விஜய் டி.வி.க்கும் சினிமாவுக்கும் அப்படியென்ன ஒரு ராசி இருக்கிறதென்று தெரியவில்லை. மற்ற எந்த சேனல்களையும் விட, விஜய் டி.வியில் இருந்து வெள்ளித்திரைக்கு கிளம்பி வருபவர்கள் மட்டும் வெற்றிக்கொடி கட்டுகிறார்கள். காமெடியில் நம்பர் ஒன்னாக வலம் வரும் சந்தானம், அவரைப் பின்தொடர்ந்து முன்னேறிவரும் ஜெகன், ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள சிவகார்த்திகேயன் என எல்லமே விஜய் டி.வி ஹீரோக்கள்தான்.
இப்போது அந்த வரிசையில் அடுத்ததாக எண்ட்ரி பாஸ் போட்டிருக்கும் ‘அது இது எது’ புகழ் மா.கா.பா ஆனந்த்தும் ஹீரோவாகி விட்டார். நகைச்சுவையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் டைமிங் காமெடி ஸ்பெஷலிஸ்ட்டான மா.கா.பா.வை இன்னொரு சிவகார்த்திகேயன் என்கிறது விஜய் டி.வி.ரசிகர் வட்டாரம். ‘அலிபாபா’ கிருஷ்ணா நடித்துவரும் ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் கிருஷ்ணாவின் தம்பியாக, இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கிறார் மா.கா.பா.
இதுதவிர ‘பஞ்சுமிட்டாய்’ என்ற படத்தின் மூலம் தனி ஹீரோவும் ஆகிவிட்டார் மா.கா.பா. நாளைய இயக்குனர் வரிசையில் இடம் பெற்ற ‘கலர்ஸ்’ என்ற குறும்படம்தான் பஞ்சுமிட்டாய் என்ற பெரும் படமாக வளர்கிறது. இந்தப்படத்தை எஸ்.பி.மோகன் என்பவர் டைரக்ட் செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார்.