மாற்றி அமைக்கலாம். அதுகூட தியேட்டர் பற்றாக்குறை காரணமாகத்தான் இருக்கும். இன்னொரு பக்கம் இந்தப்படங்கள் எல்லாம் ஜனவரி 10ஆம் தேதிக்குள் தங்களது வசூலை அள்ளியாக வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது. காரணம் பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜில்லா’ அஜித்தின் ‘வீரம்’ இரண்டும் களத்தில் குதிக்கின்றன.
எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்சினிமா இருக்கிறது பார்த்தீர்களா?